ஈஸ்டர் தாக்குதல்களின் திரைமறைவில் – மிஹாத்.

ஈஸ்டர் படுகொலைக்குப் பிறகு இலங்கையில் உருவாகியிருக்கும் முஸ்லிம் வெறுப்பு சூழலானது திடீரென பிறந்த ஒன்றல்ல. அது கடந்த ஆட்சியின் நடுப்பகுதியில் திட்டமிட்டு உருவாக்கம் பெற்று படிப்படியாக நிறுவனமயப்பட்டதாகும்.

அது பற்றி அலசுவதற்கு முன்னர் சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரவலான அவதானத்தைப் பெற்றிருக்கும் தொழிற்சங்க பிரதானி ஒருவரின் பேச்சு முக்கியமான விடயம் என கருதுகிறேன். அதில் ஈஸ்டர் தின பயங்கரவாத செயல்களுக்குப் பின்னால் உள்ள ஒரு தனி நபர் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்க எத்தனிக்கிறார். வெவ்வேறு சமூகங்களிலும் தமக்கு வேண்டிய விதத்தில் மத விரோத வெறித்தனங்களைச் செய்யக் கூடிய குழுக்களின் மூலம் மக்களிடையே குரோதங்களை விதைத்து சமூகங்களைத் துண்டாடி விரிசலாக்கி விட்டு இந்த அரசாங்கத்தின் மீது பழி போட ஒருவர் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

அவராகவே மக்களுக்குள் வன்செயலைத் தூண்டுவார். அவராகவே சமூகங்கள் மீது வெறுப்பை விதைப்பார். அவராகவே சமூக அமைதியைக் குலைப்பார். இறுதியில் தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே நாட்டில் அமைதியை கொண்டு வர முடியும் என பிரச்சாரம் செய்வார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்த படி இருக்கிறது.

மேற்படி குற்றச்சாட்டுகள் யாவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரை நோக்கியே முன்வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததும் இலங்கையின் உள்நாட்டு அரசியலானது அரசியல் தீர்வு எனும் திசை நோக்கி செல்ல வேண்டிய அவசியப்பாடு இருந்தது. இலங்கையின் அப்போதைய சிறுபான்மை விரோத அரசாங்கமானது புலிகளை அழித்து விட்ட நிலையில் தீர்வு வழங்குவது அவசியமற்றது என நினைத்தது. அதனால் உள்நாட்டின் அமைதியான சூழலைச் சீர்குலைத்தால் மாத்திரமே தீர்வை விலக்கி வைத்து விட்டு மக்களின் கவனங்களையும் திசை திருப்பி வாழ்க்கைச் சுமை குறித்த விழிப்புணர்வையும் கலைத்து விட முடியும் என எண்ணியது. அந்த தந்திரோபாயத்தின் செயல் வடிவமாக கொண்டு வரப்பட்டதுதான் முஸ்லிம் வெறுப்பரசியல்.

அதற்கென மூன்று வகையான குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒரு குழு தென்னிலங்கையைச் சேர்ந்த பௌத்த குரு மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பையும் கலவரங்களையும் தூண்டி விடுவதாக அமைக்கப்பட்டது. மற்றொரு குழு முஸ்லிம் சமுதாயத்துக்குள்ளிருந்து தீவிரவாதத்தை முன்னிறுத்தும் வகையாக உருவாக்கப்பட்டது. இன்னொரு குழு முஸ்லிம் வெறுப்பையும் ஹிந்து மத வெறியையும் தூண்டும் சாயல் கொண்டதாகவும் அமையப் பெற்றது. புலிகளின் அழிவுக்குப் பிறகு அரசியல் அரங்கில் பேசு பொருளற்றிருந்த தரப்பினர் அனைவருக்கும் விடயதானம் கிடைத்தது. ஆனால் மக்களுக்கிடையிலான பரஸ்பர தொடர்புகள் நிர்மூலமாகியது.

அக்காலத்தில் ஹலால் பிரச்சினை, கிறீஸ்மேன் பிரச்சினை, பேருவலை கலவரம், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் அழிப்பு என பல அட்டூழியங்களின் பின்னணியில் இந்தக் குழுக்களின் பங்களிப்புகள் இருந்தன. அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் நிலமைகள் ஓரளவு சீரடைந்தன.

புதிய சூழலை சமூகங்களுக்கு இடையிலான நட்புக் காலமாக மாற்றி விட பல்வேறு சிவில் அமைப்புகளும் விரும்பின. கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெருமளவான சிங்கள மக்களுக்கு பல முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் களத்தில் நின்று உதவி புரிந்தன. அதன் மூலம் முஸ்லிம்கள் மீது சிங்கள மக்களுக்கு நேயம் உருவானது. புதிய அரசாங்கம் அமைவதற்குத் துணை நின்ற பௌத்த மத குரு மாதுலுவாவே சோபித தேரரின் இறப்பின் போது அவரது இறுதிக் கிரியையில் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டமை கூட சிங்கள மக்கள் மத்தியில் நல்லுறவை வளர்க்கும் காரியமாக அமைந்தது. இவை ரணில் அரசாங்கத்தின் பாராட்டுக்குரிய அம்சமாகத் திகழ்ந்தது.

ஆனால் சிறுபான்மை வெறுப்பில் அரசியல் அதிகாரத்தை அடைய திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்தச் சூழல் அசௌகரியங்களை தரவல்லதாகவே இருந்தது. அதனால் திகன கலவரத்தை உருவாக்கி சமநிலையைக் குலைத்தனர். அதன் பின்னர் கலவரத்தில் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டதான சம்பவங்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் கைது செய்யப்பட்ட போது பெரும்பான்மை சமூகம் குற்றவாளிகளாக உருவகிக்கப்பட்டது. இந்த அவப் பெயரைத் துடைக்க வேண்டிய தருணத்தை முஸ்லிம் வெறுப்பாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இடைப்பட்ட காலத்தில் அவர்கள் சிறுபான்மை சமூகங்களோடு நல்லுறவுடன் நடந்து கொள்வது போன்ற ஊடகப் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தான் வருவதை பெரும்பான்மை சமூகம் தீவிரமாக ஆதரிப்பதென்றால் தான் ஒரு மீட்பர் போன்ற தோற்றம் உருவாக்கப்பட வேண்டும் எனும் தேவையும் எழுந்தது. அது போலவே தன்னை ஆதரித்து வாக்களிக்காமல் விலகிச் செயல்படக் கூடிய முஸ்லிம் சமூகத்தை புதிய வெறுப்புச் சூழல் ஒன்றுக்குள் சிக்க வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் எனும் தேவையும் இருந்திருக்கக் கூடும். அந்த நோக்கங்களின் அறுவடைதான் ஈஸ்டர் படுகொலை என்பது போன்றதொரு மறைமுக வியாக்கியானத்தைத் தருவதாகவே குறிப்பிட்ட தொழிற்சங்க தலைவரின் உரை அமைந்திருந்தது.

குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பெருமளவு பணமும், வேறு உதவிகளும் உள்நாட்டில் வைத்து பல்வேறு வழிகளில் வழங்கப்பட்டதற்கு சான்றுகள் இருப்பதாக தனது உரையில் தொழிற்சங்க பிரதானி கூறுகிறார். இதனை முந்திய கால நிலவரங்களின் பின்னணியோடு உணரவும் முடியும்.

உள்நாட்டு பயங்கரவாதிகளின் கோரச் செயலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பொன்று உரிமை கோரியுள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் எந்த வகையில் ஊர்ஜிதமானது என்பதை உளவுத்துறைகள்தான் நிரூபிக்க வேண்டும்.

ஆனாலும் இந்தக் கொடுஞ் செயலின் தன்மைகளை நோக்கும் போது உள்ளூர் அரசியல் தேவை ஒன்றுக்கான திட்டம் திரை மறைவில் இருந்திருக்காது என நம்ப இயலவில்லை.
Share:

Author: theneeweb