20 தொடக்கம் 30 பேர் வரையிலானோர் சாய்ந்தமருது சம்பவத்தில் மரணித்திருக்க வேண்டும்

– கல்முனைப்பற்று மரண விசாரணை அதிகாரி இஸ்லாம் கூறுகிறார்
                     –
சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டு திட்ட கிராமத்துக்குள் கடந்த
வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புகள், பரஸ்பர
துப்பாக்கி சூடுகள் ஆகியவற்றில் குறைந்தது 20 தொடக்கம் 30 பேர் வரையானோர்
மரணித்து இருக்க வேண்டும் என்று கல்முனைப்பற்று மரண விசாரணை அதிகாரி
இப்ராஹிம் நஸ்ரூல் தெரிவித்தார்.
இவர் இன்று சனிக்கிழமை மதியம் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கிடந்த
உடலங்களை பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து கொண்டார். அதே போல வைத்தியசாலை
வட்டாரங்களுடன் தொடர்புபட்டு பேசி வைத்தியசாலைகளுக்கு கொண்டு வரப்பட்ட
உடலங்கள் தொடர்பான விபரங்களையும் தெரிந்து கொண்டார்.
இவரை அணுகி வினவியபோது இவர் தெரிவித்தவை வருமாறு:-
15 பேர் வரையானோர் இறந்திருப்பதாக சொல்லப்படுவது சரியான தகவலாக இல்லை,
குறைந்தது 20 தொடக்கம் 30 பேர் வரையானோர் இறந்திருக்க வேண்டும், 12
உடலங்களை நான் சம்பவ இடத்தில் நேரில் கண்டேன், நடுத்தர வயது பெண், 60
வயது மதிக்கப்பட்ட வயோதிப பெண், இரு சிறார்கள் ஆகியோரின் உடலங்கள்,
கூரைக்கு மேல் ஒரு ஆணின் உடலம், குண்டு பட்டு சல்லடையாகிய ஒரு ஆணின்
உடலம், வீட்டுக்கு வெளியில் ஆணின் பாதி உடலம் ஆகியன இவற்றுள் அடங்கும்.
 சில உடலங்கள் கருகி உரு குலைந்து காணப்பட்டன, சில கருகினாலும் உரு
குலையாமல் காணப்பட்டன. சில குற்றுடலுடன் காணப்பட்டன.  எந்த
தோற்றப்பாட்டில் இறந்தனரோ அப்படியே காணப்பட்டன, வீட்டில் ஏராளமான தசை
பிண்டங்கள் சிதறுண்டு கிடந்தன. இங்கு நான் கண்டவை தற்கொலை
குண்டுதாரிகளினதும், அவர்களின் குடும்பங்களினதும் உடலங்களாகத்தான் இருக்க
முடியும். ஏனென்றால் இவை இன்னும் அடையாளம் காணப்படவில்லை. யாரும் இவற்றை
பொறுப்பேற்கவில்லை. அடையாளம் கண்டு பொறுப்பேற்பதற்கு உறவினர்கள்
கிடையாது.
மோதல் இடம்பெற்றபோது கலவரப்பட்டு சிதறி ஓடியதில் சூடுகள் பட்டு
இறந்தவர்களின் உடலங்கள் முழுவதும் அம்பாறை வைத்தியசாலையில் உள்ளன என்று
அறிகின்றேன். மூவர் காயப்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும்
அறிகின்றேன்.
 இதே நேரம் பல கோடி ரூபாய் வரையிலான 5000 ரூபாய் தாள்கள் சம்பவ இடத்தில்
சிதறி கிடக்கவும் கண்டேன். அவற்றின் மொத்த பெறுமதி 46 கோடி ரூபாய் என்று
பொலிஸார் அவர்களுக்குள் பேசி கொண்டதை செவிமடுத்தேன். மத்திய வங்கியில்
இருந்து நேரடியாக பெற்று இருக்க புதிய 5000 ரூபாய் தாள்களையும்
கண்ணுற்றேன்.
Share:

Author: theneeweb