தகவல் பரிமாற்றத்தில் இடம்பெற்ற காலதாமதம் அரசின் வெளிப்படையற்ற செயற்பாடு அழிவிற்கு காரணம்:ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று முன்னெடுக்கப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கும், அவற்றால் அப்பாவி பொது மக்கள் கொள்ளப்பட்டமைக்கும் தகவல் பரிமாற்றத்தில் இடம்பெற்ற காலதாமதம்,மற்றும் வெளிப்படையற்ற அரச செயற்பாடுகளின் பிரதிவிளைவுகளே காரணம் என்று ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இது தொடர்பாக நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த உயிர்த்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற நாட்டையே உலுக்கிய பலரைக் குடும்பங்களாகவும் சமூகங்களாகவும் காவுகொடுத்த சம்பவம் தொடர்பாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் வேதனையையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றது. இந்த பயங்கரவாத நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு இவ்வாறான நடவடிக்கைகளுக்கு வழியமைத்துக் கொடுப்பதற்கு ஏதுவாயிருந்த காரணிகள் மீது கவனத்தை செலுத்தப்பட வேண்டும்.

தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளமை தொடர்பாக எதிர்வுகூறல் புலனாய்வு அறிக்கை பாதுகாப்புத்தரப்பினரினால், நாட்டின் உயர்மட்டத்தினரிடம் சமர்ப்பித்திருந்த போதிலும் தகவல்களை வழங்கக் கூடிய பதவணி அரச தரப்பினர் செயற்பட்ட விதமும் அரச தலைமைத்துவம் எடுத்த நடவடிக்கைகளும் பல்வேறு கேள்விகளை உருவாக்குகின்றன.

அனைத்து அரச அமைப்புக்களுடனும் அதிகமான தகவல்களை பகிர்ந்து கொள்வதே ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் நீண்டகால நிலைப்பாடாக இருந்து வருகின்றது.

சட்டரீதியான விதிகள் மற்றும் நிறுவனங்களின் நடைமுறை குறியீடுகள் என்பவற்றின் மூலம் வலுவூட்டப்பட்டுள்ள இரகசியத்தன்மை பேணும் தற்கால கலாசாரத்தின் மூலம் குறுகிய நோக்கத்துடன் அரச நிறுவனங்கள் தத்தமது கட்டுப்பாட்டு எல்லைகளுக்குள் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதாகவே அமைகிறது.

இந்த நிலைமை காரணமாக ஒரு பிரச்சினை தொடர்பாக போட்டிபோட்டுக் கொண்டு விமர்சனங்களை மேற்கொள்ளும் இரண்டு நிறுவனங்கள் தமக்கிடையில் தகவல்களை பரிமாரிக் கொள்வதில் தயக்கம் காட்டும் சந்தர்ப்பங்களை எங்களால் காணக்கூடியதாக இருப்பதுடன் அது பொதுமக்களுக்கு எதிரான ஒரு செயற்பாடாகவே உள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஊழல் மேற்கொள்ளப்படலாம் என்பதுடன் குறிப்பாக கொள்முதல் தொடர்பில் ஊழல் இடம்பெறலாம் என்பதை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

கடந்த காலங்களில் பல்வேறு தடவைகளில்,மோசடியான கொள்முதல்கள், விலைமனுக்கோரலில் இடம் பெறும் மோசடிகள் மற்றும் முரண்பட்டநலன் என்பன இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயங்களை அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தகவல் பரிமாற்றத்தில் இடம்பெற்ற காலதாமதம், மற்றும் வெளிப்படையற்ற அரச செயற்பாடுகளின் பிரதிவிளைவுகளே ஏற்பட்ட பேரழிவு விளக்குகின்றது.உள்ளக தொடர்பாடலுடனான பகிர்ந்தளிக்கப்பட்ட நோக்கத்தையுடைய திறந்த அரசை வேண்டிநிற்கிறது.

இதற்கு, 21ம் நூற்றாண்டின் நடைமுறைகளுக்கேற்ப சிவில் சேவைகள் நடபடிமுறைகளை சீர்திருத்த வேண்டிய தேவையை உணர்த்துகிறது.

Share:

Author: theneeweb