ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மேலும் குற்றங்களைச் சுமத்தித் தனிமைப்படுத்த முற்படுவது அநீதியானது.

–          கருணாகரன்

“ஈஸ்டர் தாக்குதல்”களைத் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது, நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பேரில் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளே. முஸ்லிம்களின் வாழிடம், அவர்களுடைய வழிபாட்டிடங்கள், தொழில் மையங்கள், நடமாட்டம், தொடர்பாடல் அனைத்தும் தீவிர கண்காணிப்புக்குள்ளாகியுள்ளன. சந்தேகத்தின்பேரில் எல்லா இடங்களிலும் பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்குத் தோதாக தொடர்ந்து முஸ்லிம் பிரதேசங்களிலும் முஸ்லிம்களின் தொழில் மையங்கள், பள்ளிவாசல்களில் கண்டெடுக்கப்படும் வெடிகுண்டுகளும் பிற ஆயுதங்களும் நிலைமையை மிக மோசமாக்கிக் கொண்டிருக்கின்றன. கிழக்கு மாகாணம் சம்மாந்துறையில் ஒரு வீட்டில் நடந்துள்ள வெடிப்புச் சம்பவங்கள் நிலைமையில் மேலும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. இதனால் இன்னும் பலர் கைதாகும் நிலையே தெரிகிறது. இந்தக் கைதுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று எவருக்கும் எதுவும் தெரியாது. இவ்வளவும் அரசினால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளினாலானவை.

முஸ்லிம் சமூகத்தின்மீது அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளைப் பற்றிப் பேசுவதற்கும் முஸ்லிகளுக்காகக் குரல் கொடுக்கவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைமைகளும் முஸ்லிம் கட்சிகளும் இயலாமலுள்ளன. நடந்த தாக்குதல்களும் தொடரும் தாக்குதல் மற்றும் கைதுகளும் தங்களின் பேசும் தகுதியை இல்லாமலாக்கியுள்ளதாக அவர்கள் கருதக்கூடும். ஆனால், அது தவறானது.

இந்தச் சந்தர்ப்பத்தில் அவை துணிந்து பேச வேண்டும். தாம் சார்ந்த சமூகத்தின் பாதுகாப்புக் குறித்து அந்தச் சமூகத்தின் நெருக்கடியின்போது பேசவில்லை என்றால் அந்தத் தலைமைகள் அந்தச் சமூகத்துக்குத் தேவையற்றுப்போய் விடும். இது வரலாற்று விதி.

ஏற்கனவே முஸ்லிம் சமூகத்தின் மீது இழைக்கப்பட்ட அநீதிகளையும் தாக்குதல்களையும் உரிய முறையில் அரசிடமும் பாதிப்பை ஏற்படுத்திய தரப்புகளிடத்திலும் இந்தத் தலைமைகள் தட்டிக்கேட்காமல் மழுப்பலாக நடந்த காரணத்தினால்தான் தீவிர நிலைப்பாடுடையவர்கள் எழுச்சியடைய முடிந்தது. அதன் விளைவே இன்றைய இந்தத் தீவிரச் சம்பவங்கள்.

கடந்த நாற்பது ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உடையதாக இருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சியை அமைப்பதற்கும் முஸ்லிம்களே தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தனர். அத்தோடு அரசாங்கத்தின், ஆட்சியின் பங்காளிகளாகவும் இருந்தனர். இதன்மூலம் கல்வி, அரசியல், பொருளாதாரம், வெளித்தொடர்பு போன்றவற்றில் முஸ்லிம் சமூகம், பிற சிறுபான்மையினச் சமூகத்தினராகிய  தமிழ், மலையகச் சமூகத்தினரை விடவும் உயர முடிந்தது.

ஒரு எளிய உதாரணம், மலையக மக்களுடைய கோரிக்கைகள் வீடு, போக்குவரத்துக்கான வீதி, ஆகக்கூடியது ஆயிரம் ரூபாய் சம்பளம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் நியாயமான கூலி என அடிமட்டப்பிரச்சினையாக இருக்கிறது. ஆனால், இந்த மாதிரி நாளாந்த வாழ்க்கைப் பிரச்சினையைக் குறித்து முஸ்லிகளின் கோரிக்கைகளும் போராட்டங்களும் நடக்கவில்லை. அடிப்படை விசயங்களில் ஒப்பீட்டளவில் முஸ்லிம் சமூகம் வளர்ச்சியடைந்திருந்தது. அல்லது தாக்குப்பிடித்து நிற்கக்கூடிய வல்லமையோடிருந்தது. அதனுடைய பிரச்சினை தன்னுடைய அடையாளமும் அதைப் பாதுகாப்பதைப் பற்றியதே

ஆகவே ஆட்சியின் பங்குதாரராகவும் ஆட்சியைத்தீர்மானிப்பவர்களாகவுமிருந்த சமூகமொன்றின் மிதவாதத் தலைமைகளின் தவறுகளே இந்தத் தீவிர நிலையாளரின் ஊக்கத்துக்குக் காரணமாகியது. இதை முஸ்லிம் மிதவாதச் சக்திகள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆனால், இதுதான் உண்மை. இதைப் புரிந்து கொண்டு இனிமேலும் தவறு விடாமல் முஸ்லிம் தலைமைகள் செயற்படுவது அவசியம்.

எனவே முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதகமான நிலவரத்தைக் குறித்து முஸ்லிம் தலைமைகள் அரசாங்கத்துடன் உடனடியாகப் பேச வேண்டும். பேசத்தயங்கினால் அல்லது பேசவில்லை என்றால், நடந்த தாக்குதலுக்கும் இவர்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாகவே அர்த்தமாகும். அல்லது அதற்கு ஆதரவு என அமையும்.

நடந்த தாக்குதலுக்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் சந்தேகத்தோடு அணுகுவதும் முஸ்லிம் சமூகத்தின் மீது நெருக்கடிகளைக் கொடுப்பதும் நியாயமற்றது. மட்டுமல்ல அது முழுத்தவறானதும் கூட. அது அரசியல் முறைமையும் அல்ல. பாதுகாப்பு என்ற பேரில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேகக் குழிக்குள் தள்ளி விட முடியாது. அவர்களை ஒரே நாளில் பாதுகாப்பற்ற நிலைக்குள்ளாக்கவியலாது. அப்படி அவர்களை முடிவற்றுச் சந்தேகித்தால், புறக்கணித்தால் அது அவர்களை மேலும் பாரதூரமாகவே சிந்திக்க வைக்கும். கடுமையான எதிர்விளைவுகளை உண்டாக்கும்.

எனவே இதையிட்டு  முஸ்லிம் தலைமைகள் தாமதிக்காமல் அரசாங்கத்தோடு பேசியே தீர  வேண்டும். மாற்று வழிகளைக் காண்பதற்கு முயற்சிக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் தலைமைகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் ஏனைய சமூகத்தினர் ஆதரவாக இருக்க வேண்டும்.

அரசினால் முற்றிலும் பாதுகாப்பற்ற ஒரு நிலைமைக்குள் முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளதைப்போல, தமிழ், சிங்களச் சமூத்தினராலும் முஸ்லிம்கள் சந்தேகிக்கப்படுகின்றனர். தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இதையிட்ட கவலைகளும் கோபமும் இருந்தாலும் எதையும் பேச முடியாத நிலைமை உடனடியாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை வாய்ப்பாகக் கொண்டு முஸ்லிம் விரோத மனப்பாங்கை எளிதாகக் கட்டமைக்கின்றன முஸ்லிம் விரோத சக்திகள். இதற்கான சமூக உளவியல் அரசினாலும் தமிழ், சிங்களச் சமூகங்களினாலும் மிக நுட்பமாக உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே அடிமனதிலிருந்த முஸ்லிம் வெறுப்புணர்வே இதற்குக் காரணம். அதுவே இப்போது மேலெழுந்து வெளிப்படத்தொடங்கியுள்ளது.

இதற்கு ஈஸ்டர் தாக்குதல்கள் கதவைத்திறந்து வாய்ப்பை இவர்களுக்கு வழங்கியுள்ளன. இதைச் சாட்டாக வைத்துக் கொண்டு மிகச் சாதாரண உரையாடல்களிலேயே முஸ்லிம் வெறுப்பைப் பலரும் உமிழ்கின்றனர்.

“பார்த்தீர்களா, நாங்கள் சொல்லும்போது நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் எண்டு  இப்ப தெரியுதல்லவா!” என்று தொடங்கி, “முஸ்லிம்களை ஒரு போதுமே நம்ப முடியாது. அவர்கள் உலகத்துக்கே விரோதிகள்” என்று இறுதித்தீர்மானத்துக்குச் சுலபமாக வந்து விடுகிறார்கள்.

முஸ்லிம்களைப் புலிகள் சரியாகவே அடையாளம் கண்டிருந்தனர். புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது நியாயம். புலிகள் முஸ்லிம்களின் விடயத்தில் சரியாகவே நடந்தனர் என்ற வாதங்கள் சந்தர்ப்பம் பார்த்து மேலெழுப்பப்படுகின்றன.

இதைப்போல சிங்களவர்கள் பேருவளையிலும் மாவனல்லயிலும் கண்டியிலும் தம்புள்ளவிலும் முஸ்லிம்களின் மீது தாக்கியதில் என்ன பிழை என்ற நியாயப்படுத்தல்கள் வேறு கலகலப்பாக நடக்கின்றன.

1980 களில் முஸ்லிம்களை அரசாங்கமே ஆயுததாரிகளாக்கியது. முஸ்லிம் ஊர்காவல் படை என்றும் ஜிகாத் என்றும் அது ஈழவிடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்குப் பயன்படுத்திய ஆயுதம் இன்று வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வகையில் இது வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையே என்று இன்னொரு கதை இடையே ஓடுகிறது.

ஆனால், இவற்றுக்குப் பின்னர் இருந்த வலிகளையும் துயரத்தையும் இழப்புகளையும் எவரும் மனதிற் கொண்டு பார்ப்பதில்லை.

நடந்த தாக்குதல்களில் ஒரு சிறிய குழுவினரே சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். அதனோடு சம்மந்தப்பட்டவர்கள் என்ற பேரில் வேறு ஆட்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

ப்படித்தான் இந்தத் தாக்குதலோடும் இதற்கான பின்னணிகளோடும் சம்மந்தப்பட்டவர்களையெல்லாம் அடையாளம் கண்டு கைது செய்தாலும் அது ஒட்டுமொத்தமான முஸ்லிம் சமூகத்தையும் அடையாளப்படுத்துவதாக அமையாது. ஒட்டு மொத்தமான முஸ்லிம் சமூகம் இந்தத் தாக்குலோடும் இதனுடைய அரசியலோடும் சம்மந்தப்பட்டதுமில்லை. உடன்பட்டதுமில்லை. உடன்படப்போவதுமில்லை. ஏன் இப்பொழுதே இந்தத் தாக்குதலையும் இதனுடைய அரசியலையும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் எதிர்த்திருக்கிறார்கள். கண்டித்திருக்கிறார்களே!

இப்படியிருக்கும்போது வலிந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மேலும் குற்றங்களைச் சுமத்தித் தனிமைப்படுத்த முற்படுவது அநீதியானது. அது அவர்களை மிகக் கடினமான உளச்சிக்கலுக்குள்ளாக்கும். அந்த உளச்சிக்கல் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும்.

இதேவேளை நடந்த தாக்குதல்களுக்கான உளத்தூண்டலையும் அரசியல் காரணிகளையும் நாம் நேர்மையாக ஆராய வேண்டும்.

அப்படி ஆராய்ந்தால் இரண்டு முக்கியமான விடயங்களை நாம் கவனிக்க முடியும்.

ஒன்று, யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளாகிய போதும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கமும் ஏனைய தரப்புகளும் தவறியமை. புதிய அரசியலமைப்புத்திருத்தத்தில் பௌத்தத்துக்கு முன்னுரிமை, ஏக்கிய ராஜ்ஜியம் என்ற ஒற்றை ஆட்சி என்ற நிலைப்பாடுகள் சிறுபான்மையினச் சமூகத்தை பதற்றத்துக்குள்ளாக்கின. கூடவே முஸ்லிம்களையும் அவர்களுடைய அடையாளத்தைப் பாதுகாப்பதில் பல இடர்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது.

இரண்டாவது, இதை ஒத்த நிலையும் சூழலும் 1970, 80 களில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருந்தது. அவர்கள் தாம் சந்தித்துக் கொண்டிருந்த அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிர்வினையாற்றுவதற்காக தமக்கு முற்றிலும் பழக்கமேயில்லாத பலஸ்தீனம் வரை சென்று பயிற்சியைப் பெற்றனர். தொடர்ந்து கடல் கடந்து இந்தியாவுக்குப் போய் உத்தரப்பிரதேசத்தில் பயிற்சி பெற்றுத் திரும்பினர்.

இதை ஒத்த நிலையில்தான் முஸ்லிம் சமூகத்தினருடைய பிரச்சினைகளும் அவர்கள் உண்டாக்கிய விளைவுகளும் உள்ளன. இதை உளப்பூர்வமாக விளங்கி ஒவ்வொரு குரலுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டியதே நம் காலப்பணியாகும்.

Share:

Author: theneeweb