மாவனெல்லையில் 700 கிலோ வெடி மருந்துக்கள் கண்டுபிடிப்பு!

மாவனெல்லை – ஹிங்குல பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து  700 கிலோ கிராம் வெடி மருந்துக்கள் மற்றும் தேசிய தௌஹீத் அமைப்புக்கு சொந்தமான இறுவட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கேகாலை இராணுவ முகாமிற்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவனெல்லை காவற்துறையினர் மற்றும் இராணுவம் இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மாளிகாவத்தை – ஜூம்மா பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று பிற்பகல் 58 வாள்கள், துப்பாக்கி மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கொஹிலவத்தை – டொனால்ட் பெரேரா மாவத்தைக்கு அருகிலுள்ள ஓடை ஒன்றிலிருந்து தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு சொந்தமான இறுவட்டுக்கள், ஒளிநாடாக்கள் என்பன காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் பால நிர்மாண பணியில் ஈடுபட்டு வருபவர்களால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் இலங்கை கடற்படை களனி கங்கையின் மல்வான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது வாள் மற்றும் கூரிய ஆயுதங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் சீதுவை – கட்டுநாயக்க வீதியின் முத்துவாடிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது, பாரவூர்தி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட இராணுவ சீருடைக்கு இணையான 1116 சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாணவர்களை அச்சுறுத்தும் நோக்கில் வெல்லவாய பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் குண்டு என சந்தேகிக்கப்படும் வகையில் பொதியை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதானவர்கள் நாளைய தினம் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, பொகவந்தலாவை ஸ்ரீபுர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இராணுவ சீருடைக்கு இணையான சில சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்துக்குரிய ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவை காவல்துறையினரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது குறித்த உடைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யபட்ட சந்தேகத்துக்குரியவர், பொகவந்தலாவை ஸ்ரீபுர பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி – பேராதனை – கலுகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது 5 வாள்கள், 7 கத்திகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, நாவலப்பிட்டி பகுதியில் ஊடறுத்து செல்லும் மகாவலி கங்கைக்கு அருகிலிருந்து 2 வாள்கள், 6 கத்திகள், 2 வயர் ரோல்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ராஜகிரிய பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது முஸ்லிம் அடிப்படைவாத போதனை அடங்கியதாக சந்தேகிக்கப்படும் 14 ஒளிநாடாக்கள், கொச்சிக்கடை தேவாலயத்தின் புகைப்படம் அடங்கிய தகவல்களுடனான புத்தகம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb