நாட்டின் பல பகுதிகளிலும் முப்படையினர் இன்றும் சோதனை: கிழக்கு மாகாண ஆளுநரின் பழைய அலுவலகமொன்றும் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

 நாட்டின் பல பகுதிகளிலும் முப்படையினர் இன்றும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

காத்தான்குடியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் ஊடாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பின் ஊடாக பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, காத்தான்குடியிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் பழைய அலுவலகமொன்றும் இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அலுவலக வளாகத்தில் இருந்து T56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 48 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, மாத்தளை – தோலவத்தை பகுதியிலுள்ள வீடொன்றை இன்று சோதனையிட்ட போது, 2 டெட்டனேட்டர்களும் தொலைநோக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மொஹமட் சாஃபிக் மொஹமட் நுஸ்கி என்ற வர்த்தகர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, மாத்தளை அத்தமுனகல பகுதியிலுள்ள வீடொன்று இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 20 ஏக்கர் காணி மற்றும் அதில் அமைந்துள்ள வீடு ஆகியன சந்தேகத்தின் பேரில், மஹாவெல பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், இங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

அவிசாவளையில் சந்தேகத்தின் அடிப்படையில் முஸ்லிம் பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, தல்துவவிலுள்ள அவரின் வீடு இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, 14 கையடக்கத்தொலைபேசிகளும், மடிக்கணினியொன்றும், 2 டொங்கல்களும், லெமினேட்டிங் இயந்திரமொன்றும் ஸ்கேன் இயந்திரமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்தவர் என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதுடன், 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மன்னார் விடத்தல் தீவு பகுதியிலிருந்து 10 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனையின் பல பகுதிகளில் பொலிஸார் மற்றும் முப்படையினர் இன்று சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

கல்முனைக்குடி தர்கா நகர் பகுதியிலுள்ள வீதியிலிருந்து T56 ரக துப்பாக்கியும் தோட்டாக்களும்
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நற்பிட்டிமுனை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், வீடொன்றிலிருந்து 4 வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை – ஆற்றங்கரை வீதி பகுதியிலும் இன்று பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

முந்தல் பொலிஸ் பிரிவின் மருதங்குளி நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வவுனியா நகரம், தோனிக்கல் பகுதிகளில் முப்படையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் இரண்டு வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். குருநகர் பகுதியிலும் இன்று விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Share:

Author: theneeweb