இலங்கை குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பெண்கள் உள்பட 6 பேரின் படங்கள் வெளியீடு


இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களின் புகைப்படங்களை போலீசார் இன்று வெளியிட்டனர்.

குறித்த சந்தேகநபர்களை அடையாளம் காணும் நோக்கிலேயே இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகளின் ஊடாக இந்த சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு
மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்லா, பாஃதீமா லதீஃபா

 

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு
மொஹமட் இவுஹயிம் ஷாயிட் அப்துல்லா, புலஸ்தினி ராஜேந்திரன் என்றழைக்கப்படும் சாரா 

இந்த சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக 071 8501771, 011 2422176 மற்றும் 011 2395605 ஆகிய மூன்று தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

”பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்”

பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கும், பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்க அனைத்து கட்சித் தவைலர்களும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கூடிய அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர், அனைத்து கட்சித் தலைவர்கள் இன்றைய தினம் முதல் தடவையாக கூடி, விடயங்களை ஆராய்ந்திருந்தார்கள்.

ஒன்றிணைந்த பாதுகாப்பு நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு ஆரம்பிக்கப்படும் ஒன்றிணைந்த பாதுகாப்பு நிலையத்தின் ஊடாக, அனைத்து பாதுகாப்பு செயற்பாடுகளும் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ளுமாறு அனைத்து கட்சித் தலைவர்களும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை வைத்து, அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன்போது கருத்துக்களை தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தவைவர் மஹிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அனைவரும் கலந்துக் கொண்டனர்.

B.B.C

Share:

Author: theneeweb