இலங்கையில் பிரிவினைக்கு இடமில்லை

 

“இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசுக்கு அளித்து வரும் ஆதரவின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் அடையும்’ என்று குற்றம்சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபட்ச, “இலங்கையில் பிரிவினைக்கு இடமில்லை’ என்றும் கூறினார்.

வடக்கு மத்திய மாகாணத்தின் நொச்சியாகமை பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ராஜபட்ச, இதுதொடர்பாக பேசியதாவது: இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நிச்சயமற்ற அரசுக்கு அளித்து வரும் ஆதரவின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ள முடியும். புதிய அரசமைப்புச் சட்டத்தை ரணில் அரசு அறிமுகப்படுத்தும்போது, அரசியல் சுயாட்சி வேண்டும் என்ற தங்களது இலக்கை அடைவதற்காக, அரசுக்கு அளிக்கும் ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு பயன்படுத்தும்.

கடந்த 30 ஆண்டு கால உள்நாட்டு போரின் மூலம் சாதிக்க முடியாததை, அரசமைப்புச் சட்டத்தின் மூலம் அவர்கள் சாதிப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் பிரிவினைக்கு ஒருபோதும் இடமில்லை. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ராஜபட்ச கூறினார்.
முன்னதாக, ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அப்பதவிக்கு ராஜபட்சவை நியமித்து கடந்த அக்டோபர் மாதம் அதிபர் சிறீசேனா உத்தரவிட்டார். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சிறீசேனா-ராஜபட்ச கூட்டணி தொடர் பின்னடைவுகளைச் சந்தித்து வந்தது.

இதனால், நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்ட சிறீசேனா, புதிதாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளால் இலங்கை அரசியலில் குழப்பமான சூழல் ஏற்பட்டது.

இதனிடையே, இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதிசிறீசேனா கலைத்து உத்தரவிட்டது செல்லாது என்று அ உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ராஜபட்ச இலங்கையின் பிரதமராகச் செயல்பட, அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடையை நீக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, ராஜபட்ச பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார். ரணில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.

ரணில் அரசுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்ததே, இலங்கையில் அரசியல் பிரச்னை முடிவுக்கு வர முக்கிய காரணமாகும். இதனால், அரசியல் பிரச்னைக்கு பிறகு, தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தில், தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb