இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல் – போலீஸ் ஊரடங்கு சட்டம் அமல்

நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட பெரும் மோதல் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு – போருதொட்டை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த மோதலால் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து போலீஸ் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நாளை காலை ஏழு மணி வரை நீடிக்கும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் போலீஸ் விசேட அதிரடி பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

போருதொட்டைக்கான அனைத்துப் பாதைகளும் வன்முறையாளர்களால் சூழப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நீர்கொழும்பில் இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

BBC

Share:

Author: theneeweb