எதிர்க்கட்சியினர் போராட்டம்: கலவர பூமியானது வெனிசூலா: ராணுவப் புரட்சியை முறியடித்ததாக மடூரோ அறிவிப்பு

வெனிசூலாவில் அதிபர் மடூரோ பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. எனினும், ராணுவப் புரட்சியைத் தூண்டிவிடும் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோவின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அதிபர் மடூரோ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய நாடாளுமன்றத் தலைவருமான ஜுவான் குவாய்டோவின் அழைப்பை ஏற்று, அவரது ஆதரவாளர்கள் அதிபர் மடூரோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

தலைநகர் கராகஸில் நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக மாறியது.
முன்னதாக, வெனிசூலா ராணுவம் தங்களுக்கு ஆதரவு அளிப்பதாக ஜுவான் குவாய்டோ வெளியிட்ட விடியோ உரையில் தெரிவித்திருந்தார்.

லா கர்லோடா விமான தளத்திலிருந்தபடி அவர் பேசியதும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் லியோபால்டோ லோபஸை ராணுவம் விடுவித்துவிட்டதாகக் கூறி, அவரை அருகில் அழைத்துக் காட்டியதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
எனினும், ராணுவத்தின் ஒரு சிறு பிரிவினரைக் கொண்டு ஆட்சியைக் கவிழ்க்க குவாய்டோ சதித் திட்டம் தீட்டியதாக மடூரோ அரசு குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வன்முறைப் போராட்டத்துக்குப் பிறகு அரசுத் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் உரையாற்றிய அதிபர் மடூரோ, ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கவிழ்க்கும் குவாய்டோவின் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அறிவித்தார்.
மேலும், இந்தப் போராட்டத்தில் தவறிழைத்தவர்களுக்கு தகுந்த தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
பிரேசில் தூதரகத்தில் தஞ்சம்: பெரும்பான்மையான ராணுவ அதிகாரிகள் அதிபர் மடூரோவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையிலும், குவாய்டோவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நம்பப்படுகிறது.

வெனிசூலாவிலுள்ள தங்களது நாட்டுத் தூதரகத்தில் 25 ராணுவ அதிகாரிகள் புகலிடம் கோரியிருப்பதாக பிரேசில் தெரிவித்துள்ளது.வெனிசூலாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில் மடூரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை நிராகரித்த எதிர்க்கட்சித் தலைவரும், அந்த நாட்டு தேசிய நாடாளுமன்றத்தின் தலைவருமான ஜுவான் குவாய்டோ, மறு தேர்தல் நடத்தப்படும் வரை நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்பதாக அறிவித்தார்.

அவரை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரித்தன. எனினும், அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

Share:

Author: theneeweb