மீண்டும் படரும் காரிருள்

காலச்சுவடு தலையங்கம் —

 

இலங்கையில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் குண்டு வெடிப்புகளோடு இரத்த ஆறு பெருக்கெடுத்துள்ளது. பத்தாண்டுகள் நீடித்த அமைதி ஒரே நாளில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்து உயிர்தெழுந்ததாக நம்பப்படும் உயிர்த்த ஞாயிறன்று வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடந்து கொண்டிருந்தவேளை கிறிஸ்துவின் சந்நிதானத்திலேயே இரத்தப்பலிகள் நடந்தேறியுள்ளன. மூன்று தேவாலயங்களிலும் உல்லாச விடுதிகள் மூன்று  உட்பட வேறு இடங்களிலும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களினால் குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்பட 321 க்கு மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். 450 பேருக்கு மேல் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 35 பேர் வெளிநாட்டினர். குழந்தைகள் 45. உயிர்த்த ஞாயிறுப்பிரார்த்தனைகளில் ஈடுபடுவோரையும் ஈஸ்டர் விடுமுறையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்திருப்போரையுமே தாக்குதலாளிகள் இலக்கு வைத்துள்ளனர். படையினரோ அரசுப் பிரதிநிதிகளோ குறிவைக்கப்படவில்லை. ஆகவே முற்று முழுதாகப் பொது மக்களை இலக்கு வைத்த தாக்குதல்கள் இவை. இலங்கையை மட்டுமல்ல, உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் இந்தச் சம்பவம் பயங்கரவாதத்தின் உச்சமாகும்.

இந்தத் தாக்குதல்களினால் இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம், மக்களின் இயல்பு வாழ்க்கை அனைத்தும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. மிகத் துரிதமாக வளர்ச்சியடைந்து வந்த சுற்றுலாத்துறையும் போர் முடிந்தபிறகு எதிர்பார்க்கப்பட்ட அமைதியும் நம்பிக்கையும் ஒரே நாளில் சிதறடிக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய போர் வலிகளையும் மரணத்துயர்களையும் தங்கள் சக்திக்கு அப்பால் சென்று அனுபவித்தவர்கள் இலங்கை மக்கள். எத்தனையோ தருணங்களில் எந்த வழியுமில்லாமல் தனித்து விடப்பட்ட அனுபவங்களையும் கஸ்டங்களையும் சந்தித்தவர்கள். அவறான துயர இருளிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு பேரிருள் என்றால்?

இலங்கையில் அபாயகரமான தாக்குதல்கள் நிகழ்வதற்கு வாய்ப்புண்டு என தமது உளவுத்துறை ஏற்கனவே இலங்கையை எச்சரித்திருந்ததாக இந்திய அரசு கூறியுள்ளது. இலங்கையின் புலனாய்வுத்துறையும் இதைக் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எனினும் உரிய கவனமெடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தவறியுள்ளது இலங்கை அரசு. இதன் விளைவே இத்தனை உயிரிழப்புகளும் அனர்த்தங்களும். இப்பொழுது பிந்திய நிலையில் இலங்கை அரசு நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் இழப்புகளை ஈடுசெய்யாது. புலனாய்வு எச்சரிக்கைகள் கிடைத்திருந்தும் அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியது ஏன்? இதற்குரிய பதிலைச் சொல்வதற்கு இன்னும் அரச தலைவர்கள் தயாரில்லை. பதிலாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பாதுகாப்புக்கும் முப்படைகளுக்கும் பொறுப்பானவர். அவரே பதில் சொல்ல வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டுகிறார். ஜனாதிபதியையும் பிரதமரையும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ குற்றம் சாட்டுகிறார். இப்படி ஆளாளுக்குக் குற்றச் சாட்டுகளை முன்வைத்து தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளவே ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றனர். இதற்குள்ளும் அரசியல் லாபம் தேடுவதே இவர்களுடைய நோக்கமாகும். நடந்திருக்கும் அனர்த்தமோ மிகப் பெரியது. மக்களிடத்திலே உண்டாகியிருக்கும் அச்சம் அதைவிடப் பெரியது. இதற்கெல்லாம் பரிகாரம் காண்பதற்கு யாருமே இல்லை.

மூன்று நாட்களின் பின்பு இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியிருக்கிறது. ஆனால், அரசு கைது செய்திருக்கும் சந்தேக நபர்களையும் தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படுவோரையும் ஆதாரமாகக் கொண்டு பார்த்தால், இந்தத் தாக்குதல் இலங்கையில் உள்ள “தேசிய தௌஹீத் ஜமாஅத்” தினால் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆனாலும் அரசு இதை இன்னும் உறுதி செய்யவில்லை. தொடர்ந்து தேடுதல்களும் விசாரணைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரையான தகவல்ளைத் தொகுத்துப்பார்க்கும்போது இஸ்லாமியத் தீவிரவாதப் பிரிவினரே தாக்குதல்களின் சூத்திரதாரிகள். ஆனால், இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இவர்களால் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. முஸ்லிம்களைச் சந்தேகத்தோடு நோக்கும் தன்மை பொதுவாகவே உருவாகியிருக்கிறது. இதன்விளைவாக இலங்கையில் முஸ்லிம்கள் வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் போக்குத் தவறானதாகும். ஒரு குறிப்பிட்ட குழுவினரின் தவறான செயல்களுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் எந்த அடிப்படையிலும் பொறுப்பாக்க முற்படுவது நியாயமற்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களோடு ஏனையவர்கள் நெருக்கமாக வேண்டும். இல்லையெனில் இந்தத் தனிமைப்படுத்தலின் உளவியில் எதிர்காலத்தில் மேலும் பல எதிர்விளைவுகளையே உண்டாக்கும்.

நீடித்த யுத்தம் முடிந்த பிறகு இலங்கை மக்கள் நிலையான அமைதியையும் ஜனநாயக அடிப்படையிலான சகஜவாழ்க்கையையும் விரும்பியபோதும் போருக்குப் பிந்திய நிலைமாறுகாலகட்ட நீதிச் செயற்பாடுகள் எதுவும் உரியவகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொறுப்புக்கூறல், பகை மறப்பு, சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துதல், ஐக்கியத்துக்கான விசுவாசமான வேலைகள், சமாதானத்துக்கான ஏற்பாடுகள், அரசியமைப்புத்திருத்தம், அரசியல் தீர்வு என எதுவும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. தொடர்ந்தும் சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனையின் வழியிலேயே அரசு செயற்பட்டது. இதற்கு நிகராக, குறுகிய அரசியல் லாபங்களுக்காகப் பிற சமூகங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் தமது சமூகங்களை இன, மத அடிப்படையிலேயே வழிநடத்தினர். இந்தப் போக்கு ஆபத்தான விளைவுகளையே உண்டாக்கப்போகிறது எனப் பலரும் எச்சரித்திருந்தனர். ஆயினும் அதிகாரமுடைய மேல்நிலைச் சக்திகளும் பெரும்பாலான ஊடகங்களும்  அவற்றைக் கவனத்திற் கொள்ளவில்லை. இன, மத அடிப்படையில் வன்முறைகளைத் தூண்டுவோருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்துக்கொண்டே சமனிலையில் அதற்கான அடிப்படைகளைப் பராமரித்தது. இதனால் ஒவ்வொரு சமூகங்களும் மத, இன ரீதியாகப்  பிளவுண்டு தீவிரப்படும் நிலை வளர்ச்சியடைந்தது. இது பகை மறப்பிற்கு நேரெதிராகப் பகை வளர்ப்பாகவே அமைந்தது.

இதேவேளை கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழ், சிங்களத் தரப்புகளினால் முஸ்லிம்கள் கூடுதலான நெருக்கடிகளைச் சந்தித்து வந்துள்ளனர். யுத்தத்திற்குப்பிறகு மேலும் அவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகினர். இது, முஸ்லிம்கள் பலமடைய வேண்டும். தமது எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை  அவர்களிடத்திலே உருவாக்கியது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி இஸ்லாமியத் தீவிரநிலைச் சக்திகள், சூழலுக்குப் பொருந்தாத அரேபிய அடையாளத்தையும் அரசியலையும் நிலை நிறுத்தும் வகையில் விஷச்செடிகளை வளர்க்க முயற்சித்தன. இதையிட்டுக் கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் முஸ்லிம்களுக்குள் ஏற்பட்டு வந்த தீவிர மாற்றங்களைக் குறித்து முஸ்லிம்களிடத்திலேயே உள்ள ஜனநாயக சக்திகளும் நியாயமாகச் சிந்திப்போரும் கவலைகளை வெளிப்படுத்தி வந்தனர். சுதேசப் பண்பாட்டை நசித்து, அரேபியப் பண்பாட்டை மேவச்செய்யும் காரியங்கள் நிச்சயமாகத் தீய விளைவுகளுக்கே இட்டுச்செல்லும் என்று அவர்கள் எச்சரித்தனர். எனினும் அந்தக் குரல்கள் கவனம்பெறவில்லை. இவற்றின் விளைவே இன்று இத்தகைய பேரழிவு நிலையாகும். இதை இனியும் இந்த நிலையில் விட்டுச் செல்ல முடியாது என்பதை ஏற்பட்டிருக்கும் நிலைமைகள் வலியுறுத்துகின்றன.

இந்தத் தாக்குதல்கள் மிகத்திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் நடந்திருக்கின்றன என்பது தெளிவு. இவ்வாறு திட்டமிடப்படுவதற்குரிய கள நிலையும் அவகாசமும் தாக்குதலாளிகளுக்கு எவ்வாறு கிடைத்தது? தாக்குதலாளிகளோடும் தாக்குதல்களோடும் தொடர்புபட்ட சக்திகள் எவை? அவை எப்படிச் செயற்பட்டுள்ளன? என்பதெல்லாம் கண்டறியப்பட வேண்டும். அதேவேளை பொதுமக்களைக் கொல்லும் நோக்கோடு இத்தகைய தற்கொலைத் தாக்குதலை நடத்துவோரின் உளவியலைக்குறித்தும் ஆழமாக ஆராய வேண்டும். அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வது அவசியம். அதுவே மக்களுக்குரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு  உதவக்கூடியது.

இந்தத் தாக்குதல்களோடு சம்மந்தப்பட்டவர்களாகச் சந்தேகிக்கப்படுவோரில் சிலர் ஏற்கனவே வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய விடுவிப்பிற்குப்பின்னால் அரசியல் தலையீடுகள் இருந்தாக கடந்தகால அவதானிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த அரசியல் தலையீடுகளின் பின்னணி என்ன? இதை இப்போது  மேற்கொள்ளப்படும் விசாரணைகள் கவனத்திற் கொள்ளுமா? அதில் கண்டடையப்படும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற கேள்விகளுக்குப் பதில் வேண்டும்.

இந்தத் தாக்குதல்களோடு தொடர்புபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இன்னொரு விடயம், போதைப்பொருட் கடத்தலாகும். இலங்கையில் யுத்தத்துக்குப் பிந்திய சூழலானது போதைப்பொருள் வாணிபம், போதைப்பொருட் பாவனை ஆகியவற்றில் உச்சநிலையை எட்டியிருந்தது. இதில் அரசியல் உயர் மட்டங்களின் கைகள் சம்மந்தப்பட்டுள்ளன. அவர்களை அரசாங்கம் தண்டிக்குமா? என்ற பகிரங்கக் கேள்விகளும் உள்ளன. தினமும் போதைப்பொருள் இலங்கைக்குள் வரும் வழியைக் கண்டறிய முடியாமல் அரசாங்கம் தவிக்கும்போது தாக்குதலாளிகளுக்கான வெடிப்பொருட்களும் வழிகாட்டல்களும் கிடைப்பதை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? மிகப்பலமாக இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒடுக்கி அழித்த நினைப்போடிருந்த அரசுக்கு இந்தத் தாக்குதல்களும் போதைப்பொருள் கடத்தல்களும் பெரும் சவாலே. இதை எப்படி அரசாங்கம் எதிர்கொள்ளப்போகிறது? இதற்காக  பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் முற்படக்கூடும். மேலும் புதிய சட்டங்களை இயற்றலாம். அதனுடைய சிந்தனை முறை அப்படித்தான் இருக்கும். ஆனால், அதெல்லாம் நரகத்தை நாட்டில் இறக்குவதற்கே சமனாகும். பதிலாக பல்லின சமத்துவ அடிப்படையில் அனைத்துச் சமூகங்களுக்கும் இடையிலான சமனிலைகளை உருவாக்குவதன் மூலம் இடைவெளிகளைக் குறைக்க முடியும். அந்த இடைவெளியில் ஏற்பட்டிருக்கும் கொதிப்பையும் தணிக்கலாம். அதுவே நிரந்தர அமைதிக்கும் நிரந்தரச் சமாதானத்துக்குமான வழியாகும். அதுவே உண்மையான சொர்க்கத்தை மண்ணில் உண்டாக்கும்.

பூமியின் சொர்க்கம் இலங்கைத்தீவு என்பது உலக மொழி. இரத்தம் சிந்தும் நிலையிலிருந்து அதை மீட்பதே இலங்கைக்கு – அந்தச் சொர்க்கத்துக்கு – வழி.

 

Share:

Author: theneeweb