தெய்வங்களை வைத்து ஆக்ரமிப்புக்கள்: வல்லமை தாராயோ

         கருணாகரன்

காணாமலாக்கப்பட்டோரின் துயரத்தைக் கடக்க முடியாமலிருக்கிறோம். பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தத் துயரம் நீடித்துக் கொண்டிருக்கிறது. சிலருக்கு இது இருபது, முப்பது ஆண்டுகளாகி விட்டன.

நமது காலம் மிகக் கொடியது. மனிதர்கள் மட்டும் காணாமலாக்கப்படவில்லை. நமது பண்பாடு, நமது ஆறுகள், நமது காடு, நாம் குளித்தும் கும்மாளமடித்தும் கொண்டாடிய குளம், நம் தெருக்களில் நின்ற மரங்கள், நமது சூழலின் அடையாளங்கள் எல்லாமே காணாமலாக்கப்படுகின்றன. நம்ப மாட்டீர்கள், நமது குலதெய்வங்கள், சிறுதெய்வங்கள் கூடக் காணாமலாக்கப்படுகின்றன.

காணாமலாக்கப்படுவது என்பதே ஒன்றை இல்லாது அழிப்பதற்கான நடவடிக்கையே. ஏதோ இயல்பாக இதெல்லாம் நடப்பதைப்போலத் தோன்றும். ஆனால், அப்படியல்ல. இது ஒரு திட்டமிட்ட சதியே. நமக்குத் தெரியாமலே நம்முடைய கண்களை அபகரித்துச் செல்லும் செயல்.

இதனால்தான் பல சந்தர்ப்பங்களிலும் இந்தக் காணாமலாக்கப்படும் சூழ்ச்சிக்கு நாமும் பலியாகி விடுகிறோம்.

வன்னியில் ஒரு காலம் ஏராளம் சிறுதெய்வங்களிருந்தன. காவல் தெய்வங்களாக, வழிகாட்டித் துயர் நீக்குபவையாக, துணையிருப்பவையாக, நோய் நீக்கி நலம் தருபவையாக, வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பவையாக இந்தத் தெய்வங்களை வன்னிச் சனங்கள் வழிபாட்டனர். இதில் ஆண் தெய்வங்களுமுண்டு. பெண்தெய்வங்களுமுண்டு.

வன்னியே சிறுதெய்வ வழிபாட்டுப் பண்பாட்டைக் கொண்டதுதான். வன்னியின் புகழ்பெற்ற கோயில்கள் எல்லாமே சிறுதெய்வங்களைக் கொண்டவையே.

கற்குளம் முத்துமாரி, பண்டாரிகுளம் முத்துமாரி, நைனாமடு ஐயனார், ஒட்டுக்குளம் காடன், பெரியமடு மாடன், அம்பகாமம் முத்துமாரி, சின்னப்புதுக்குளம் காத்தவராயன், வற்றாப்பளைக் கண்ணகி, புதூர் நாகதம்பிரான். வன்னிவிளாங்குளம் அம்மன், பாலியாற்று அம்மன், புளியம்பொக்களை நாகதம்பிரான், இயக்கச்சிக் கண்ணகை, மல்வில் வல்லியக்கன், திரியாய் அம்மன், ஆலந்தாழ்வுக் கிடாரி, சோலைமடுக் காடேறி, உப்புக்கண்டல் பேச்சியம்மன் என்று எல்லாமே சிறுதெய்வ வழிபாட்டுக் கோயில்களே.

இங்கேயெல்லாம் பொங்கலையும் பூசையையும் ஊர்ச்சனங்களே செய்தனர். அவரவரே வந்து தங்கள் நேர்த்திக்கும் கடமைக்குமாகத் தாங்களே பொங்கிப் படையலிட்டனர். தெய்வங்களுக்கும் சனங்களுக்குமிடையிலான உறவென்பது தாயும் பிள்ளையும்போல. அண்ணனும் தம்பியும்போல. அவ்வளவு நெருக்கமானது.

சில கோயில்களில் மட்டும் பூசாரிகள் இருந்தனர். அவர்களும் பிறத்தியிலிருந்து வந்தவர்களில்லை. அந்தந்த ஊரவர்கள். அல்லது ஏதாவது ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள். குலதெய்வத்துக்கு விளக்கு வைப்பது, பூசை செய்வது, குளிர்த்திக் கடன் செய்வது என்று மரபாக, பரம்பரையாக இதைச் செய்தனர்.

எந்தப் பூசாரியும் பிராமணர்களில்லை. அதனால் மந்திரமும் இல்லைத் தந்திரமும் இல்லை.

பூசாரி இருந்தாலும் கோயிலின் மையம் வரையிலும், தெய்வத்தின் சந்நிதி வரையிலும் யாரும் செல்ல முடியும். எவரும் தெய்வத்தைத் தொட்டு அளைந்து தங்கள் உறவையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்தலாம். விலகி, எட்ட நின்று தொழவேண்டியதேயில்லை.

பொங்கலும் பூசையும் போக ஒவ்வொரு தெய்வத்திற்கும் குளிர்ச்சி வேறு நடந்தது. ஆடலும் பாடலும் நிரம்பிய கூத்தும் கதைப்பாட்டுகளும் நடந்தன.

எல்லாவற்றையும் ஊரவர்களே செய்தனர்.

நேர்த்தி என்று இந்தக் கடமையைச் சனங்கள் செய்தனர். இந்த நேர்த்தி பிறகு ஒவ்வொரு குடும்பத்தினதும் கடமை என்றாகியது. அப்படியே மரபாகியது.

சில கோயில்களில் ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்குரிய பூசை என்று ஒவ்வொன்றைத் தேர்ந்து எடுத்தன. கூத்தில் ஒரு பங்கு என்று ஆடும் கூத்திலும் ஒரு பங்கெடுத்து ஆடினர்.

இப்படியே கோயிலும் வாழ்வும் ஒன்றாக இருந்தது. ஆடிக்களிக்கும் கலைகளும் நன்றாகவே இருந்தன. எல்லாமே இனிதாக, நிறைவாக இருந்தன.

எல்லாக் கோயில்களும் மரங்களின் நிழலிலேயே குடிகொண்டிருந்தன. கீழே வேரின் வாசம். மேலே கிளைகளின் குடை நிழல். பருவங்களில் மலர்களின் தூவல். கனிகளின் பொழிவு. பறவைகளின் சங்கீதம். வெயிலும் மழையும் தடையின்றிக் கலக்கும் இயற்கையின் இணைதல்.

மரங்களில்லாமல் தெய்வங்களில்லை. இயற்கையை விலகி கடவுளர் செல்வதில்லை. சனங்களும்தான்.

வன்னியின் சிறப்பிது. வன்னியின் அடையாளமும் கூட.

நிழலின் கீழுறைந்த தெய்வங்கள் அழகானவை. எளியவை. எவரோடும் அந்நியோன்னியமாகக் கலந்து விடக்கூடியவை. எல்லா உயிர்களுக்கும் இடமளிப்பவை.

சில கோயில்கள் கல்லாலான கட்டிடங்களையும் ஓட்டுக்கூரையையும் கொண்டிருந்தாலும் அவை கூட மரங்களோடும் குளங்களோடும்  இணைந்ததாகவே இருந்தன.

எந்தக் கோயிலிலும் மந்திர உச்சாடனங்களிருக்கவில்லை. எந்தக்கோயிலுக்கும் ராஜகோபுரங்களோ, கலசங்களோ இருக்கவில்லை. எந்தக் கோயிலும் கும்பாபிஷேகத்தைக் கண்டதில்லை. எல்லாக் கோயில்களும் பொங்கலையே முக்கிய நிகழ்வாகக் கொண்டிருந்தன.

இதெல்லாவற்றுக்கும் ஒரு சூழ்ச்சி வந்தது.

சனங்களின் அறியாமையோடும் ஊர்களிலிருந்த பெரிய தலைகள் என்ற கனவான்களின் ஆசையினாலும் வந்தது ஒரு பேரழிவு.

ஒரு நோய் போல வந்து பரவியது பெருங்கோயிற் பண்பாடு.

பெருங்கோயிற் பண்பாடு வந்து பரவத்தொடங்க சிறுதெய்வங்கள் காணாமலாகின. காணாமலாக்கப்பட்டன.

சிறுதெய்வங்களைக் கட்டிக் கடத்திக் காணாமலாக்கினாற்தான் அந்த இடங்களில் பெருந்தெய்வங்களைக் குடியமர்த்த முடியும் என்றது ஆகமம்.

வற்றாப்பளையில் கண்ணகியைக் கட்டிக் கடத்தி, வெளியேற்றியது இப்படித்தான்.

இன்று கண்ணகி அங்கே காணாமலாக்கப்பட்ட தெய்வம்.

இப்போது அங்கே குடிகொண்டிருப்பது ராஜராஜேஸ்வரி.

புதிதாகக் குடியமர்த்தப்பட்ட ராஜராஜேஸ்வரிக்கே மூலஸ்தான இருப்பிடம்.

ராஜராஜேஸ்வரிக்கே ராஜகோபுரம். ராஜராஜேஸ்வரிக்கே நடக்கின்ற பூசையும் புனருத்தானமும் திருவிழாவும் அலங்காரமும்.

ஆனால், கண்ணகியின் பேரால்தான் நிதி திரட்டப்படுகிறது. கண்ணகியின் பேரால்தான் காணிக்கைகள் சேகரிக்கப்படுகின்றன.

அப்படிக் கண்ணகியின் பேரால் திரட்டப்படும் நிதியில், காணிக்கையில் ராஜராஜேஸ்வரிக்குப் பூசையும் நைவேத்தியமும் நடக்கிறது.

கண்ணகி சிறு தெய்வம். சிறுதெய்வத்துக்குக் கோபுரம் கிடையாது. மந்திர உச்சாடனம் இல்லை. கும்பாபிஷேகம் இல்லை.

இப்போது நீங்கள் கண்ணகியை வற்றாப்பளையில் காண வேண்டும் என்றால், ராஜகோபுரத்துக்கு வெளியே, மூலஸ்தானத்துக்கு வெளியே பார்க்க வேண்டும். தெற்குப் பக்கமாக ஒரு சிறிய அமைவிடத்தில் தனித்து விடப்பட்டிருக்கும் (விரட்டப்பட்டிருக்கும்) இடத்தில் பார்க்கலாம்.

மதுரையில் பாண்டியனால் இழைக்கப்பட்ட அநீதியில் கோவலனை இழந்த கண்ணகி, இங்கே வற்றாப்பளையில் நம்மவர்கள் இழைத்திருக்கும் அநீதியினால் தன்னிருப்பிடத்தையே இழந்திருக்கிறாள்.

வற்றாப்பளைக் கண்ணகியைப்போலத்தான் கிளிநொச்சி திருநகர் முத்துமாரி, புளியம்பொக்கணை நாகதம்பிரான், புதூர் நாகதம்பிரான், கற்குளி முத்துமாரி, நைனாமடு ஐயனார், இயக்கச்சி வல்லியக்கன் எல்லாம் மெல்ல மெல்ல வெளியேற்றப்பட்டு அங்கெல்லாம் பெருந்தெய்வங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன.

ஆம், இது பெருந்தெய்வங்களின் ஆக்கிரமிப்புக்காலம்.

பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் மட்டும்தான் ஆக்கிரமிப்பைச் செய்கின்றன என்றில்லை.

பிற மதங்கள் ஊடுருவிப் பரவி ஆக்கிரமிப்பைச் செய்கின்றன என்றுமில்லை.

சைவத்தின் பேராலும் இந்து என்ற அடையாளத்தின் பேராலும் இன்று பல விதமான ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன. ஒவ்வொரு படையெடுப்பிலும் பல விடயங்கள் காணாமல் போவதுண்டு. காணாமலாக்கப்படுவதுண்டு.

அப்படித்தான் வன்னியின்  சிறுதெய்வங்களும் அந்தத் தெய்வங்களோடிணைந்த வழிபாடும் பண்பாடுகளும் காணாமல் போகின்றன. காணாமலாக்கப்படுகின்றன.

இதற்கு நம்மிற் பலரும் பலியாகி விடுகின்றனர். இது தெரிந்தோ தெரியாமலோ நடந்து கொண்டிருக்கிறது.

இதைப்பற்றி விளக்கிக் கூறினாலும் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொள்வதற்கு யாரும் தயாரில்லை.

சிறு தெய்வங்களைப் பெருந்தெய்வங்கள் தின்றெழுவதைப்பற்றி கலாமணி ஒரு கதையை 1990 களில் எழுதியிருந்தார். வெளிச்சம் இதழில் அந்தக் கதை வெளியாகியிருந்தது. “வல்லமை தாராயோ” என்ற அந்தக் கதையில் அண்ணமார் என்ற தெய்வம் எப்படிப் பிள்ளையாராக மாற்றப்பட்டுப்  பேருருக்கொள்கிறார் என்பதைக் கலாமணி கலாபூர்வமாக விவரிப்பார்.

அண்ணமார் என்பது சாதிய அடையாளத்துக்குரிய தெய்வமாக இருப்பதால் அதை மாற்றி பிள்ளையாராக்கி விடுவதற்கு முயற்சிப்பதைப்பற்றிய நியாயத்தை சமூக யதார்த்தம் வலியுறுத்துகிறது.

ஆனால், அந்த யதார்த்தத்தை எதிர்கொள்வது வேறு. அண்ணமார் என்ற அடையாளத்தை இழப்பது வேறு. அடையாளத்தை இழப்பது என்பது ஆன்மாவை இழப்பதற்கு நிகர். வேர்களை இழப்பதற்குச் சமன். முகத்தை இழப்பது போலாகும் என்கிறது கதையின் மையத்தொனி.

இதுபோலத்தான் ஜெயமோகனின் மாடன் மோட்சமும்.

எளிய சனங்களின் சிறுதெய்வ வழிபாட்டுக்குரிய மாடன் எப்படிப் புதிய அரசியல் பண்பாட்டுச் சமூகச் சூழலில் பெருந்தெய்வமாக்கப்படுகிறார். பெருந்தெய்வப் பண்பாட்டுருவாக்கத்தின் அரசியலையும் அதனால் உண்டாகும் சிறுதெய்வத்தினரின் தோல்வியுறும் குரலையும் வலுவாகப்  பதிவு செய்கிறார் ஜெயமோகன்.

மாடன் என்ற சிறுதெய்வத்தைக் கட்டி வைத்து அந்த இடத்தில் பெருந்தெய்வத்தைப் பிரதிஸ்டை செய்கிறார்கள். பிறகு அங்கே பெருந்தெய்வத்துக்குரிய வழிபாடும் படையல்களுமே நடக்கின்றன. மாடனுக்கு இதெல்லாம் ஒததுக்கொள்ளவேயில்லை. மாடனுக்கு மதுவும் இறைச்சியுமே இஸ்டம். அதற்கெதற்குச் சர்க்கரைப் பொங்கல்? அது (மாடன்) தன்னுடைய நம்பியிடம் (பூசாரியிடம்) மதுவுக்கும் இறைச்சிக்குமாகக் கெஞ்சுகிறது. ஜெயமோகனின் சித்திரிப்பில் கேலியுமிருக்கும். துயரமும் இருக்கும்.

உண்மையும் அதுதான். பலவந்தப்படுத்தலின் மூலம் இன்னொன்றைத் திணிப்பதை மாடன் சகித்துக் கொள்ளக் கஸ்ரப்படுவதென்பது, நமது நிலையை ஒத்ததே.

கையறு நிலை. இந்தக் கையறு நிலையை இட்டுச் சிரிப்பதா அழுவதா?

ஆம், காணாமலாக்கப்படுவது நம் உறவுகள் மட்டுமல்ல, நம்முடைய தெய்வங்களும்தான்.

Share:

Author: theneeweb