இலங்கை குண்டுவெடிப்பு: “விடுதலைப் புலிகளை வெல்ல இலகு வழிகள் பலனளிக்கவில்லை” – சரத் பொன்சேகா

பொறுமையுடன் செயற்பட்டால், பயங்கரவாத செயற்பாடுகளை இரண்டு வருடங்களில் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துடன் இன்று சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டுவர தாம் இலகு வழிகளை பின்பற்றிய போதிலும், அது வெற்றியளிக்கவில்லை என சுட்டிக்காட்டிய பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, முறையான திட்டத்தின் மூலமே அதனை வெற்றிக் கொண்டதாகவும் நினைவூட்டினார்.

இதன்படி, இலங்கையில் தற்போது நிலைக்கொண்டுள்ள பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர தாம் அவ்வாறான திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதேவேளை, பயங்கரவாதத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் கிடையாது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி: பாதுகாப்பு செயலாளர் பதவி தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

புதில்: பாதுகாப்பு செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

கேள்வி: நீங்கள் அந்த பதவியை ஏற்பீர்களா?

புதில்: நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, அதன் பின்னர் அமைச்சராக இருந்த எனக்கு மீண்டும் அந்த இடத்திற்கு செல்ல முடியாது.

கேள்வி: அவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?

புதில்: அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டால், அதனை நான் நிராகரிப்பேன். செயலாளர் பதவிக்கு செல்ல வேண்டிய தேவை கிடையாது. ராணுவ தளபதி பதவியை பொறுப்பேற்குமாறு வேறு யாராவது பின்னர் கூறுவார்கள். அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாது அல்லவா?

இந்த பிரச்சனை 100 சதவீதம் நிறைவடைந்தது என்ற நிலைக்கு வருவதற்கு நிச்சயமாக இரண்டு வருடங்களாவது பொறுமையாக கடமையாற்ற வேண்டும். அவ்வாறின்றி இந்த பிரச்சனையை நிறைவு செய்ய இலகு வழிகள் கிடையாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சனையின்போது, நாம் இலகு வழிகளை சிந்தித்தோம். எனினும், அது வெற்றியளிக்கவில்லை.

ஆதனால் எமக்கு மாற்று வழி கிடையாது. சரியான வழிமுறையின் கீழ் பயணிக்க வேண்டும். அரசியல்வாதி என்பவர் அனைவரையும் அறிந்திருக்க வேண்டும். எந்தவொரு நபர் வீட்டிற்கு வந்தாலும் தேநீரை வழங்குவோம்.

எனது அலுவலகத்திற்கு ஒருவர் வரும்போது, கட்சி, இனம், முஸ்லிமா, சிங்களமா என்று பார்ப்பதில்லை. ஒருவரை அறிந்திருப்பதற்காக, அரசியல்வாதியை பயங்கரவாதி என கூற முடியாது.

என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதி 5 வருடங்கள் என்னுடைய வீட்டில் வேலை செய்தார். எனது வீட்டில் இருந்த சமையல்காரர். அந்த சமையல்காரரை வீட்டில் வைத்திருந்தமைக்காக நானும் பயங்கரவாதியாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் அல்லவா?

அதனால் அரசியல்வாதிகள் மீது விரல் நீட்டி, தனிப்பட்ட அரசியல் இலாபத்தை பெற்றுக் கொள்ள முடியற்சிக்கின்றமை மிகவும் கீழ்தரமான செயற்பாடு என்றே கூற வேண்டும்.

BBC

Share:

Author: theneeweb