இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம்: கேரளாவில் இருவரிடம் என்.ஐ.ஏ விசாரணை

 

திருவனந்தபுரம்: இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரளாவில் இருவரிடம் தேசிய விசாரணை ஆணையம் (என்.ஐ.ஏ) விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 353 பேர் மரணமடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 106  பேரைக் கைது செய்துள்ளனர்.

மேலும் சந்தேகத்துக்கிடமான 100 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. தேடுதல் வேட்டையும்  தீவிரமாக நடந்து வருகிறது.

நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்னும் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாகவும், கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் மசூதிகள் மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன தகவல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்கொலைப்படைத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒன்பது பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் படித்தவர்கள் என்பதும், அவர்களை மூளைச்சலவை செய்து இந்த கொடூர செயலுக்கு பயன்படுத்தியுள்ளனர் என்று அமைச்சர் ருவான் விஜேவர்தன தகவல் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரளாவில் இருவரிடம் தேசிய விசாரணை ஆணையம் (என்.ஐ.ஏ) விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருவரிடம் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிவில் அவர்கள் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Author: theneeweb