அமெரிக்கத் தாக்குதலுக்கு தயாராகுங்கள்: வெனிசூலா ராணுவத்துக்கு மடூரோ உத்தரவு

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகும்படி வெனிசூலா ராணுவத்துக்கு அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூரோ உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, கோஜெடஸ் மாகாணத்திலுள்ள சான் கார்லோஸ் ராணுவ பயிற்சியகத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் விளாதிமீர் பாட்ரினோ, சுமார் 5,000 படை வீரர்களிடையே மடூரோ பேசியதாவது:
கூடிய விரைவில், இந்த புனிதமான பூமியை அமெரிக்க சாம்ராஜ்யம் தொட்டுப் பார்க்க நினைக்கலாம். அந்த நாள் வரும்போது, உங்கள் கரங்களில் உள்ள ஆயுதங்களால் நம் தாய் மண்ணைக் காக்கப் பாடுபட வேண்டும் என்றார் மடூரோ.

முன்னதாக, வெனிசூலா பிரச்னைக்கு ராணுவத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பைக் கைவிடுவதற்கு அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில், ராணுவத்தினரிடம் மடூரோ இவ்வாறு கூறியுள்ளார். இதற்கிடையே, பெரும்பாலான ராணுவத்தினர் அதிபர் மடூரோவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ராணுவ வீரர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய நாடாளுமன்றத் தலைவருமான ஜுவான் குவாய்டோவின் ஆதரவாளர்கள் ராணுவக் குடியிருப்புப் பகுதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.

வெனிசூலாவின் இடைக்கால அதிபராக ஜுவான் குவாய்டோ கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார்.
அவரை அமெரிக்கா உள்ளிட்ட 54 நாடுகள் அங்கீகரித்தன. எனினும், அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

Share:

Author: theneeweb