விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு 11 மாத சிறை தண்டனை

விக்கிலீக்ஸ் வலைதளத்தை நிறுவிய ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரிட்டன் நீதிமன்றம் 50 வார (11.5 மாதங்கள்) சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தது. வழக்கு ஒன்றில் தனக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனுக்கான நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிய குற்றத்துக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, லண்டன் செளத்வார்க் கிரெளன் நீதிமன்ற நீதிபதி டெபோரா டைலர் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஜாமீன் வழங்கும்போது விதிக்கப்படும் நிபந்தனைகளை மீறுவதற்கு, ஜூலியன் அசாஞ்சேவைவிட மிக மோசமான முன்னுதாரணம் இருக்க முடியாது.

பிரிட்டனில் இருந்துகொண்டே, சட்டத்தின் கைகளில் பிடிபடாமல் வெளிநாட்டுத் தூதரகத்துக்குள் அவர் ஒளிந்திருந்தார். இதன் மூலம், நீதியைத் தாமதப்படுத்தவும், சட்டத்திலிருந்து தப்பவும் அவர் கடுமையாக முயன்றுள்ளார்.தூதரகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக சலுகைகளை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, சட்டத்தை ஏமாற்றியுள்ளார்.இந்தக் குற்றத்துக்காக, அவருக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி டைலர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அச்சுறுத்தும் சூழல் காரணமாக ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சமடைய முடிவெடுத்ததாக ஜூலியன் அசாஞ்சே தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இதற்கிடையே, அசாஞ்சேவுக்கு தண்டனை விதிக்கக் கூடாது எனவும், அவரை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் வலியறுத்தி அவரது ஆதரவாளர்களும், கருத்துரிமை ஆர்வலர்களும் நீதிமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கணினி நிபுணரான ஜூலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் இணையதளத்தை உருவாக்கி, அதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு, பல தவறுகளை அம்பலப்படுத்தினார்.


இதற்கிடையே, ஸ்வீடனில் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுதொடர்பாக பிரிட்டனில் கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில், பாலியல் வழக்கு தொடர்பாக ஸ்வீடனுக்கு நாடு கடத்தக் கூடாது என்ற அசாஞ்சேவின் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லண்டனிலுள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் கடந்த 2012ஆம் ஆண்டு அடைக்கலம் கோரினார்.

ஈகுவடார் அரசும் அதற்கு ஒப்புக் கொண்டதையடுத்து, கடந்த 7 ஆண்டுகளாக ஜூலியன் அசாஞ்சே அந்தத் தூதரக வளாகத்தில் வசித்து வந்தார். இதற்கிடையே, ஈகுவடாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்த நாட்டு அரசுக்கும், ஜூலியன் அசாஞ்சேவுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. தூதரக வளாகத்தில் தனக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக அசாஞ்சே குற்றம் சாட்டி வந்தார்.
இந்த நிலையில், அசாஞ்சேவுக்கான அடைக்கலத்தை ஈகுவடார் விலக்கிக் கொள்வதாக அறிவித்ததையடுத்து, ஜாமீன் முறைகேடு குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டன் போலீஸாரால் அவர் கடந்த மாதம் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, அவருக்கு தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Share:

Author: theneeweb