வடக்கு கிழக்கில் பதற்றத்ததை ஏற்படுத்தாதீர்கள் நான்கு மறைமாவட்ட ஆயர்கள் கூட்டாக கோரிக்கை

 

அசாதாரண நிலைமைகளால் பல்வேறு நெருக்கடிக்குள்ளாகிய அனுவத்தினை வடக்கு கிழக்கு மக்கள் கொண்டிருக்கின்றார்கள். தற்போது ஏற்பட்டுள்ள தாக்குதல் சம்பவங்கள் அதனைத்தொடர்ந்து இடம்பெறுகின்ற தேடுதல்கள், சுற்றிவளைப்புக்கள் ஆகியன பாதிப்புற்ற மக்கள் மத்தியில் மீண்டும் நிலைமைகள் மோசடைந்து விடுமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்துகின்றது.

ஆகவே பதற்றமான சூழல்களை வடக்கு கிழக்கில் உருவாக்காது இயல்புவாழ்க்கையை உடன் உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுகின்றோம் என்று யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மறைமாவட்ட ஆயர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நடைபெற்று வருகின்ற தேடுதல்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்தும் இயல்புநிலையை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக கருத்துப்பரிமாற்றத்தின் போதே அவர்கள் இவ்வாறுதெரிவித்தார்கள்.

அவை வருமாறு,

யாழ் மறைமாவட்ட ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவிக்கையில், கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவங்களால் ஒட்டுமொத்தமாக முழு நாட்டு மக்களும் அச்சமடைந்துள்ளனர்.

விசேடமாக, கடந்த காலங்களில் நீடித்திருந்த அசாதாரண சூழல்களில் வடக்கு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருந்தார்கள். அந்தவகையில் மேற்படி தாக்குதல்களால் மீண்டும் வடக்கில் அவ்வாறான நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்ற இயல்பான அச்சம் அவர்களின் மனதுக்குள் எழுந்துள்ளது.

அந்த மக்களுடன் நேரடியாக கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றபோது என்னால் அதனை உணர முடிகின்றது. மக்கள் இவ்வாறு பதற்றமான சூழலுக்குள் தள்ளப்படுகின்றமையானது கவலை அளிக்கும் செயற்பாடாகும். வட பகுதியில் பொதுமக்கள் அவ்வாறான அச்சத்துடன் இருக்கும் நிலையொன்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அதீத சிரத்தை எடுத்தவனாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை செய்து வருகின்றேன் என்றார்.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவிக்கையில், தற்கொலைக் குண்டு வெடிப்புக்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து தேடுதல்கள், சுற்றிவளைப்புக்கள் நடைபெற்று வருவதால் அனைத்து மக்களுமே ஒருவிதமான பதற்றத்துடன் தான் இருக்கின்றார்கள். குண்டு தாக்குதலுக்கு முன்னரான காலத்தில் இருந்த நிலைமைகள் காணமல்போயுள்ளன.

ஆகவே மக்களை mதொடர்ந்தும் அச்சத்துக்குள்ளாக்கும் பதற்றமான நிலைமையை தொடர்ந்தும் வைத்திருக்ககூடாது. மட்டக்களப்பில் தற்போதுள்ள தேவாலயங்களில் காலையும் மாலையும் இருநேர வழிபாடுகள் நடைபெறுகின்றன. வுழிபாடுகளில் பங்கேற்பதற்காக மக்கள் பதற்றத்துடன் தான் வருகை தருகின்றார்கள். இருப்பினும் எத்தனை நாட்கள் தான் தேவாலயங்களை மூடிவைக்க முடியும். அவ்வாறு மூடுவது எந்தவிதமான தீர்வினையும் வழங்காது. ஆகவே பாதுகாப்பான வழிபாடுகளை ஒருநேரமாவது மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

மேலும் நாளை திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கு பிள்ளைகளை அனுப்புவதா இல்லையா என்ற இரட்டை மனதுடன் தான் பெற்றோர்கள் உள்ளார்கள். பாடசாலைகளுக்கு பிள்ளைகளை  அனுப்புவதற்கும் அவர்கள் பயத்துடன் இருக்கின்றார்கள். இத்தகைய சாதாரண வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு கூட இருக்கும் அச்சமான நிலைமைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அதேபோன்று வடக்கில் எவ்விதமான குண்டு வெடிப்புக்களும் இடம்பெற்றிருக்கவில்லை. ஆகவே அங்குள்ள மக்களை பதற்றத்துக்குள்ளாக்க வேண்டிய அவசியமில்லை. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை கொள்ளும் அரசாங்கம் சாதாரண மக்களின் மனநிலையையும் கவத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று மதத்தலைவர்களும் மக்களை அச்சமான சூழலிலிருந்து மீண்டுவதற்குரிய வகையிலான செயயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். விரைவாக வடக்கு கிழக்கில் இத்தகைய நிலைமைகள் போக்கப்பட்டு இயல்பு நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை, மன்னார் மறைமாவட்ட ஆயர் வண.இம்மானுவல் பெர்ணான்டோ ஆண்டகை கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தினத்தினை ஆண்டவரின் உறைவிடத்தில் கொண்டட வந்தவர்கள் தங்களின் உயிர்களை தியாகமாக்கியுள்ளார்கள். இந்த விடயம் எம் அனைவரையும் பாதித்துள்ளது. அதற்கு பின்னர் அமைதியற்ற நிலைமையொன்று ஏற்பட்டள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் இந்த நிலைமைகள் மக்களை மேலும் அச்சத்துக்குள்ளாக்குதவாக இருக்கின்றது. ஆகவே வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதராண பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பதட்டமின்றி தொடர்வதற்குரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

இதேவேளை, திருகோணமலை மறைமாவட்ட ஆயரான வண.நொயல் இம்மானுவல் கிறிஸ்ரியன் தெரிவிக்கையில், தாக்குதல் சம்பவத்தின் பின்னர் திருமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் தேடுதல்கள் நடைபெற்றிருக்கின்றன. மக்கள் அச்சத்துடன் இருக்கின்றார்கள். மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது.

அதேநேரம், வடக்கு மாகாணத்தில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மிக அண்மையில் தான் உரிய பதவிகளை ஏற்றுள்ளவர்கள் என்று எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. ஆகவே அதுதொடர்பிலும் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கருத்திற்கொள்ள வேண்டும். தற்போது அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டிய தருணமாகும். சில சந்தர்ப்பங்களை வைத்து உறுதியாக தீர்மானிக்க முடியாது. அதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் வடக்கு மாகாண மக்கள் இராணுவம் தொடர்பான வேறுபட்ட அனுபத்தினைக் கொண்டிருக்கின்றார்கள். இராணுவத்தின் செயற்பாடுகள், நடவடிக்கைகள் அங்கு அதிகரிக்கின்றபோது தாம் இன்னமும் பாதிக்கப்பட்டு விடுவோம், தமது காணிகள் பறிபோய்விடும் என்ற இயல்பான அச்சம் அவர்களுக்கு ஏற்படுகின்றது. ஏனவே இந்த விடயங்களை கருத்திற்கொண்டு அரசாங்கம் தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Share:

Author: theneeweb