யாழ் பல்கலை மாணவர்களை பிணையில் விடுவிப்பதா? விடுதலை செய்வதா? வழக்கு புதன்கிழமை ஒத்திவைப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளார் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிப்பதா? அல்லது வழக்கிலிருந்து விடுதலை செய்வதா? என்ற கட்டளை நாளை மறுதினம் புதன்கிழமை வழங்கப்படும் என யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றறர்போல் வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவம் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடையதும், மாவீரர்களுடையதும் புகைப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கோப்பாய் காவற்துறை நிலையம் ஊடாக, அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

அதேநேரம் அவர்கள் இருவரையும் இந்த மாதம் 16ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஏலவே உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு, நகர்த்தல் பத்திரம் முன்வைத்து, இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என இருவேறு தரப்பு சட்டதரணிகள் தனித்தனியாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தனர்.

சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் திருக்குமரன், செலஸ்ரின், கேசவன் சயந்தன், கலாநிதி குமாரவேல் குருபரன், கனகரட்ணம் சுகாஷ், விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் மாணவர்கள் சார்பாக முன்னிலையாகினர்.

கோப்பாய் காவற்துறைப் பொறுப்பதிகாரியும் மன்றில் முன்னிலையானார்.

இருதரப்பு நீண்ட சமர்ப்பணங்களை கவனத்தில் எடுத்த நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், பிணை அல்லது வழக்கை நிராகரித்து மாணவர்களை விடுவிப்பதா? என்ற கட்டளை நாளைமறுதினம் வழங்குவதாக தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தார்.

Share:

Author: theneeweb