புதிய தாக்குதல் அச்சுறுத்தல்: தேவாலயங்களில் பிரார்த்தனைக் கூட்டங்கள் மீண்டும் ரத்து

ஈஸ்டர் பண்டிகை தொடர் குண்டு வெடிப்புக்குப் பிறகு அந்த நாட்டு தேவாலயங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுப் பிரார்த்தனைக் கூட்டங்கள்,  மீண்டும் ரத்து செய்யப்பட்டன.

தேவாலயங்களில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் உள்ளதாக கிடைத்த உளவுத் தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை கத்தோலிக்க சபை செய்தித் தொடர்பாளர் எட்மண்ட் திலகரத்னே வியாழக்கிழமை கூறியதாவது: தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக் கூட்டங்கள், இந்த வாரம் மீண்டும் நடைபெறுவதாக இருந்தது.

எனினும், அத்தகைய கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்று தலைமை பாதிரியார் மால்கம் ரஞ்சித் அறிவுறுத்தியுள்ளார் என்று திலகரத்னே தெரிவித்தார்.

lankaகிறிஸ்தவப் பள்ளிகளும் தொடர்ந்து மூடல்: இதற்கிடையே, ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பிறகு மூடப்பட்டுள்ள கிறிஸ்தவப் பள்ளிகளை வரும் திங்கள்கிழமை மீண்டும் திறக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக கத்தோலிக்க பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளி வட்டாரங்கள் கூறுகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, கத்தோலிக்க பள்ளிகளை நாங்கள் வரும் திங்கள்கிழமை திறக்கப் போவதில்லை என்று தெரிவித்தன.

பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலேயே பள்ளிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கல்வித் துறை அமைச்சர் அகில விராஜ் கரியவாசம் தெரிவித்தார்.
இலங்கையில், கடந்த மாதம் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தின்போது கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் என 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அதையடுத்து, நாடு முழுவதும்  கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.

இந்தச் சூழலில், தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது பிரார்த்தனைக் கூட்டங்கள், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் நடத்தப்படும் என்று இலங்கை கத்தோலிக்க தலைமை பாதிரியார் மால்கம் ரஞ்சித் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், அந்தப் பிரார்த்தனைக் கூட்டங்கள் மீண்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share:

Author: theneeweb