எந்தவொரு சவாலுக்கு மத்தியிலும் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படும்

பயங்கரவாதம் நிரந்தரமாக ஒழிக்கப்படும் என்றும் எந்தவொரு சவாலுக்கு மத்தியிலும் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் பலவீனமடைய இடமளிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

சர்வதேச பயங்கரவாதம், சர்வதேச போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் பாதாள உலகம் ஆகிய அனைத்தும் ஒரே வலயமைப்பாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், நாட்டுக்கு எதிரான இந்த அனைத்து சவால்களும் முறியடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

இந்த பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் பாரிய நிகழ்ச்சித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயேயாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதி துன்பியல் சம்பவம் இடம்பெற்றிருக்காவிட்டால் போதைப்பொருளுக்கு எதிரான நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது வெற்றிகரமான பல பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்கும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், முறையானதும் நடைமுறை சாத்தியமானதுமான திட்டங்களின் மூலம் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

போதைப்பொருளை பயன்படுத்தியதன் காரணத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இள வயதினரை போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட பாரிய குற்றவாளிகளுடன் ஒன்றாக வைத்திருக்ககூடாதென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அதன் மூலம் அவர்களும் பாரிய குற்றங்களில் ஈடுபடுவதற்கு தூண்டப்படக்கூடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் அந்த இளைஞர்களை தனியாக புனர்வாழ்வளிக்க வேண்டியதன் அவசியத்தையும் அதன்போது அவர்களது வயது மட்டம், குற்றத்தின் தன்மை, புனர்வாழ்வளிக்கப்படும் காலம் போன்ற விடயங்களை கவனத்திற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

சங்கைக்குரிய குப்பியாவத்தே போதானந்த தேரர், அமைச்சர் தலதா அத்துகோரள, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள், பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Share:

Author: theneeweb