பாலங்களைத் தகர்க்க பயங்கரவாதிகள் சதி: புலனாய்வுத்துறை எச்சரிக்கை

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பாலங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறைப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்படுகிறது.

கொழும்பு நகரில் உள்ள நுழைவுப் பாலங்களையும், நகரின் வடக்குப் பகுதியிலுள்ள தொங்கு பாலத்தையும் வெடிவைத்துத் தகர்க்க திட்டமிடப்படுகிறது. ஈஸ்டர் தினத்தின்போது தொடர் குண்டுவெடிப்பு நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புதான் இந்தத் தாக்குதலையும் நடத்த திட்டம் தீட்டியுள்ளது.

வரும் 6-ஆம் தேதிவாக்கில் இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதற்காக, ராணுவமும், அதன் கிளை அமைப்புகளும் காவல்துறையினரின் உதவியுடன் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்கும், அவர்களது வெடிபொருள்கள், ஆயுதங்கள் முதலானவற்றை கைப்பற்றுவதற்காகவும்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளோம்.
தேவையான அளவுக்கு கூடுதல் படையினரை இந்தப் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில், கடந்த மாதம் 21-ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று 3 தேவாலயங்களிலும், 3 நட்சத்திர விடுதிகளிலும் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டன.
இதில், 253 பேர் உயிரிழந்தனர்; சுமார் 500 பேர் காயமடைந்தனர்.இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்தத் தாக்குதல் குறித்து ஏற்கெனவே உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்தும், அதனைத் தடுப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க இலங்கை அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.இந்தச் சூழலில், புதிதாக விடுக்கப்பட்டுள்ள தாக்குதல் எச்சரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Author: theneeweb