மசூத் அஸார் சர்வதேச பயங்கரவாதி: ஐ.நா. அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. அந்த அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு இந்தியா தொடர்ந்து ஐ.நா. அமைப்பிடம் வலியுறுத்தி வந்தது.

பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் அவரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஆதரவளித்தன. இருப்பினும், தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ந்து 4-ஆவது முறையாக மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்டு வந்தது.

இருப்பினும், பாதுகாப்பு கவுன்சிலில் இந்த விவகாரம் தொடர்பாக முதலில் பேச்சுவார்த்தையும், ஆலோசனையும் நடத்தப்பட வேண்டும். அனைத்து உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் மசூத் அஸார் விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்று சீனா தெரிவித்திருந்தது.

இதனிடையே, கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் அத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது, சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வே பெங்க்கையும் அவர் சந்தித்துப் பேசினார். மேலும், இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே, பெய்ஜிங் நகருக்கு வந்து, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. புதன்கிழமை அறிவித்துள்ளது. இதனை ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் உறுதிபடுத்தினார்.

முன்னதாக, பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் சந்தித்தார். அப்போது, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கெங் ஷுவாங், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தான் எங்களது சகோதர நாடு. பரஸ்பரம் இரு நாடுகளும் நட்பு பாராட்டி வருகின்றன. சீனாவின் ராஜீய ரீதியிலான நட்புறவுக்கு பாகிஸ்தானுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றார்.

Share:

Author: theneeweb