மக்களின் பாதுகாப்பும் மாற்று அரசியலும் – கருணாகரன்

மீ்ட்பர்களில்லாத தேசமாகி விட்டது இலங்கை. இதைச் சரியாகச் சொன்னால் நாசகாரிகளின் கைகளில் சிக்கியுள்ளது சொர்க்கத் தீவு. இதை எப்படி மீட்டெடுப்பது என்பதே கேள்வி.

இதற்கான வாய்ப்பும் பொறுப்பும் ஏன் அதிகாரமும் மக்களிடமே உள்ளது. மக்கள் சரியாகச் சிந்தித்தால், சிந்தித்துச் செயற்பட்டால் நாட்டைப் பாதுகாக்க முடியும். இல்லையென்றால் தங்களையும் பாதுகாக்க முடியாமல் நாட்டையும் காப்பாற்ற முடியாமல்தான் போகும். இதற்காக நாட்டை விட்டுத் தப்பியோடுவது (புலம்பெயர்வது) பொருத்தமான தீர்வல்ல. ஆனால் அப்படித்தான் பலரும் சிந்திப்பதாகத் தெரிகிறது.

ஈஸ்டர் தாக்குதலாளிகள் (தேசிய தவ்ஹித் ஜமாஅத்) நாட்டைப் பாழாக்கி விட்டனர் என்றுதான் பலரும் எண்ணக்கூடும். அவர்களை விடப்படு பயங்கரமானவர்கள் நமது அரசியல்வாதிகளே. அவர்களே சுயநலத்திற்காக  நாட்டைப் படுபாதாளத்துக்குத் தள்ளிக் கொண்டிருப்பவர்கள். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தின் மீதும் நஞ்சூட்டி, நெருப்பை அள்ளிக் கொட்டிக்கொண்டிருப்பவர்கள். இந்த அழிவுப் பணிக்காகவே கட்சிகளை வைத்திருக்கிறார்கள். இதற்காகவே கட்சிகளின் பெயரில் லாபமீட்டும் கொம்பனிகளை வளர்க்கிறார்கள். இந்தக் கொம்பனிகள் (கட்சிகள்) தேசிய தவ்ஹித் ஜமாஅத்தின் வெடிகுண்டுகளையும் விட ஆபத்தானவை.

இந்தக் கொம்பனிகளே (கட்சிகளே) தொடர்ச்சியாக இனமுரணைக் கூர்மைப்படுத்தி, சமூகங்களைப் பிளவுபடுத்தி, நாட்டை அழிவில் கொண்டு போய்ச் சேர்க்கின்றன. எந்தக் கொம்பனியும் (கட்சியும்) இணக்கத்தைக்குறித்து விசுவாசமாகச் சிந்தித்ததில்லை. எந்த அரசியல்வாதியும் பல்லினத் தன்மையை, அமைதியை, சமாதானத்தை, தீர்வைத் தன்னுடைய மனதில் கொண்டதில்லை. அத்தனை அரசியல்வாதிகளின் மனதிலும் ஊறிக்கிடப்பது விசம். அத்தனை கொம்பனிகளிடத்திலும் (கட்சிகளிலும்) புதைந்து கிடப்பது கந்தக நஞ்சு. இதையெல்லாம் மறைத்து அவரவர் தமக்கு வசதியானபடி இன அடையாளமென்றும் இனத்தேசியமென்றும் இலங்கைத்தேசியம் என்றும் திரைபோட்டு வைத்திருக்கிறார்கள்.

இதை அறியாத மக்கள் தொடர்ந்தும் இந்தக் கொம்பனிகளுக்கும்  (கட்சிகளுக்கும்) இந்த அரசியல்வாதிகளுக்கும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் பரவிக்கிடக்கும் போதைப்பொருட்களையும் விட இந்தக் கொம்பனிகள் (கட்சிகள்) உண்டாக்கி வைத்திருக்கும் போதையே மிக அபாயமானது. ஆனால், இதைக்குறித்து மக்களுக்குப் புரிவதில்லை. இனப்போதை, மதப்போதை, மொழிப்போதை, பிரதேசப்போதை என்று எல்லாப் போதைகளுக்கும் அடிமையாகிக் கிடக்கின்றனர் மக்கள். இதிலிருந்தெல்லாம் மீளவில்லை என்றால் இலங்கைக்கு எதிர்காலமே இல்லை.

சுற்றியிருக்கும் கடல் மேலெழுந்து சுனாமி அலைகளால் இலங்கையை மூடிவிடுவதை விட இந்தப் போதைகளாலும் இந்த விச வெடிகுண்டு அரசியலினாலும் இலங்கை மூழ்கடிக்கப்பட்டு விடும்.

ஆகவேதான் மக்கள் தம்மைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தைக்குறித்துச் சிந்திக்க வேண்டும். எந்தத் தாமதங்களுமில்லாமல் உடனடியாக விழித்தெழுந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

உண்மையில் நாட்டின் பாதுகாப்பு இப்போது படையினரின் கைகளில் இல்லை. சட்டத்தின் கைகளிலோ நீதிமன்றத்தின் வழிகாட்டலிலோ இல்லை. அது சனங்களின் மனதிலேயே உள்ளது. மக்களே மாற்றத்துக்கான வழிகளை உருவாக்க வேண்டும். துணிந்து புதிய – மாற்று அரசியலாளரைத் தெரிவு செய்ய வேண்டும். அதற்கு முதல் தற்போதுள்ள பெருங்கட்சிகளையும் அவற்றின் பெருந்தலைவர்களையும் கவர்ச்சிப் பிரபலங்களையும் ஒதுக்கித் தள்ள வேண்டும். இவர்கள்தான் இதுவரையான அழிவுகளுக்கும் பின்னடைவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் பொறுப்பு.

ஆகவே எதிர்காலத்துக்குப் பொருத்தமான – நல்ல தலைவர்களைத் தெரிவு செய்வதன் மூலமே நாட்டைப் பாதுகாக்க முடியும். பொருத்தமான நல்ல கட்சிகளை ஆதரிப்பதன் மூலமே நாட்டை அழிவிலிருந்து மீட்க முடியும். கட்சி என்பது உண்மையில் ஒரு சேவை அமைப்பே தவிர, ஒரு குழுவின் உழைப்புக்கும் நலனுக்குமான கொம்பனி அல்ல. ஆகவே சிறிய கட்சிகளை அவநம்பிக்கையோடு பார்க்காமல் அவற்றைத் துணிந்து ஆதரிக்க வேண்டும். அல்லது ஆற்றலும் அர்ப்பணிப்பும் உள்ள செயற்பாட்டாளர்களைக் கொண்ட புதிய கட்சிகளின் வழி நடக்க வேண்டும். அவையே புதியனவற்றை – மாற்றுகளை உண்டாக்கும். அதுவே மெய்யான பாதுகாப்புக்கான வழி. அப்படி நாட்டைப் பாதுகாப்பதென்பதே சனங்களின் பாதுகாப்பாகவும் அமையும். அதுவே இலங்கையின், இலங்கை மக்களின் எதிர்காலமாகும்.

இப்படிச் சொல்லும்போது பலருக்கும் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்படக்கூடும். எங்கேயிருக்கிறார்கள் அந்த நல்ல தலைவர்கள்? எங்கேயிருக்கிறார்கள் தூரநோக்குடைய அரசியல்வாதிகள்? எங்கே உள்ளன நல்ல நோக்குடைய கட்சிகள்? என்று.

“புனிதர்களை நாமெங்கே தேடுவதய்யா? நீங்கள் சொல்லுகிற அந்த மீட்பர்கள் எங்கே உள்ளனர்?” எனச் சிலர் வாய்விட்டுப் புலம்பவும் கூடும்.

ஏனென்றால், நம்மைச் சுற்றியுள்ள அத்தனை ஊடகவியலாளர்களும் ஆய்வாளர்களும் மகிந்த ராஜபக்ஸ – மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமங்க என்ற மூன்று புள்ளிகளுக்குள்தான் அத்தனை கணிதங்களையும் போட்டுப் பார்க்கின்றனர். மொட்டு, யானை, கை அல்லது தாமரை.

இன்னொரு வளையத்தில் சஜித் பிரேமதாஸ, கரு ஜெயசூரிய, கோத்தபாய ராஜபக்ஸ, சரத் பொன்சேகா என்ற பெயர்கள்.

இதற்கப்பால் அவர்களுடைய கண்களுக்கு எவருமே, எதுவுமே புலப்படுவதில்லை. வழமையான சூத்திரக் கட்டுக்கு அப்பால் இவர்களுடைய மூளை வேலை செய்வதில்லை. அந்தளவுக்கு இந்தப் புத்திஜீவிகளும் ஆய்வாளர்களும் ஊடகங்களும் சிறைப்பட்டுள்ளதே இலங்கையின் துயரமும் அவலமும்.

இந்தத் தரப்புகள்தான் தொடர்ச்சியாக இலங்கையின் ஆட்சியதிகாரத்திலிருந்திருக்கின்றன. இவற்றின் ஆட்சிக்காலத்தில் இந்தத் தரப்புகள் நாட்டை அழிவுக்குள்ளாக்கியுள்ளனவா? ஆக்கத்தில் இட்டுச் சென்றுள்ளனவா? என்று கொஞ்சம் பார்க்க வேண்டும்.

மிக எளிய நினைவூட்டலும் மிகச் சாதாரணமான கேள்வியும்.

சுதந்திரத்துக்குப் பிறகான எழுபது ஆண்டுகால ஆட்சியை சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும்தானே மாறி மாறி நிர்வகித்து வந்துள்ளன. கடந்த எழுபது ஆண்டுகால ஆட்சியில் – இந்த இரண்டு கட்சிகளின் அதிகாரத்தின் கீழ்த்தானே நாட்டிலே தொடர்ச்சியாக இரத்தக் களரிகள் ஏற்பட்டுள்ளன. ஆறு லட்சம் வரையானோர் அரசியல் வன்முறைகளினால் பலியிடப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரம்பேர் உடல் உறுப்புகளை இழந்திருக்கின்றனர். பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகள் அழிந்துள்ளன. பல கிராமங்கள் முற்றாகவே இல்லாமற்போயுள்ளன. இயற்கை வளம் அழிந்துள்ளது.

இதையிட்டு இந்தக் கட்சிகளிடத்திலோ இவற்றின் தலைவர்களிடத்திலோ சிறிய அளவிற்கேனும் குற்றவுணர்ச்சியோ வருத்தமோ ஏற்பட்டிருக்கிறதா? தங்களுடைய ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தி, குறைபாடு, தவறு ஆகியவற்றினால்தானே அதற்கெதிரான போராட்டங்கள் எழுந்தன என்ற புரிதலாவது ஏற்பட்டுள்ளதா?

பதிலாக தம்மை நோக்கி வந்த எதிர்ப்புகளையெல்லாம் நாட்டுக்கு வந்த எதிர்ப்பாகக் காண்பித்து அவற்றை மிக மோசமான வன்முறையினால்  ஒடுக்கியிருக்கின்றன. நாட்டுக்கு வந்த நெருக்கடிகளை ஒடுக்கியிருந்தால், அவற்றை முறியடித்திருந்தால் அதற்கு மாற்றாக நாட்டை நிரந்தரப்பாதுகாப்புக்கு ஏற்ற மாதிரி மாற்றியமைத்திருக்க வேண்டும். போராட்டங்களின் நியாயங்களுக்கான தீர்வை வழங்கியிருக்க வேண்டும். அது ஜேவிபியின் கோரிக்கைகளாகட்டும், ஈழப்போராளிகளின் போராட்டமாகட்டும்.

இதற்காக அரசியலமைப்புத்திருத்தம் தொடக்கம், அமைதிக்கான முயற்சிகள், அரசியல் தீர்வு, ஆட்சிமுறைமை தொடர்பான மாற்றங்கள், ஜனநாயக மேம்பாடு, பொருளாதார மறுசீரமைப்பு என நாட்டை மேம்படுத்தும் வகையி்ல் செயற்பட்டிருக்கும்.

அப்படி எதுவும் நடக்கவில்லையே. ஜே.வி.பியின் எதிர்ப்பை ஒடுக்கியதைப்போல ஈழப்போராட்டத்தையும் புலிகளையும் ஒடுக்கி வெற்றி கண்ட இந்தத் தரப்புகள் ஜே.வி.பியும் ஈழப்போராளிகளும் முன்னிறுத்திய நியாயக்கோரிக்கைகளுக்குப் பதிலிறுக்கவில்லை. பதிலாக மேலும் புதிய யுக்தியில், உபாயங்களில் ஒடுக்குமுறை, பாரபட்சம், அதிகாரப் பிரயோகம் என்ற வழியிலேயே பயணித்தன. தொடர்ந்து பயணிக்கின்றன.

இதற்குப் பிறகும் இந்த இரண்டு கட்சிகளும் மக்களுக்கான – தேசத்துக்கான  நன்மைகளைக் குறித்து, புதிய நிலைமைகளைக் குறித்துச் சிந்திக்கின்றவா என்றால் இல்லை என்பதே தெளிவான பதில்.

இந்த நிலையில் இன்னும் இந்தக் கொம்பனிகளையும் (கட்சிகளையும்) தலைவர்களையும் எப்படி நம்பிக்கொண்டிருப்பது? அப்படி நம்புவதாக இருந்தால் அது தற்கொலைக்கு ஒப்பானதன்றி வேறென்ன? இப்போது கூட நானா நீயா என்ற போட்டியில்தான் இந்தத் தரப்புகள் ஈடுபடுகின்றவே தவிர, நாட்டில் அமைதியை, தீர்வை, முன்னேற்றத்தை, சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான போட்டியில் இவை ஈடுபடவே இல்லை.

அப்படியென்றால் இதற்கு வெளியே வேறு தெரிவுகளுக்கு மக்கள் செல்வதைத் தவிர வேறு வழியில்லையல்லவா. ஆம் நிச்சயமாக அதுதான் வழி.

ஆனால், அதற்குச் சரியான வழிகாட்டல்கள் தேவை. இதுவே இன்று புத்திஜீவிகள், ஆய்வாளர்கள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்களுக்கான பணியாகும். அப்படிப் புதிய அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய சக்திகளை அடையாளம் கண்டு சனங்களுக்கு இனம் காட்ட வேண்டும். இதன் மூலம் மக்களுக்கும் புதிய தரப்புகளுக்குமிடையிலான இணைப்பை உருவாக்க வேண்டும். இதன் வழியாக அரசியலில் புதிய அலையை உண்டாக்க வேண்டும்.

அப்படியென்றால் நீங்கள் குறிப்பிடும் அந்தப் புதிய தரப்புகள் எவை? அல்லது அது எது? என்றால் அதை உடனடியாக நாம் கடையில் வாங்குவதைப்போல அடையாளம் காணவோ வாங்கவோ முடியாது.

ஆனால், அவ்வாறான தரப்புகள் பல நமக்கு முன்னே உள்ளன. அவற்றை நமது பொதுப்புத்தி ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவ்வளவுதான். நமது மூளை மெகா கட்சி, மெகா தலைவர் என்ற கவர்ச்சியின் பின்னே வெட்கமற்று அலைகிறது. இதிலிருந்து, இந்த மோகப் பிசாசிடமிருந்து விடுபட்டுப் புதிய முளைகளை அடையாளம் காண வேண்டும். அவற்றை முன்னிலைப்படுத்தி, விமர்சனத்துக்குட்படுத்திப் பக்குவப்படுத்தி மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். அதுதான் ஒரே வழி.

இதற்கு இரண்டோ நான்கோ ஆண்டுகள் தேவைப்படலாம். சிலவேளை இருக்கின்ற நல்ல சக்திகளுக்கிடையில் உருவாகும் ஒருங்கிணைவின் மூலம் இது சாத்தியப்படலாம். ஆனால், அதற்காகத் தொடர்ந்து வேலை செய்ய வேணும். அதற்காக அர்ப்பணிக்க வேண்டும். மீளவும் வலியுறுத்துகிறேன், அந்த வேலையைச் செய்வது புத்திஜீவிகள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள். அரசியல் ஆய்வாளர்கள், முற்போக்குச் சந்திகள் போன்றோரின் கடமையாகும்.

ஏனெனில் ஆட்சியதிகாரத்தை நிர்ணயிக்கும் சிங்களப் பெருங்கட்சிகள், பெருந்தலைமைகளில் மட்டும்தான் குறையிருக்கிறது என்றில்லை. இதே நிலைமைதான் தமிழ், முஸ்லிம், மலையக அரசியற் சூழலிலும் உள்ளது.

தமிழ், முஸ்லிம், மலையகத்தில் இருக்கின்ற தலைமைகளும் கட்சிகளும் விசப்பூண்டுகள்தான். முப்பது, நாற்பது, ஐம்பது ஆண்டுகாலப் பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டு அதே பழைய உளுத்துப்போன சிந்தனைக்குள் (அதை எப்படிச் சிந்தனை என்று குறிப்பிடுவது?) புளுத்துக் கிடக்கின்றன.

இல்லையென்றால் இந்தச் சமூகங்களில் நல்ல மலர்கள், நல்ல கனிகள்,  நல்ல விதைகள், நல்ல விதிகள் கிடைத்திருக்குமே.

ஆனால் இதைப் புரிந்து கொள்ளும் நிலையில் இங்குள்ள மக்களும் இல்லை. இங்கும் மக்களை ஒரு சுழல் வளையத்துக்குள் தொடர்ந்தும் வைத்திருக்கவே ஊடகங்களும் ஆய்வாளர்களும் முயற்சிக்கின்றனர். அதற்கப்பால் அவர்கள் நகர்வதில்லை. பழகிப்போன – ஊறிப்போன சிந்தனை வளையத்துக்குள் (குப்பைக்குள்) தான் எல்லாவற்றையும் தேட முற்படுகிறார்கள். அதற்கு அப்பால் தலையை உயர்த்தி, விழிகளைத் திறந்து பார்ப்பதற்கு அஞ்சுகிறார்கள். புதிய வழியை உருவாக்குவதற்காக ஒரு காலடியைப் புதிதாக முன்வைப்பதற்கான துணிச்சல் எங்குமே இல்லாமல் போய் விட்டது. வளர்ச்சியை நோக்கிய சமூகத்தில்தான் அவ்வாறான புதிய காலடிகள் முன்வைக்கப்படும். இல்லையென்றால் அவை பின்னோக்கித் தேங்குகின்றன என்றே அர்த்தமாகும்.

தமிழ்ச் சூழலில் விக்கினேஸ்வரன், சம்மந்தன், கஜேந்திரகுமார் என ஒரு சுழலுக்குள்ளேதான் ஒவ்வொரு தரப்பினரும் சிந்திக்கின்றனர். இதற்கப்பால் இவர்களுக்கு எதுவுமே புலப்படுவதில்லை. ஆனால், இந்தத்தரப்புகளால் ஒரு புள்ளியளவு கூட முன்னகர்வுகள் ஏற்படாது என்பது மிக எளிய உண்மை. இதை இந்தத் தரப்புகளின் கடந்த காலமும் நிகழ்காலமும் தெளிவுற நிரூபித்திருக்கின்றனவே. இதற்கு மேல் எப்படி இவற்றுக்குப் பின்னால் தஞ்சமடையவோ திரளவோ முடியும்?

இதற்கு அப்பால் சிந்தித்தால்தான் ஏதாவது உண்டு.

உண்மையில் நல்ல சக்திகள் அங்கங்கே நிறையவே உள்ளன. நல்லவை ஒவ்வொரு இடத்திலும் உண்டு. அவை சிறிதாகவும் சற்றுப் பெரிதாகவும் உள்ளன. அவற்றை அந்தந்தப் பிராந்தியங்களில் அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும். பிறகு அவற்றை மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டும். மாற்று அரசியல் சக்திகள் இலகுவில் வளர முடியாது. அப்படி அவை வளர்வதற்கு இந்தப் பெருங்கட்சிகளும் பெருந்தலைவர்களும் இடமளிக்க மாட்டா.

ஆகவே இவற்றை மாற்றுகளை விரும்புவோர், மக்களை நேசிப்போர், நாட்டைப் பாதுகாத்து முன்னேற்ற வேண்டும் என்று எண்ணுவோர்தான் பாதுகாத்து வளர்க்க வேண்டும். ஆதவளித்துப் பரவலாக்க வேண்டும். இதைப்பற்றி அவர்களே சிந்திக்க வேண்டும்.

மக்கள் புதியனவற்றைத் தேர்வு செய்யக் கூடிய ஒரு அரசியல் பண்பாட்டை, புதிய தெரிவை நோக்கிய நகர்வை உண்டாக்க வேண்டும். அதற்கான நம்பிக்கைத் துணிவை ஏற்படுத்த வேண்டும். அப்படி மக்கள் புதிய அரசியலுக்குள் பிரவேசிக்கும்போதே நாடு பாதுகாக்கப்படும். மக்கள்  காப்பாற்றப்படுவர்.

அதுவே இலங்கைக்கான எதிர்காலமாகும். ஆம் மக்களே தம்மையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டும். சமநேரத்தில் நாட்டைச் சூழ்ந்திருக்கும் வெடிகுண்டு அரசியல்வாதிகளையும் நச்சுக் கொம்பனிகளையும் (கட்சிகளையும்) தோற்கடிக்க வேண்டும்.

Share:

Author: theneeweb