வாள்களுடன் திரிந்த கும்பல்; ஒருவர் கைது; இருவருக்கு வலைவீச்சு

யாழ்.நகர்,  திருநெல்வேலி ஆகிய பகுதிகளில், வாள்களுடன் சென்று வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதுடன் வீதியில் நடமாடிய சிலரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய குழுவைச் சேர்ந்த ஒருவரை, யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர், தேடப்பட்டு வருகின்றனர்.

யாழ். நகரில் மணத்தறை ஒழுங்கை, நாவலர் வீதி உட்பட பல இடங்களில், கடந்த ஞாயிறு, திங்கட்கிழமை இரவு வேளையில், மூவர் கொண்ட குழு ஒன்று, வாள்களுடன் நடமாடியது.

இந்தக் குழு வீதியில் சென்றவர்களை வாளால் வெட்டியும் மிரட்டியும் அடாவடியில் ஈடுபட்டதுடன், கடைகளுக்குச் சென்று,வாள்களைக் காண்பித்துக் கொள்ளையிலும் ஈடுபட்டது.

சம்பவங்கள் தொடர்பில், சீசீடிவியின் பதிவுகளை வைத்து, யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளுக்கு அமைவாக, அந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ள பொலிஸார், கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தேடப்பட்டு வருவதாகவும் கூறினர்.

Share:

Author: theneeweb