மீண்டும் சிலுவை சுமக்கும் மககள் – – கருணாகரன்

யுத்தம் முடிந்து பத்தாண்டுகள் (2009 மே 18 – 2019 ஏப்ரல் 21) முடியவில்லை. அதற்குள் மறுபடியும் யுத்த கால நெருக்கடியை ஒத்த சூழல் உருவாகியுள்ளது. எங்கும் அச்சம். எல்லா இடங்களிலும் பதட்டம். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் மக்கள். வீதிகள், கிராமங்கள், நகரங்கள், பொது இடங்கள் என நாடு முழுவதும் படையினரும் காவல்துறையினரும் நிறைக்கப்பட்டுள்ளனர். மறுபடியும் சுற்றி வளைப்புகளும் சோதனைகளும் ஆரம்பமாகி விட்டன. பயணத்தின்போது பொதிகளை எடுத்துச் செல்வதை முடிந்த அளவுக்குத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்ற அறிவுறுத்தல்களை விடுக்கும் அளவுக்கு நாட்டின் பாதுகாப்பும் இயல்பு வாழ்க்கையும் கேள்வியாகியுள்ளன.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆனையிறவில் வாகனங்கள் இடை மறித்துச் சோதனையிடப்படுகின்றன. பேருந்துகளுக்குள் படையினர் ஏறி ஆள் அடையாள அட்டைகளைப் பரிசோதிக்கின்றனர். ஒவ்வொருரையும் இறக்கி வரிசையில் அடையாள அட்டையுடன் நடத்தாத ஒன்றே இப்போதைக்குள்ளது. மற்றும்படி பழைய கதை மீண்டும் அரங்கேறியுள்ளது. இதுதான் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடக்கிறது. இதைப்பார்க்கும்போது ஏதோ நினைவுகளெல்லாம் அலைமோதுகின்றன.

ஆனால், ஒரு விசேடம், இந்தத் தடவை படையினரின் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை பெரும்பாலானவர்கள் எதிர்மனோநிலையில் பார்க்கவில்லை. இது அவசியமான ஒன்று என்ற மாதிரியே கருதுகிறார்கள். தங்களுடைய பாதுகாப்புக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமையின் வெளிப்பாடிது.

எப்போதும் படைகளை விமர்சிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கூடப் “படையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவையான ஒன்று. படையினரின் செயற்பாடுகளை வரவேற்கிறோம்” என்றிருக்கிறது. இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதுபற்றிப் பகிரங்கமாகவே கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

எப்படியாவது படையினர் இந்தப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற பிரார்த்தனையே பலரிடத்திலும் இருப்பதைக் காண முடிகிறது. ஈஸ்டர் தாக்குதல்களின் விளைவு இது.

இப்படி ஒரு நிலை வருமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதனால் இதை நம்பக் கடினமாகவே உள்ளது. ஆனால் இதுதான் உண்மை. இதுதான் யதார்த்தம்.

ஊடகவியலாளர் சோமிதரன் தன்னுடைய பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளதைப்போல, கடந்த பத்தாண்டுகால நல்லிணக்கச் செயற்பாடுகளும் புரிந்துணர்வு நடவடிக்கைகளும் பகை மறப்புக்கான ஏற்பாடுகளும் செய்யாத நெருக்கத்தை – படையினரை அங்கீகரிப்பதை – இந்தக் குண்டு வெடிப்புகள் செய்துள்ளன என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இது அடிப்படையிலிருந்து எழுந்து வரும் புரிந்துணர்வோ பகை மறப்போ, அங்கீகாரமோ இல்லை. சூழ்நிலையின் நெருக்குவாரம் உண்டாக்கிய விளைவு. ஆகவே இதற்கு ஆயுட்காலம் குறைவு. நாளை இது எந்த வடிவத்தை எடுக்கலாம். பரஸ்பரம் புரிந்துணர்விலும் நம்பிக்கையினாலும் கட்டியெழுப்பப்படும் பகை மறப்பு் நல்லிணக்கமும் சமாதானமும் ஐக்கியமுமே நீடித்து நிலைக்கக்கூடியன.

முஸ்லிம்களிடத்தில் இந்தச் சம்பவங்கள் (குண்டுத்தாக்குதல்களும் படையினரின் சோதனை நடவடிக்கைகளும்) குழப்பகரமான நிலையை உண்டாக்கியுள்ளன. தாக்குதல்களின் பின்னான நிலைமைகள் முஸ்லிம்களை மிக மோசமாகப் பாதித்திருக்கின்றன. ஏனென்றால் ஈஸ்டர் அன்று நடந்த தாக்குதல்களோடு இது முடிந்து போயிருந்தால் ஓரளவுக்கு அரசாங்கமும் தீவிரநிலைப்பட்டிருக்காது. படையினரும் ஒரு எல்லைக்குட்பட்ட அளவிலேயே தமது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பார்கள்.

ஆனால், ஈஸ்டருக்குப் பிறகும் அங்குமிங்குமாகத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. சில இடங்களில் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் படையினர் கைப்பற்றியிருக்கிறார்கள். இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்துமருது என்ற இடத்திலும் வெடிப்பொருட்களோடு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கே தொடர் குண்டுகள் வெடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாதிரித் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் முஸ்லிம் சமூகம் ஆடிப்போயுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத குழப்பம், பீதி என்ற நிலைமைக்குள்ளாகியிருக்கின்றனர் முஸ்லிம் மக்கள்.

இதேவேளை இந்த நிலைமைகள் தமிழர்களுடைய கவலைகளைப் பெருக்கியுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் உண்டாக்கியிருக்கும் நெருக்கடியினால்  அரசியலமைப்புத்திருத்தம் காலவரையின்றிப் பின்செல்லப்போகிறது. அரசியல் தீர்வைப்பற்றிய கதைகளுக்கே இப்போது இடமில்லை. அரசியல் கைதிகளின் விடுதலையைப் பற்றியும் இப்போதைக்கு நினைத்துப் பார்க்கவே முடியாது. படைவிலக்கலைப்பற்றிச் சிந்திக்கவே முடியாது. எந்தப் பிரச்சினைகளிலும் ஈடுபடுவதற்கான சூழல் அரசாங்கத்துக்கு இல்லை என்ற வாதங்கள் முன்வைக்கப்படக்கூடிய நிலையே இந்தத் தாக்குதல்களினால் ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே எழுபது ஆண்டுகாலப் போராட்டத்துக்கும் பத்தாண்டுகாலக் காத்திருப்புக்கும் எந்தப் பயனுமில்லை என்ற நிலையே உருவாகியுள்ளது.

இப்படித்தான் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஏனைய பல விடயங்களும் பின்தள்ளப்படவுள்ளன.

நாட்டின் பொருளாதாரம் பெரிய வீழ்ச்சியை நோக்கிச் சரியத் தொடங்கியுள்ளது. உள்ளுரில் சாதாரண கடைகளின் வியாபாரமே படுத்து விட்டது. வீதிகளில் மக்கள் நடமாட்டமே இல்லை. வெளியூர்ப்பயணங்கள், தொலைதூரப்போக்குவரத்து, இரவு நடமாட்டம், இயல்புச் சூழல் எல்லாம் இல்லாமலாகி விட்டால் பொருளாதாரம் எப்படி முன்னேற்றகரமாக இருக்கும்? அவசரகால நிலையும் ஊரடங்குச் சட்டமும் வீதிச் சோதனையும் அமூலுக்கு வந்தது என்றால் எப்படித்தான்  இயல்பு வாழ்க்கை நிகழும்? இவையெல்லாம் பொருளாதார விருத்திக்கு எதிரான காரணிகள் அல்லவா!

இலங்கையின் பொருளாதார நம்பிக்கைகள் சுற்றுலாத்துறையில்தான் அண்மைய ஆண்டுகளில் கட்டியெழுப்பப்பட்டு வந்தன. இதற்காக மலையகத்தில் தேயிலை, ரப்பர் போன்ற பயிர்ச் செய்கையே  கைவிடப்பட்டு, அதற்குப் பதிலாக சுற்றுலா விடுதிகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதைப்போலவே மீன்பிடிக்கடற்கரைகள் சுற்றுலா மையங்களாகி மீன்வாடையற்றன.

உள்நாட்டின் உற்பத்திகளை பலவீனப்படுத்தி, சுற்றுலாத்துறையை வளர்க்க வேண்டியதில்லை. அதை இன்னொரு நிலையில், வேறு விதமாகப் பலமாக்க வேண்டும் எனப் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தபோதும் அரசாங்கமும் பொருளாதார நிபுணர்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. விளைவு ஈஸ்டர் தாக்குதல்களில் – ஒரே நாளில் – சுற்றுலாத்துறை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு விட்டது.

இனி இதை மீட்டெடுப்பது என்பது இலகுவான ஒன்றல்ல. அதற்கு நீண்ட காலம் செல்லும்.

இதற்குள் அமெரிக்காவின் அபாய அறிவிப்பு வேறு வந்திருக்கிறது. இலங்கையில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடமுண்டு என அமெரிக்க உளவுத்தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள பாடசாலைகள்,  பொதுஇடங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், சந்தைகள், விழாக்கள், வழிபாட்டிடங்கள் போன்ற இடங்களில் இவ்வாறான தாக்குதல்கள் நடப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் இதனால் அமெரிக்க மக்கள் இலங்கைக்குச் செல்வதைத் தவிர்குமாறும் அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.

அப்படியென்றால் நிச்சயமாக ஏதோ நடக்கத்தான் போகிறது என்பது நிரூபணமாகிறது.

அப்படி மேலும் அனர்த்தங்கள் நடந்தால் அதன் விளைவுகள் எப்படியிருக்கப்போகின்றன?

அதை நாடு எப்படித் தாங்கிக் கொள்ளப்போகிறது?

அதற்கு முன்பாக அதைத் தடுப்பதற்கு, இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாதா?

நாட்டை இந்த முடிவற்ற அச்ச நிலையிலிருந்து மீட்கவியலாதா? எதற்காக இந்தப் பயங்கரவாதம்? யாருக்கு இதனால் லாபம்? யாருடைய பின்னணியில் இதெல்லாம் நடக்கின்றன?

அரசாங்கம் பாதுகாப்புச் சபையைக் கூட்டியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 26.04.2019 இல் கூடிய பாதுகாப்புச் சபை நடந்த சம்பவங்களைப்பற்றியும் தற்போதைய சூழலைப்பற்றியும் ஆராய்ந்தது. இதன்போது முதலாம் தவணை விடுமுறையில் உள்ள பாடசாலைகளின் விடுமுறைக்காலம் மேலும் நீடிக்கப்பட்டு எதிர்வரும் மே 06 ஆம் திகதி வரைக்குமாகப் பிற்போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேநாள் நிகழ்வுகளையும் தவிர்க்குமாறு ஜனாதிபதி கேட்டிருக்கிறார். இதிலிருந்தே நெருக்கடியின் உச்சத்தை உணரமுடியும். இலங்கையின் வரலாற்றில் இந்த மாதிரிப் பாடசாலைகளை மூடி வைத்திருந்ததும் மேதின நிகழ்வுகள் நடக்காமல் விட்டதுமில்லை.

மேலும் அரசாங்கத்தரப்பிலிருந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். அதைப்போல பொலிஸ்மா அதிபர் விசாரணைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரும் மாற்றப்படலாம்.

பொறுப்புச் சொல்ல வேண்டிய தலைமையிடங்களில் உள்ளவர்கள் நடந்த அனர்த்ததைப் பற்றியும் இழப்புகளைப்பற்றியும் உள்ளுணர்ந்து அதற்கான பொறுப்பை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை.

இதேவேளை மேலும் இவ்வாறான அபாய நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கைகளைக் கண்டு மக்கள்  அச்சமடையத் தேவையில்லை என்று சம்பிரதாயத்துக்குத் தன்னும் யாரும் மக்களுக்கு உறுதி கூறவில்லை.

இந்தத் தளம்பல்தான் உள்நாட்டிலும் சரி, வெளியுலகிலும் சரி ஏராளம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இப்போது இன்னொரு புதிய தகவல். கொழும்புக்கும் ஷங்காய்க்குமிடையிலான விமானப் போக்குவரத்து மறு அறிவித்தல் வரையில் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது இன்னொரு பொருளாதார அடி.

ஆகவே நிலைமை வரவர இப்படித்தான் செல்லுமாக இருந்தால் அதனுடைய நேரடிப்பாதிப்பு மக்களையே சென்று சேரும்.

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல்களோடு நாடு அதல பாதாளத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

2009 மேயில் யுத்தம் முடிந்த பிறகு செய்திருக்க வேண்டிய – பொறுப்புக் கூறல்களையும் நிரந்தர சமாதானத்தையும் நாட்டிலே விசுவாசமாக ஏற்படுத்தியிருந்தால் இப்படியான துயர நிலையெல்லாம் நடந்திருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

இடைவெளிகளும் சந்தேகங்களும் பகையுணர்ச்சியுமே இலங்கையைப் பீடித்துள்ள தீராத நோய்.

இதற்கே மருத்துவம் தேவை.

00

Share:

Author: theneeweb