கஷோகி படுகொலை: புதிய சிசிடிவி விடியோ வெளியீடு

செய்தியாளர் கஷோகி படுகொலை தொடர்பான புதிய சிசிடிவி விடியோவை, துருக்கி நாட்டுத் தொலைக்காட்சி ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்த நாட்டின் “ஏ-ஹாபெர்’ தொலைக்காட்சி வெளியிட்டுள்ள விடியோவில், 5 சூட்கேஸ்களையும், இரண்டு பெரிய கருப்பு நிற பைகளையும் 3 நபர்கள் சவூதி துணைத் தூதரின் இல்லத்துக்குள் எடுத்துச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.

அந்தப் பெட்டிகளிலும், பைகளிலும், கொலை செய்யப்பட்ட செய்தியாளர் கஷோகியின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் நிரப்பப்பட்டிருந்ததாக அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சவூதி துணைத் தூதரின் இல்லம், படுகொலை நடைபெற்ற சவூதி துணைத் தூதரகத்துக்கு அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் “வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.

இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் தேதி சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை.

தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டதை ஒப்புக் கொண்டது.

Share:

Author: theneeweb