ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொண்ட இலங்கையர்கள் தொடர்பில் பாராளுமன்றில் பிரதமர் உரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

இதன்போது, இலங்கையை சேர்ந்த சிலர் 2014 ஆம் ஆண்டில் துருக்கி ஊடாக சிரியாவிற்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொண்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மொஹமட் மூசிக் இஷாக், அஹமட் மொஹமட் உன்சீன், மொஹமட் அமீன் மற்றும் மொஹமட் சுஹீர் மொஹமட் அரூஸ் ஆகிய இலங்கையர்களே அவ்வாறு இணைந்துகொண்டமை தெரியவந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல் ஹக் 2014 ஆம் ஆண்டில் சிரியாவிற்கு சென்று ஆயுதப்பயிற்சி பெற்று நாடு திரும்பியுள்ளதாகவும் தெஹிவளையில் குண்டை வெடிக்கச் செய்த அப்துல் லத்தீப் மொஹமட் ஜமீல் ஐ.எஸ். அமைப்பில் இணைவதற்காக 2014 ஆம் ஆண்டில் சிரியாவிற்கு செல்லும் நோக்கில் துருக்கிக்கு சென்று நாடு திரும்பியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

ஐ.எஸ் அமைப்பில் இணைந்து உயிரிழந்த மொஹமட் சஹ்ரான் சிரியாவிற்கு செல்லும்போது, அவரின் பெற்றோரும் சிரியாவிற்குப் பயணித்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள், தொடர்புகளைப் பேணியவர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார்.

மேலும், தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 8 குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நௌஃபர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தி தலைவர் உயிரிழந்ததால், இந்நபர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

யூசுப் மொஹமட் இப்ராஹிம், மொஹமட் இப்ராஹிம் இஜாஸ் அஹமட், மொஹமட் ரஹீம் மொஹமட் மேலும் 52 பேர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share:

Author: theneeweb