தற்கொலை தாக்குதல்கள் குறித்து இலங்கை தெரிந்திருந்தும் தடுக்காதது ஏன் ?

மிகவும் இர­க­சி­ய­மான அந்த ஆவணம் அனைத்து விடயங்களையும் தெளிவாகக்குறிப்பிட்டிருந்தது: பெயர்கள்,முகவரிகள்,தொலை­பேசி இலக்­கங்கள் உட்­பட அனைத்து முக்­கிய விப­ரங்­க­ளையும் உள்ளடக்­கி­யி­ருந்­தது.

சந்­தேக நபர் ஒருவர் நள்­ளி­ரவில் தனது மனை­வியைச் சந்­திப்­பது குறித்தும் அதில் தெரிவிக்­கப்­பட்­டி­ருந்­தது. இலங்­கையில் உயிர்த்­த­ ஞா­யிறு தாக்­கு­தல்கள் இடம்­பெற்று 359 பேர் கொல்­லப்­ப­டு­வ­தற்கு முந்­தைய நாட்­களில் இலங்­கையின் பாதுகாப்புப் படை­யினர் அதிகம் அறி­யப்­ப­டாத தேசிய தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பின் சிறிய குழுவை உன்­னிப்­பாக கண்காணித்து வந்­தனர்.

இந்தக் குழு­வி­னரே சர்­வ­தேச உத­வி­களை பெற்று தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டனர் என பாது­காப்­புத் ­த­ரப்­பினர் தற்­போது தெரிவிக்கின்­றனர்.

இலங்­கையின் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு இந்தக் குழு ஆபத்தானது என்­பது தெரிந்திருந்­தது. குறிப்­பிட்ட அமைப்பின் தலை­வர்கள் எங்­கி­ருக்­கின்­றார்கள் என்ற விப­ரங்­களும் அவர்களிடமி­ருந்­தன.

தேசிய தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பு கத்­தோ­லிக்க தேவாலயங்கள் மீது தாக்­கு­தல்­களை மேற்­கொள்­ளத் திட்டமிட்டுள்­ளது என இந்­தி­யாவும் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது.

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்­புடன் தொடர்­பு­டைய தீவி­ர­வாத இஸ்­லா­மியக் குழுக் கள் ஆயு­தங்­களைச் சேக­ரித்து பதுக்­கி­ வைத்திருப்­பதும் ஜன­வ­ரி­ மா­தத்­தி­லேயே படை­யி­ன­ருக்கு தெரிந்தி­ருந்­தது. கொழும்பில் ஞாயிற்­றுக்­ கி­ழமை தாக்­கு­தல்கள் இடம்­பெற்ற சில மணி­நே­ரங்­களில் எவ்­வித சிர­ம­மு­மின்றி 24 சந்தே­க ­ந­பர்கள் கைது­ செய்­யப்­பட்­டமை குறிப்­பிட்ட குழு­வினர் எங்கு மறைந்­துள்­ளனர் என்­பது அதி­கா­ரி­க­ளுக்குத் தெரிந்­தி­ருந்­தது என்­ப­தையும் புலப்­ப­டுத்­தி­யுள்­ளது.

பாது­காப்பு படை­யி­ன­ருக்கு இவ்­வ­ளவு விட­யங்கள் தெரிந்திருந்தும் ஏன் அவர்கள் குண்­டு ­வெ­டிப்­புக்கு முன்­னரே தீவிர நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என்­பது தற்­போது மிகப்­பெரும் கேள்­வி­யாக எழுந்­துள்­ளது.

இது இலங்கை ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடை­யி­லான முறு­கலை மேலும் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த முறுகல் நிலை கார­ண­மாக பாது­காப்புப் படை­யி­ன­ரிடம் இவ்­வ­ளவு முக்­கி­ய­மான தக­வல்கள் இருப்­பதை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறிந்திருக்கவில்லை. இந்தக் குற்­றச்­சாட்­டுகள் கார­ண­மாக அரசாங்­கத்­திற்குள் புதிய நெருக்­க­டிகள் உரு­வா­கி­யுள்­ளன.

இலங்­கையின் அர­சி­யல் ­த­லை­வர்கள் மத்­தி­யி­லான கசப்­பான மோதல் பாரிய பாது­காப்புக் குறை­பா­டு­களை உரு­வாக்­கி­யுள்­ள­துடன்  உலகின் மிக மோச­மான பயங்­க­ர­வாதத் தாக்­குதல் இடம்பெறுவதற்குக் கார­ண­மாக அமைந்­துள்­ளது.

புத்­தரின் சிலையை சேதப்­ப­டுத்­தினார் என்ற சந்­தே­கத்தின் பேரில் தற்­கொ­லைக் ­குண்­டு­தா­ரி­யொ­ருவர் சில மாதங்­க­ளுக்கு முன்னர் கைது­செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்டார் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்ளார். கடு­மை­யான மத நம்­பிக்­கைகள் தீவி­ர­மா­கி­ வரும் பௌத்த பெரும்­பான்மை நாட்டில் புத்­தரின் சிலையை சேதப்­ப­டுத்­து­வது பதற்றத்தை உரு­வாக்­க­க்கூ­டிய ஒரு செய­லாகும்.

புல­னாய்வு எச்­ச­ரிக்­கைகள் கிடைத்த போதிலும் உரிய நடவடிக்கை­களை எடுக்­கா­த­மைக்­காக  பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­ப­தியை பல அமைச்­சர்கள் திங்­கட்­கி­ழமை கடு­மை­யாகச் சாடி­யுள்­ளனர்.

என்ன நடந்­தது என்­பது குறித்து நாங்கள் வெட்­கப்­ப­டு­கின்றோம் என அமைச்சர் ரவூப் ­ஹக்கீம் தெரிவித்­துள்ளார். தாக்­கு­தலை மேற்கொண்­ட­வர்­களின் பெயர் விப­ரங்கள் குறித்து தெரிந்திருந்தால் ஏன் அவர்­களைக் கைது­செய்­ய­வில்லை என அவர் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

உயிர்த்­த­ ஞா­யிறு தாக்­கு­தல்­களை பாது­காப்பு தரப்­பி­னரின் பாரிய தவறு என அவர் வர்­ணித்­துள்ளார். இலங்­கையின் பல அமைச்சர்கள் தற்­போது பொலிஸ்மா அதி­பரை பதவி வில­கு­மாறு வேண்­டுகோள் விடுத்­து­ வ­ரு­கின்­றனர்.

ஏனை­ய­வர்கள் உள்ளூர் அமைப்­பொன்­றினால் எவ்­வாறு இவ்வளவு தூரம் தனித்து செயற்­பட முடியும் எனக் கேள்வி எழுப்பி­யுள்­ளனர். இது சர்­வ­தேச வலை­ய­மைப்­பொன்றின் தாக்குதல். அவ்­வா­றான ஆத­ரவு இன்றி இந்தத் தாக்­குதல் வெற்றியளித்­தி­ராது என  அமைச்சர் ராஜி­த­ சே­னா­ரட்ன  தெரிவித்துள்ளார்.

குண்­டுத் ­தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு படை­யினர் ஏன்  தவறிவிட்டனர் என்ற கேள்­விக்கு திருப்­தி­க­ர­மான பதிலை வழங்குவ­தற்குஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தவ­றி­யுள்ளார்.

ஜனா­தி­ப­தியின் சிரேஷ்ட ஆலோ­சகர் சிரால் லக்­தி­லக பாது­காப்பு தரப்பில்  தவ­றுகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை எனக் குறிப்பிட்டார். அனை­வரும் தங்கள் பணியைச் செய்­துள்­ளனர் எனக் குறிப்­பிட்ட அவர், இவ்­வா­றான எச்­ச­ரிக்­கைகள் காலத்­துக்குக் காலம் வரு­வது வழமை. அமெரிக்­காவில் கூட இது இடம்­பெறும்  எனத் தெரிவித்­த­துடன் மக்­களை பதற்ற­ம­டை­யச்­ செய்ய எவரும் அமெரிக்­காவில் கூட முய­ல ­மாட்­டார்கள் என தெரிவித்­துள்ளார்.

எனினும் இந்தத் தாக்­கு­தல்கள் குறித்து விசா­ர­ணை­களை மேற்கொள்­வ­தற்கு ஜனா­தி­பதி உயர்­மட்­ட­க் கு­ழு­வொன்றை நியமித்­துள்ளார் என சிரால் லக்­தி­லக தெரிவித்தார்.

இதே­வேளை ஏப்­ரல் 11 ஆம் திகதி உயர் பொலிஸ் அதி­காரி ஒருவ­ரி­ட­மி­ருந்து தேசிய தௌஹீத் ஜமா அத் குறித்து வெளியான எச்ச­ரிக்­கையை முக்­கி­ய­ ந­பர்­களின் பாது­காப்­புக்கு பொறுப்­பாக உள்ள  பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு மாத்­திரம் அனுப்­பி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இதன் கார­ண­மா­கவே என்ன தவறு நடந்தது என்­பதை அறி­வ­தற்­காக ஜனா­தி­பதி விசா­ரணைக் குழுவை நிய­மித்­துள்ளார் எனவும் சிரால் லக்­தி­லக தெரிவி­த் தார்.

இந்த எச்­ச­ரிக்­கைகள் ஏப்­ரல் மாதத்­துக்கு முன்­னரே உல­க நாடுகளிட­மி­ருந்து கிடைத்­துள்­ளன. இலங்­கையின் நெருங்­கிய சகா­வான இந்­தியா, பிராந்­தி­யத்தில் அல்­கைதா மற்றும் ஐ.எஸ். அமைப்பின் நட­வ­டிக்­கைகள் குறித்து உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­கின்­றது.

இந்­திய புல­னாய்வுத் துறை­யினர் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் முகமட் ஸஹ்­ரானின் நட­மாட்­டத்தை உன்னிப்­பாக அவ­தா­னித்து வந்­துள்­ளனர். ஸஹ்ரான் இந்தியாவுக்கும் இலங்­கைக்கும் அடிக்­கடி பயணம் செய்­துள்ளார்.

மேலும் அவர் இணையம் மூலம் குரோ­தத்­தைத் தூண்டும் கருத்துகளைப் பரப்­பி­வந்­துள்ளார். ஏப்ரல் நான்காம் திகதி இந்­தியா ஜக­ரானின் கைய­டக்­கத் ­தொ­லை­பேசி இலக்­கங்­களை இலங்­கைக்கு வழங்­கி­யுள்­ளது.

மேலும் ஸஹ்­ரானின் குழுவைச் சேர்ந்­த­வர்கள் கொழும்­பி­லுள்ள கத்­தோ­லிக்கத் தேவா­ல­யங்கள் மற்றும் இந்­திய தூத­ர­கத்தை இலக்கு­வைத்­துள்­ளனர் என எச்­ச­ரித்­தி­ருந்த இந்­தியா அவர்கள் குறித்த விப­ரங்­க­ளையும் இலங்­கைக்கு வழங்­கி­யுள்­ளது. இதனை பல இந்­திய, இலங்கை அதி­கா­ரிகள் உறு­தி­ செய்­துள்­ளனர்.

இதன் பின்னர் இலங்­கையின் பாது­காப்புத் தரப்­பினர் குறிப்­பிட்ட முக­வ­ரி­களில் உள்­ள­வர்­களை கண்­கா­ணிக்கத் தொடங்­கி­யுள்­ளனர்.

ஏப்­ரல் 11 ஆம் திகதி இர­க­சிய ஆவணம் ஸஹ்­ரானின் சகோ­தரர் யார் என்­பது உட்­பட முக்­கிய துல்­லி­ய­மான தக­வல்­களைக் கொண்டி­ருந்­தது.

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்­பிற்கு உறுப்­பி­னர்­களைச் சேர்ப்பதில் ஸஹ்­ரானின் சகோ­தரர் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டி­ருந்தார் என அந்த ஆவ­ணத்தில் தெரிவிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் அவர் நள்­ளிரவில் 2 அல்­லது 3 மணிக்கு தனது குடும்­பத்­த­வர்­களைச் சந்திப்பார் எனவும் அந்த ஆவணம் தெரிவித்­தி­ருந்­தது.

மேலும் துல்­லி­ய­மான முக­வ­ரிகள், வீட்டு இலக்­கங்கள், தொலைபேசி இலக்­கங்கள் போன்­ற­வற்­றையும் அந்த ஆவணம் கொண்­டி­ருந்­தது. எனினும் இலங்கை ஜனா­தி­ப­திக்கும் பிரதமருக்கும் இடை­யி­லான அர­சியல் முறுகல் நிலை கார­ண­மாக இலங்கை ஜனா­தி­பதி பாது­காப்பு தொடர்­பான முக்­கிய கூட்டங்களுக்கு பிர­த­மரை அழைப்­பதைத் தவிர்த்­துள்ளார்.

இதன் கார­ண­மாக தற்­கொலை குண்­டு­த் தாக்­கு­தல்கள் இடம்பெறலாம் என்ற தக­வலை பிர­தமர் அலு­வ­லகம் அறிந்துகொள்­ள­ மு­டி­யாத நிலை காணப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட புல­னாய்வுத் தக­வல்கள் உரிய விதத்தில் கையாளப்பட்­டி­ருந்தால் தாக்­கு­தலை தவிர்த்­தி­ருக்­க­லாமா என்­பது தெளிவற்­ற­தாக காணப்­ப­டு­கின்­றது. எனினும் தங்­க­ளுக்கு தக­வல் ­தெரிந்­தி­ருந்தால் பாது­காப்பை அதி­க­ரித்­தி­ருப்போம் எனப் பிர­த­மரும் அமைச்­சர்­களும் தெரிவித்­துள்­ளனர். தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு, முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தலின் பின்னர் 2015 இல் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. தென்­னா­சி­யாவின் ஏனைய நாடு­களைப் போன்று மத­ ரீ­தி­யான வன்­மு­றைகள் இலங்­கையில் இடம்­பெ­றா­த­ போ­திலும் கடந்த சில வரு­டங்­களில் சில  பௌத்த மத­கு­ருமார் தீவி­ர­வா­தி­க­ளாகி தங்கள் ஆத­ர­வா­ளர்­களை முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்­களை மேற்­கொள்­ளு­மாறு தூண்­டி­யுள்­ளனர். இலங்­கையின் பாது­காப்புப் படை­யினர் இதனை அலட்­சியம் செய்­ததால் பௌத்த மத­கு­ருமார் கும்பல் சட்­டத்தின் பிடி­யி­லி­ருந்து விதி­வி­லக்­கப்­பட்ட நிலையில் செயற்­பட்­டுள்­ளது. தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு நீண்ட நாட்­க­ளாக கண்­கா­ணிப்பில் உள்­ள­தாக ஏப்­ரல் 11ஆம் திகதி புல­னாய்வுத் தகவல் தெரிவித்­துள்­ளது.

புத்­தரின் சிலை­களைச் சேதப்­ப­டுத்­து­வதன் மூலம் பௌத்த, முஸ்லிம் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்த முயல்­வ­தாக இந்த அமைப்பின் மீது  பாது­காப்பு தரப்­பினர் குற்­றம் ­சாட்­டி­யுள்­ளனர்.

கடந்த ஜன­வரி மாத­ம­ளவில் இந்த அமைப்பு  மிகுந்த ஆபத்­தா­ன­தாக வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது  என்­ப­தற்­கான ஆதா­ரங்கள் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்குக் கிடைத்­துள்­ளன. புத்தர் சிலை உடைக்­கப்­பட்­டமை குறித்த விசா­ர­ணை­களின் மூலம் இலங்­கையின் வட­மேற்குப் பகு­தியிலுள்ள தென்­னந்தோப்பொன்றில் வெடி­ம­ருந்­துகள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தமை தெரிய­ வந்­தது. பாது­காப்புத் தரப்­பினர் 100 கிலோ வெடி­ம­ருந்­துகள்,  வெடிக்­க­ வைப்­ப­தற்­கான பொருட்கள் ஆகி­ய­வற்றைக் கைப்­பற்­றினர். குறிப்பிட்ட பகுதியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்குரியவை என  இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்து வருகின்ற போதிலும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப் பால் தனித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டிருக்க முடியாது என  பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை எந்த எச்சரிக்கையும் எந்த இலக்கிற்கும் தெரியப்படுத்தப்படாதமை தற்போது தெளிவாகியுள்ளது. இலங்கையின் முன்னணி ஹோட்டல்களின் முகாமை யாளர் களும் பணியாளர்களும் தங்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தியத் தூதரகத்துக்கு அருகிலுள்ள கோல்பேஸ் ஹோட்டலின் முகாமையாளர்களும் இதனைத் தெரிவித்துள்ளனர். இந்த ஹோட் டலுக்கு சிரேஷ்ட அதிகாரிகளும் தூதர கங்களைச் சேர்ந்தவர்களும் செல்வது வழமை. எவரும் எங்களுக்கு எதனையும் தெரிவிக்க வில்லை எனத் தெரிவிக்கின்றார் கோல்பேஸ் ஹோட்டலில் பணியாற்றும் சௌபி ராஸ் நவாஸ். இலங்கை அதிகாரிகள் ஸஹ்ரான் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை எனத் தெரிவிக்கின்றனர். அதேவேளை இந்திய அதிகாரிகள் அவர்  இலங்கையின் கிழக்கில் மறைந்திருக்கலாம் என்கின்றனர்.

நியுயோர்க் டைம்ஸ் தமிழில் அ.ரஜீபன்   – Virakesari

Share:

Author: theneeweb