இன்றைய சுற்றிவளைப்பு தேடுதலில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் கைது!

அம்பாறை – சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று காலை நடத்தப்பட்ட தேடுதல்களில் மேலும் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

200 டெட்டனேட்டர்கள், 200 ஜெலக்நைட் குச்சிகள், 171 ரீ56 துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இன்றைய தினமும் இரவு 9 மணி முதல் கல்முனை, சவளக்கடை மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படவுள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரவு 9 மணிக்கு அமுலாக்கப்படும் இந்த ஊரடங்கு உத்தரவு, நாளை அதிகாலை 5 மணி வரையில் அமுலில் இருக்கும்.

அதேநேரம், காவற்துறையினரும், இராணுவத்தினரும் இணைந்து இன்றும் நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டனர்.

கண்டி – அக்குரனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது, 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து வாள்கள், கோடரி, தொடர்பாடல் சாதனங்கள், சுவரொட்டிகள் உள்ளிட்ட பல சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் அடிப்படைவாத பிரசாரங்கள் அடங்கிய ஒலி நாடாக்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது வாள்கள் இரண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வவுனியாவில், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

எந்தேருமுல்லை – அக்பர் டவுன் பகுதியிலும் இன்று விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் தனியார் விருந்தகம் ஒன்றில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது இரண்டு சோடி இராணுவ பாதணிகள், இராணுவ சீருடை, ஜக்கட் ஒன்று, தொலைபேசி சிம் அட்டைகள், கத்தி ஒன்று, தொலைநோக்கி கருவி ஒன்று, தொலைத்தொடர்பு கருவிகள் 9 என்பன படையினரால் மீட்கப்பட்டன.

இவை முல்லைத்தீவு காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், கேகாலை – கொட்டியாகும்புர பகுதியில் உள்ள பாலம் ஒன்றுக்கு அருகில் இருந்து வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் தொடர்பாடல் சாதனங்களும் மீட்கப்பட்டதுடன், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பகுதியில் இராணுவம் இன்று நடத்திய சுற்றிவளைப்பின் போது இந்த பொருட்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் கேகாலை காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், வெலிகம – கொக்மாதுவை வீதியில் கடவத்தை பாலத்துக்கு அருகில் பையொன்றில் வாள் ஒன்றும் கோடரி ஒன்றும் கைவிடப்படநிலையில் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டுள்ளன.

முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த சிலர் இந்த பையை வீசி சென்றதாக பொதுக்கள் காவற்துறையினரிடம் கூறியுள்ளனர்.

குளியாப்பிட்டி – யாயவத்தை பகுதியில் மத வழிபாட்டுத் தளமொன்றில் இருந்து இராணுவ சீருடைக்கு இணையான சில ஆடைகளும், காவி உடைக்கு இணையான சில துணி வகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேகத்துக்குரிய பெண் ஒருவரை விசாரணைக்காக காவல்துறையினர் பொறுப்பேற்றனர் என எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குருநாகல் – வெல்லவயில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் உட்பட 14 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 6 வாள்கள் உட்பட மேலும் சில ஆயுதங்கள் காவல்றையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, பாடசாலைகள் மற்றும் மதஸ்தானங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, அவசியமான மேலதிக படையினரை சேவையில் ஈடுபடுத்த ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb