இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் புகைப்படம் வெளியீடு

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகள் யார் யார் என இலங்கை அரசு புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று  இலங்கையில் கிருத்துவ தேவாலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. அங்குள்ள என்.டி.ஜே அமைப்புக்கும் இதில் தொடர்புள்ளதாக இலங்கை அரசு அந்த அமைப்பையும் தடை செய்தது.

குண்டு வெடிப்பு தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை, தொடர் விசாரணை என நூற்றுக்கணக்கானோரை பிடித்து இலங்கை புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இண்டர்போல் உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணையில் குதித்துள்ளன.

இலங்கை குண்டுவெடிப்பின் எதிரொலியாக இந்தியாவிலும் உளவுத்துறை, ரா, என்.ஐ.ஏ அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இலங்கைக்கு அருகே உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் என்.ஐ.ஏ முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது.

குண்டு வெடிப்பில் உயிரிழந்த தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கு தலைவனாக செயல்பட்டது ஜக்ரான் பின் ஹாசிம் என்ற தீவிரவாதி என்பது தெரியவந்தது. ஜக்ரான் பின் ஹாசிமும் இந்த தாக்குதலில் பலியானான்.

சில தீவிரவாதிகள் தப்பிவிட்டதாக இலங்கை அரசின் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் புகைப்படங்களை வெளியிட்டு தேடிவருகின்றனர். இந்நிலையில் எங்கெல்லாம் குண்டு வெடித்தது, யார், யார் அங்கு குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்தனர் என்கிற பட்டியலை புகைப்படத்துடன் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

Share:

Author: theneeweb