குண்டுவெடிப்புகளின் பின் தமிழர் அரசியல்? சட்டங்களுக்குள் மீண்டும் சமாதியாகும் நிம்மதி

 

–    கருணாகரன்

அவசரகாலச் சட்டம் திறந்துவிட்ட கதவுகளின் வழியே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்குள் புகுந்த படையினர் அங்கே மாணவர் தலைவரையும் செயலாளரையும் கைது செய்திருக்கிறார்கள். கைதுக்கான காரணம் ஒன்றும் நீங்கள் ஆச்சரியப்படுமளவுக்குப் பெரியதில்லை. படையினர் வளாகத்தைச் சோதனையிட்டபோது மாணவர் மன்றத்தின் அறையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் படமும் தமிழீழ வரைபடமொன்றும் இருந்தது என்பதே. சிலவேளை இதைக்கேட்டு நீங்கள் சிரிக்கவும் கூடும். வெடிகுண்டுகளோ அல்லது வேறு ஏதேனும் பயங்கரமான ஆயுதங்களோ அல்லது தற்கொலைத்தாக்குதலுக்கான அங்கிகள் போன்ற ஆபத்தை உண்டாக்கும் பொருட்களோ அங்கே இருந்திருந்தால் பரவாயில்லை. கேவலம், பத்து ஆண்டுகளுக்கு முன்பு முற்றாகவே அழிக்கப்பட்டதாக அரசாங்கமே கூறிய இயக்கமொன்றின் தலைவருடைய படத்தை வைத்திருந்ததற்காகவா இந்தக் கைதுகள் என.

ஆனால், அவசரகாலச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஆகியவற்றுக்கு முன்னால் யாரும் அப்படிச் சிரிக்க முடியாது. இலங்கையின் தற்போதைய (2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பிறகான) சூழலில் தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றின் அடையாளங்களையோ தடயங்களையோ வைத்திருப்பது பாரதூரமான குற்றமாகும். இதுவே சட்டம்.

எனவேதான்  கைதாகியிருக்கும் மாணவர்ஒன்றியத்தின் தலைவர்எம் .திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ்ஆகிய இருவரும்கேள்விகளுக்கிடமின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இனி இவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அப்படிச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் இவர்கள் தொடர்ந்து சிறையிருக்கக்கூடிய நிலையும் ஏற்படலாம். ஆனால், “இந்த நடவடிக்கை பிழையானது, எனவே இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று தமிழ்த்தரப்பில் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைக்குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை  எழுதியிருக்கிறார் வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். “குற்றங்களுடன் தொடர்பில்லை என்றால் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும்” என்று பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகவும் கேட்டிருக்கிறார். “மாணவர்களை விடுவிப்பதே நல்லது. அதுவே நிலைமை மேலும் கெட்டுப்போகாமலிருக்க உதவும்” என்றிருக்கிறார் அமைச்சர் மனோ கணேசன். மாணவர்களை விடுவிக்கவில்லை என்றால் பாரதூரமான விளைவுகளை அரசாங்கம் சந்திக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வழமையைப்போலத் தன்னுடைய அணுக்குண்டை அடித்திருக்கிறார்.

இதன் உச்சக்கட்டமாக மாணவர்கள் கைது செய்யப்பட்டவேளையில் அங்கேயொரு அவதார புருஷரைப்போல அதிரடியாகப் பிரசன்னமாகி படை மற்றும் பொலிஸ் தரப்புகளோடு வாதிட்டிருக்கிறார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். இதற்கு முன்பும் இதைப்போல இரண்டு தடவை சுமந்திரன் ஸ்தலத்தில் ஆஜராகிய சம்பவங்களுண்டு.

இதில் நாங்கள் கவனிக்க வேண்டிய உண்மை அல்லது வேடிக்கை என்னவென்றால், பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவும் அமைச்சர் மனோ கணேசனும் தற்போதய அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர்கள், அங்கத்துவத்தினர். இந்தக் கைது உண்மையிலேயே தவறுதான் என்றால் இவர்கள் நேரடியாகவே ஜனாதிபதியை அல்லது பிரதமரை அல்லது பாதுகாப்புச் செயலரைச் சந்தித்து மாணவர்களை விடுவிப்தற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுதான் உண்மையான அக்கறை. சரியான வேலையாகும். இதையே திருவாளர் சுமந்திரனும் செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விட்டுவிட்டு, சனங்களின் குறிப்பாக மாணவர்களின் காதுகளில் ஓட்டை போட்டுப் பூவைச் சொருக முற்படுவதென்பது சுத்த அயோக்கியத்தனமன்றி வேறில்லை. இது “ஆடு நனைகிறது என ஓநாய்கள் அழுகின்றன” என்ற கதையையே நினைவூட்டுகிறதல்லவா!

இவர்களே அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வலுப்படுத்தவும் அரசுக்கு ஆதரவளித்தவர்கள். அதாவது இவ்வாறான கைதுகளுக்கான அடிப்படைகளையும் அதற்கான சட்ட ஏற்பாட்டையும் உருவாக்குவதற்கு ஆதரவாக இருந்தவர்கள். அப்படியெல்லாம் மக்களுடைய சுதந்திரத்துக்கு எதிராகவே சட்ட ஏற்பாடுகளை உருவாக்கி விட்டு இப்பொழுது கைதுகள் நடக்கும்போது சனங்களிடம் வந்து அப்பாவிகளைப்போலவும் நீதியாளர்களைப்போலவும் அழுது வடிவது நடிப்பன்றி, பாசாங்கன்றி, பச்சையான ஏமாற்றன்றி வேறென்ன?

“புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான சட்டமூலத்தில் நெகிழ்ச்சித் தன்மை இருப்பதுபோன்று காண்பிக்கப்பட்டாலும் கடுமையான பிரிவுகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. ஆகவே அச்சட்டமூலத்தினை உடன் விலக்கிக்கொள்ளவேண்டும்” என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராஜா ஏற்கனவே (இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது) எச்சரித்திருந்தார். இதைப்பற்றி அவர் மேலும் விளக்கும்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான ஏற்பாடுகள் கொண்ட சட்டமூலம் 1972ஆம்ஆண்டின் குற்றவியல் நீதி ஆணைக்குழுக்கள் சட்டம், 1972 ஆம் ஆண்டின் செலாவணி கட்டுப்பாட்டு (திருத்த) சட்டம் மற்றும் 1978 ஆம் ஆண்டின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்; 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டங்களில் காணப்பட்ட ஒத்த ஏற்பாடுகளின் முக்கிய சில அம்சங்களை உள்ளடக்கி வரையப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாகின்றபோது ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் அல்லது ஆயுதப்படை உறுப்பினர் ஒருவரின் தற்துணிபில் எந்தவொரு பிரஜையும் ஒருபயங்கரவாதிஎன்று கருதப்படமுடியும். மேலும் அமைச்சரின் விருப்பப்படி, எந்தவொரு நிறுவனமும்பயங்கரவாதஅமைப்பாக தடை செய்யப்பட முடியும், எழுதுதல், எதிர்ப்பு தெரிவித்தல், பொது இடங்களைச் சென்றடைதல், சக பிரஜைகளுடன் நட்பு கொள்ளல் மற்றும் நம்புதல் என்ற இவை அனைத்தும்பயங்கரவாத செயல்களாககருதப்படலாம். சந்தேகத்தின் பேரில் ஒரு பிடியாணையின்றி கைது ஒன்றைச் செய்வதற்கும் வெறும் சந்தேகத்தின் பேரில் அமைவிடங்கள்பயங்கரவாதசெயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படையில் அவ்விடத்திற்குள்; பிரவேசிப்பதற்கும் தேடுதல் செய்வதற்கும், எந்த பொலிஸ் அதிகாரிக்கும் அல்லது ஆயுதப்படை உறுப்பினருக்கும் அல்லது ஒரு கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் புதிய சட்டம் அனுமதி வழங்குகிறது. இதனால் அதிகாரத் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இருக்கவேண்டிய பாதுகாப்பு தற்போதைய வடிவத்தில் ;“விருப்பத் தெரிவாககாணப்படுகின்றது. ஏனவே, கைதுசெய்யும் காலத்தில் அக்கைதுக்கான காரணத்தை அந்நபருக்கு அறிவிக்காதிருப்பதோ சந்தேக நபருக்கு புரியும் மொழியில் அதனை விளக்கிக்கூறாது விடுவதோ இச்சட்டத்தின்கீழ் சட்டவிரோதமானதல்ல. ஒரு பெண் சந்தேக நபரை ஆண் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கைதுசெய்வதும் சட்டவிரோதமானதாக இருக்காது என்று இதன் எதிர்கால அபாயங்களைப் பற்றிக் கூறியிருந்தார்.

இந்த எதிர்கால அபாயத்தை உணர்ந்த அனைத்துப் பல்கலைக்கழங்களைச் சேர்ந்த சுமார் நான்காயிரம் வரையான மாணவர்கள், 13.03.2019 அன்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கு அருகிலிருந்து பாராளுமன்ற வளாகம்வரை ஊர்வலமாகச் சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனைக் கண்ணீர்ப்புகை அடித்தும் தடியடி நிகழ்த்தியும் பொலிஸ் தடுத்து நிறுத்த முற்பட்டது.

ஆனால் இவற்றைப்பற்றியெல்லாம் நமது அரசியல் தலைவர்களுக்கு மட்டும் புரியவேயில்லை. அவர்களுடைய தலைக்குள் இது உண்டாக்கக் கூடிய  ஆபத்துகளைப்பற்றிய சூடுகளேதும் ஏறவில்லை. ஏற்கனவே இந்த மாதிரிச் சட்டங்களால் தமிழ்ச்சமூகம் பேரவலங்களைச் சந்தித்திருந்ததை இவர்களைத் தவிர ஏனைய அனைவரும் அறிவர். எதிர்காலத்திலும் தமிழ்ச்சமூகத்துக்கு இது பெருங்கேட்டினை விளைவிக்கும் என்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரைத் தவிர மற்ற எல்லோருக்குமே தெரியும். கூட்டமைப்பிலும் இலங்கை அரசியல் வட்டாரத்திலும் சட்டவாதங்களால் கம்பு சுத்திச் சாகஸ வித்தை காட்டும் சுமந்திரனுக்கு இதெல்லாம் விளங்காமலிருப்பது விசித்திரமன்றி வேறென்ன?

உண்மை என்னவென்றால், இந்தச் சட்டமென்ன இதைவிட ஆபத்தான சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இந்த அரசியல்வாதிகளுக்கு அதனால் பாதிப்பேதும் ஏற்படப்போவதில்லை என்பதுவேயாகும். ஏனெனில், இவர்கள் ஒருபோதும் அப்படியான நிலையில் தமது அரசியலை முன்னெடுக்கவில்லை.  மக்களின் உரிமை, விடுதலை, சுதந்திரம், அமைதியான வாழ்க்கை என்ற நியாயங்களின் அடிப்படையில் விசுவாசமாக அரசியலை மேற்கொள்ளவில்லை. எதிர்காலத்திலும் அப்படியான அரசியலை   மேற்கொள்ளப்போவதுமில்லை. ஆகவே தமக்குப் பாதிப்பில்லாத எதைப்பற்றியும் எதற்காகக் கவலைப்பட வேண்டும்? இல்லையென்றால், மெய்யாகவே (சனங்களின்) விடுதலைக்கான அரசியலை முன்னெடுத்திருந்தால், புலிகளின் கோட்பாட்டுணர்வோடுதான்  செயற்படுகிறோம் என்று மெய்யாகவே சொல்வதாக இருந்தால், இந்தப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அல்லது அவசரகாலச்சட்டத்தின் கீழ் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் எல்லாம் கைதாகி உள்ளே இருந்திருக்க வேண்டும். அப்படி யாரும் இதுவரையிலும் கைதானதில்லையே. அவர்கள் மட்டுமல்ல, அதிவிஷேஸ தீவிரத் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் கூட எந்த வகையான சட்ட நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கப்படவில்லை. ஆனால், பல்கலைக்கழக மாணவர் போன்ற அப்பாவிகளே கைது செய்யப்படுகிறார்கள். சிறையிலடைக்கப்படுகிறார்கள். அப்பொழுது ஆபத்பாந்தகர்களைப்போலக் காப்பாற்றுவதற்கு ஓரோடி வந்து நிற்கின்றனர் இந்த அரசியல் நடிகர்கள். இதை விடுத்துக் கைது செய்யப்படுவதற்கான அதிகாரத்தை உருவாக்காமல் பார்த்துக் கொள்வதே உண்மையான பாதுகாப்பு ஏற்படாகும். அதைச்செய்ய வேண்டியதே இவர்களுடைய பொறுப்பு.

“அதெப்படிச் சாத்தியமாகும், இலங்கைப் பாராளுமன்றமே இனவாத அடிப்படையில் செயற்படும் ஒன்று. பெரும்பான்மையினர் சிங்களத்தரப்பினர். அவர்கள் ஒரு சட்டமூலத்தை அல்லது தீர்மானத்தைக் கொண்டு வரும்போது தமிழ்த்தரப்பினர் மட்டும் எதிர்த்து அதைத் தடுக்க முடியுமா?” என. அப்படியென்றால் குறைந்தது இதற்குத் தாம் எதிர்ப்பே என்பதையாவது வெளிப்படுத்தலாம் அல்லவா. எதற்காக ஒத்தூத வேண்டும்?

இதைவிடத் தற்போதைய அரசாங்கமானது தமிழ், முஸ்லிம், மலையகத் தரப்பினர் என்ற சிறுபான்மை மக்களின் ஆதரவைப்பெற்ற ஒன்றே. இந்தச் சிறுபான்மையினரின் ஆதரவே ஆட்சிக்கான பெரும்பான்மையை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, அரசாங்கத்தின் இருப்பும் கடிவாளமும் சிறுபான்மையினரின் கைகளில்(மூளையில்)தானே உள்ளது. இப்படியான ஒரு நல்வாய்ப்புத்தருணத்தில் எப்படி அரசாங்கத்தின் சூழ்ச்சிகரமான, அபாயகரமான நிகழ்ச்சி நிரலுக்குள் இவை கண்மூடித்தனமாக இழுபட்டுச் செல்கின்றன? அதற்கான அவசியமென்ன?

இதற்குப் பிரதான காரணம், இவற்றின் குறுகிய நலனே. மக்கள் நலனை விடத் தமது நலன், தம்முடைய கட்சியின் நலன் என்ற குறுகிய லாபங்களேயாகும். சனங்களைப் பலியிட்டால்தான் இந்த லாபத்தை அரசு இவர்களுக்கு வழங்கும். எனவேதான் கண்மூடித்தனமாக அரசாங்கத்தை ஆதரிப்பதும் அதை நியாயப்படுத்துவதும் நடக்கிறது. இது ஒன்றும் புதிய சங்கதியல்ல. இதுவே இவர்களுடைய, இந்தக் கட்சிகளுடைய அடிப்படைக்குணாம்சமாகும். இதுதான் முன்னர் 1960, 1970 களிலும் நடந்ததும். 1960 களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் 1970 களில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இதையே செய்தன. கொழும்பில் அரசாங்கத்துக்கு விசுவாசமாக நடந்து கொள்வது. அதை ஆதரிப்பது. பிறகு வடக்குக் கிழக்குக்கு (தமிழ்ப்பிரதேசங்களுக்கு) வந்து அரசாங்கத்தையும் அதனுடைய நடவடிக்கைகளையும் எதிர்ப்பது. மிகச் செறிவான உதாரணம், 1979 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கவில்லை. இதையே இன்று சம்மந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் செய்திருக்கிறது. அமிர்தலிங்கமும் சம்மந்தனும் தமிழரசுக் கட்சியின் தலைவர்களே. ஆண்டுகள் நாற்பது சென்றாலும் தலைமைகள் மாறினாலும் கட்சியின் பெயர் (கூட்டணி, கூட்டமைப்பு என்று) மாறினாலும் அதனுடைய குணாம்சம் மாறவேயில்லை.

இந்த இரண்டக நிலையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றே அன்று தமிழர் விடுதலைக்கூட்டணியினர் (தமிழரசுக் கட்சியினர்) போராளி இயக்கங்களால் குறிவைக்கப்பட்டனர். விளைவாக நாட்டை விட்டும் அரசியல் அரங்கை விட்டும் மிஞ்சியவர்கள் தப்பியோட வேண்டியேற்பட்டது.

இப்பொழுது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்த இரண்டக நிலையில் மக்களின் காதுகளில் பூச்சரத்தைச் சூடுவதற்கு முயற்சிக்கும்போது பலருக்கு எரிச்சலும் எதிர்ப்புணர்வும் ஏற்படுகிறது என்றால் அதற்கு இந்த வரலாற்று அனுபவங்களும் ஒரு காரணம்.

இதேவேளை ஏதோ தெரியாத்தனமாக இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு மட்டும்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனியே ஆதரவளித்து ஒரேயொரு வரலாற்றுத் தவற்றினைச் செய்தது என்றில்லை. ரணில் அரசாங்கத்தின் மூன்று வரவு செலவுத்திட்டங்களுக்கும் நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கியிருக்கிறது அது. தமிழ்ச்சமூகத்துக்குத் தொடர்ந்தும் எதிர்நிலையிலேயே செயற்படும் ரணிலுக்கு ஆதரவாக இரண்டு தடவை பாராளுமன்றத்தில் வாக்களித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களைப் புறந்தள்ளிவிட்டு ஜெனிவாவில் அரசாங்கத்தைப் பிணையெடுத்திருக்கிறது. ஜீ.எஸ்.ரி பிளஸ் தடையை நீக்குமாறு கோரப்பட்ட தூதுக்குழுவில் இணைந்து சென்று அரசு மீதான நெருக்கடியைக் குறைக்க முற்பட்டிருக்கிறது. இப்படிப் பல. “இதெல்லாம் இலங்கை மீதான தேசிய நெருக்கடிகளைத் தணிப்பதற்கான நடவடிக்கைகள். இதன் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான புரிந்துணர்வையும் நல்லெண்ணத்தையும் சிங்களச் சமூகத்திடமும் அரசாங்கத்திடமும் உருவாக்கி விடலாம்” என்று சுமந்திரன் வகையறாக்கள் கதையோ கயிறோ விடலாம். இதையெல்லாம் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருப்பதற்கும் நம்பி ஏற்பதற்கும் தமிழ்ச்சமூகம் ஒன்றும் வரலாற்றுக் குருடாகி விடவில்லை.

திட்டமிட்டமாதிரியே அடுத்தடுத்து வரலாற்றுத் தவறுகளைச் செய்து தமிழ்ச் சமூகத்தை மீளமுடியாத அரசியல் சுழியில் மூழ்கடித்து வரும் ஒரு தலைமையை எப்படி அழைப்பது? எப்படிப் புரிந்து கொள்வது? இந்த மாணவர்கள் உணர்ச்சியரசியலில் இன்று பலிக்கடாவாக இருக்கலாம். அறிவரசியல் ஒன்றை நோக்கி தமிழ்ச்சமூகம் நகரும்போது இதற்கு எதிரானதாகவே அனைத்தும் அமையும். அது இப்போது பாதிக்கப்படுவோரையும் பாதுகாப்பாக இருப்போரையும் இடம்மாற்றி அமர்த்தும். அதுதான் வரலாற்றின் விதியாகும்.

(நன்றி – எதிரொலி (அவுஸ்ரெலியா)

Share:

Author: theneeweb