மருத்துவத்துறையின் மாபியாக் கலாச்சாரம் (2)

  • கருணாகரன்  —

நாடுமுழுவதிலும் நடைமுறையில் உள்ள பகிரங்கமான சங்கதி மருத்துவத்துறையில் நிலவும் மாபியா பிஸினஸ். இதைப்பற்றி எல்லோருக்குமே தெரியும். ஆனால் யாருமே இதுப்பற்றிப் பேசுவதில்லை. அப்படி யாரும் பேச முற்பட்டால் மருத்துவர்கள் பழிக்குப் பழியாகச் சாதிப்பர் என்ற அச்சம் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு.

அரசு இதைக்குறித்து நடவடிக்கை எடுக்க முற்பட்டால், மருத்துவர்களுடைய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கும். மருத்துவர்கள் பணிமறுப்புப் போராட்டத்தில் குதித்தால் அதன் பாதிப்பு நேரடியாக அரசையும் மக்களையும் பாதிக்கும். இதைத் தடுப்பதற்கு வழியே இல்லை என்று அரசு அஞ்சுகிறது. மக்களும்தான்.

ஆனால், அத்தியாவசிய சேவைகள் என்ற அடிப்படையில் மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளை அரசு பிரகடனப்படுத்தி, அந்தத்துறைசார்ந்த ஊழியர்களின் போராட்டங்களுக்குத் தடைச்சுவரை எழுப்பிய அரசினால் மருத்துவத்துறையை அத்தியாவசிய சேவைகளாகக் கொள்ள முடியாதிருப்பது ஏன்?

தனியார் மருத்துவத்துறைக்கும் அரசியல் தரப்புகளுக்குமிடையில் உள்ள கள்ள உறவே இந்தப் பின்னடிப்புக்காரணம் என்றொரு வாதம் மக்களிடம் உண்டு.

எனவே இதற்குள் அலையடித்துக் கொண்டிருக்கும் உண்மை மிகத் துயரமானது. .

இங்கேதான் நிபுணத்துவ அறிவைப் பெற்றவர்களின் மனப்பாங்கினை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. மக்களுடைய வரிப்பணத்தில் படித்த அறிவை மக்களுக்குப் பயன்படுத்தாமல் தங்களுடைய மிகை வருமானத்துக்காக அதைப் பயன்படுத்துவதை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது?

இலங்கையில் மருத்துவ சேவைத்துறைக்குரிய ஆளணி ஒப்பீட்டளவில் போதுமானது. ஆனால் பங்கீடுகளில் பிரச்சினைகள் உண்டு. இதனால் போதிய ஆளணி வசதியை எல்லா இடங்களும் பெற்று விடுவதில்லை. இது ஒரு பெரிய பிரச்சினை.

இதற்கு நல்லதொரு உதாரணம் வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றவுடன் அல்லது முதற்கட்ட அனுபவத்தைப் பெற்றவுடன் நாட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். அல்லது வடக்குக் கிழக்கை விட்டு வெளியேறி கொழும்பு உள்ளிட்ட பெரு நகரங்களை நோக்கி நகர்ந்து விடுகிறார்கள்.

இதையிட்ட குற்றவுணர்ச்சி பெரும்பாலானோருக்கும் இல்லை.

இதனால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காகத் தென்பகுதியிலிருந்து சிங்கள மருத்துவர்களே வடக்குக் கிழக்கிற்குச் செல்ல வேண்டியுள்ளது. இப்போது வடக்குக் கிழக்கில் உள்ள கணிசமான மருத்துவமனைகளில் சிங்கள மருத்துவர்களே உள்ளனர். (இதேபோல பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட வேறு பொறுப்பதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தென்பகுதியிலிருந்து வடக்குக் கிழக்கு நோக்கி வந்தால் எப்படியிருக்கும்?) இப்படியான சந்தர்ப்பத்தில் உரிய ஆளணியைப் பங்கீடு செய்வதில் நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் உண்டாகின்றன.

மற்றும்படி தொழில் ரீதியான சிறப்புத் தேர்ச்சியுடைய மருத்துவர்களும் தாதியர்களும் ஏனைய மருத்துவப் பணியாளர்களும் உண்டு. கூடுதல் விருத்தி, தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள், தாதியர்கள் (விசேட பயிற்சி வழங்கப்பட்டு) வடிகட்டி எடுப்பதற்கான நடைமுறை உண்டு என்பது சிறப்பு.

ஆனால், இவர்களுடைய சேவை மக்களுக்குத் திருப்திகரமான இருக்கின்றதா என்பது கேள்வியே. அதாவது மருத்து சேவைத்தரம் (Service Quality) எந்த அளவில் உள்ளது என்பது கேள்வியே.

நோயாளரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு மருத்துவரின் அணுகுமுறை, சிகிச்சையளிப்பு, கவனமெடுத்தல் போன்றன ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் உள்ளதா என்பதும் கேள்வியே. சில மருத்துவ மனைகளில் இவை ஓரளவுக்குத் திருப்திகரமாக இருந்தாலும் பொதுவாக ஒரு பின்னிலையே காணப்படுகிறது. ஆனால், இதே மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் நோயாளர்களோடு அணுகும் விதமும் ஒவ்வொரு நோயாளியுடனும் செலவிடும் நேரமும் கூடுதலாகும்.

எனவேதான் அரச சுகாதார சேவைத்துறையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டியுள்ளது என்பது மக்களுடைய பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது. அப்படியிருந்தால் மக்கள் தனியார் துறையை நாட வேண்டிய அவசியமில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மருத்துவத்துறை இப்போதுள்ள அளவுக்கு வளர்ச்சியடையவும் இல்லை. எடுத்ததெற்கெல்லாம் தனியார் மருத்துவத்துறையை நோக்கி மக்கள் ஓடுவதுமில்லை.

அப்படியென்றால் இவ்வளவு பெருந்தொகையானோர் தனியார் மருத்துவத்துறையை நோக்கிச் செல்வதற்கான காரணம் என்ன?

இந்த முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளில் அரச மருத்துவத்துறையில் ஏற்பட்ட சரிவும் தனியார் மருத்துவத்துறையில் ஏற்பட்ட அபரித வளர்ச்சியுமேயாகும். அதாவது தனியார் மருத்துவத்துறை என்பது காபரேட் நிறுவனங்களைப்போல பெரு வளர்ச்சியைக் கண்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் பிணவறைக்குச் செல்லும் வரையில் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. இதைப்போல அரச மருத்துவமனைகளில் சில சமயம், வார்த்தையால் கொலை செய்து உயிரோடு வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று நோயாளிகள் கூறுவதுண்டு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எலும்பு முறிவேற்பட்டு கொழும்பில் உள்ள பெரியாஸ்பத்திரியில் நண்பர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இடுப்பில் உள்ள எலும்பில்  உடைவு. அதற்கு வெளியிலிருந்தே எலும்பை எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். நண்பருக்கு அதிர்ச்சி. அந்த எலும்பின் விலை மூன்று லட்சம் ரூபாய். அரச மருத்துவமனையில் அதைப் பெற வேண்டும் என்றால் அதற்காகக் காத்திருக்க வேண்டும். ஆயிரம் வேலைகளை வீட்டில் வைத்துக்கொண்டிருப்பவருக்கு இதெல்லாம் சாத்தியமேயில்லை. அந்த நேரத்தில் வந்து ஒரு இளநிலை மருத்துவர் சொன்னார், நீங்கள் ஐயாவோட கதையுங்கோ. எப்படித்தான் பார்த்தாலும் உங்களுக்கு இடுப்பு எடுத்துப் பொருத்துவதற்குரிய எலும்பு வாறதுக்கு எப்பிடியும் ஒரு மாதம் செல்லும். அதுக்கிடையில வெளியில எலும்பை எடுத்துத்தந்தீர்கள் என்றால் சுலபம்” என்று.

நோயாளியின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு நிபந்தனை விதிப்பதால் அவர் என்னதான் செய்வது என.

இதற்கு ஒரு வகையில் அரச மருத்துவத்துறையில் காணப்படும் பலவீனங்களும் பாராமுகங்களுமே காரணமாகும். கூடவே அரச மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களே தனியார் மருத்துவத்துறையை நடத்துவது, பங்காளர்களாக இருப்பது அல்லது அங்கே மருத்துவம் செய்வது என்பதாகும்.

இதைத் தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்குச் சட்ட மூலங்களை உருவாக்குவதே ஒரே வழி என்கின்றனர் மக்கள். தனியார் மருத்துவத்துறையில் வேலை செய்வோர் அதைத் தாராளமாகச் செய்யலாம். அதைப்போல அரச மருத்துவத்துறையில் இருப்போர் அதைச் செவ்வனவே செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அரசு. ஆனால். அது அதற்குத் தயாரில்லை. காரணம் மருத்துவர்களுடன் மோத முடியாது என்பதேயாகும்.

மருத்துவர்களும் இந்தச் சமூகத்தின் பிரதிநிதிகளே. ஆகவே அவர்களுக்கு இந்தச் சமூகத்தின் ஏற்ற இறக்கங்களிலும் நன்மை தீமைகளிலும் பங்கும் பொறுப்பும் உண்டு. இதைப் புரிந்து கொண்டு தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் சேவையாற்றும் மருத்துவர்கள் ஏராளம்பேர் நாடுமுழுவதிலும் உள்ளனர். குறிப்பாக வன்னி யுத்தத்தின்போதும் சுனாமி அனர்த்தத்தின்போதும் நேற்று முன்தினம் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளின் போதும் மருத்துவர்களும் தாதியரும் ஏனைய மருத்துவப் பணியாளர்களும் ஆற்றிய பங்களிப்புகள் சாதாரணமானவை அல்ல. அது இந்த நாட்டின் சரித்திர முக்கியத்துவமும் மேன்மையும் உடையவை.

னால், இவ்வாறு சேவையாற்றுவோர் ஒரு புறமிருக்கவே இன்னொரு புறத்தில் ஒழுங்கீனங்கள் நடக்கின்றன. இதைக் கட்டுப்படுத்துவதுதான் பெரிய சிரமம்.

இதற்குக் காரணம் முன்னரே குறிப்பிட்டுள்ளதைப்போல தொழிற்சங்கங்களின் தலையீடுகளே. (ஆசிரிய தொழிற்சங்கங்களும் இதே தவறைச் செய்வதுண்டு). உண்மையில் தொழிற்சங்கங்கள் பொதுமக்களுக்கான சேவை குறித்த கவனத்தோடுதான் தமது உறுப்பினர்கள், தம்மைச் சேர்ந்தோரின் நலன்களைப் பற்றிப் பேச வேண்டும். அவ்வாறில்லாமல் தொழிற்சங்கங்கள் பலம் பெறுமானால் நிர்வாக ரீதியாக ஏற்படுத்தப்படும் விதிகள் தளர்வடையும். அது பொதுமக்களையே நேரடியாகப் பாதிக்கும்.

இது நீண்டகாலப் போக்கில் பாதிப்புகளை ஏற்படக்கூடிய வாய்ப்புகளை உண்டாக்கும். இதை நீக்க வேண்டுமானால் நோயாளர்களுடன் செலவிடப்படும் நேரமே நோயாளிகளை அதிகளவில் பாதுகாப்பதற்கு உதவும் என்ற உண்மையின் அடிப்படையில் சேவை முறையை நடைமுறைப்படுத்துவது அவசியம்.

இதில் முக்கியமானது நோயாளர்களைப் பார்வையிடுவதற்கான விடுதிச் சுற்று. விடுதிச் சுற்று என்பது ஒரு ரவுண்ட் அப்படியே எல்லா நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளைப் பார்த்து முடிப்பதோடு முடிவதில்லை. அல்லது ஜூனியர்களை வைத்துச் செய்வதும் அல்ல. அது விடுதியிலுள்ள நோயார்களைக் கண்காணிப்பது, அவர்களுடைய நோய்கள் தொடர்பாக அவர்களுடன் உரையாடுவது, சிகிச்சை ஒழுங்கைச் சரியாக மேற்கொள்வது, முன்னேற்றத்தை மதிப்பிடுவது என இது விரிந்து செல்லும்.

Share:

Author: theneeweb