கல்முனை தாக்குதலில் காயமடைந்தவர்கள் சஹரானின் மனைவி மற்றும் குழந்தை என உறுதி!

கல்முனை மோதலின் போது காப்பாற்றப்பட்டவர்கள், தேசிய தவுஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹஷீமின் மனைவி மற்றும் மகள் என காவற்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியகட்சருமான ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

காப்பாற்றப்பட்ட குறித்த பெண், தேசிய தவுஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரின் மனைவியான, அப்துல் காதர் பாதிமா சாதியா எனவும் பெண் குழந்தையானது, அவரின் மகளான மொஹமட் சாரா நுசைனா என்பவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு பேரும் தற்போது அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று இரவு கல்முனை – சாய்ந்தமருது – நிந்தவூர் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு இடையே பரஸ்பர துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டன.

இதன்போது பயங்கரவாதிகள் உள்ளிட்ட 15 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தின் பின்னர் நேற்று பிற்பகல் வெடிப்பினால் பாதிக்கப்பட்ட வீட்டிற்குள் பாதுகாப்பு தரப்பினர் தேடுதல்களை மேற்கொண்டனர்.

இதன்போது 4 வயதான குழந்தையும், பெண்ணொருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில், சஹரான் ஹஷீமின் தந்தை மற்றும் சகோதரர்கள் இருவரும் உள்ளடங்குவதாக, ரொயிட்டர் செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு தரப்பினரால் கல்முனையில் மேற்கொள்ளபட்ட சுற்றி வளைப்பின் போது தமது 3 செயற்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டமையை ஐ.எஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

ஐ.எஸ். பிரசார பிரிவான அல் அமாக் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அவர்கள் பாதுகாப்பு தரப்பினருடன் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தோட்டாக்கள் தீர்ந்ததையடுத்து அவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாக ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb