தன் மீதான குற்றச்சட்டை கண்டறிய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கவும்

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாரிகளுக்கும், அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், தன் மீதான குற்றச்சட்டுகள் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு அமைச்சர் றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட 52 நாள் பிரளயத்தின் போது, தனது உதவியை நாடியவர்களுக்கு, தான் ஒத்துழைக்கவில்லை என்பதால் இப்போது தன்மீது இவ்வாறான பழியை அவர்கள் சுமத்துவதாக அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

“மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு மற்றும் ஈஸ்டர் தினத்தில் நடந்த குரூர தாக்குதல்களை எந்தவொரு முஸ்லிமும் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்லாமும் அதற்கு அங்கீகாரம் வழங்கவும் இல்லை. அதற்கு எடுத்துக்காட்டாகவே தற்கொலை குண்டுதாரிகளின் சடலங்களைக் கூட நாங்கள் பொறுப்பேற்கவில்லை, முஸ்லிம் பிரதேசங்களில் அவற்றினை அடக்கம் செய்வதற்கு அங்கீகாரம் வழங்கவுமில்லை”.

எமது சமூகத்தில் இவ்வாறு எந்த இளைஞனாவது இனி இப்படி தீவிரவாதமாக சிந்தித்தால் அவர்களுக்கும் இவ்வாறான நிலைதான் ஏற்படும் என்கிற செய்தியை இதனூடாக உணர்த்தியுள்ளோம்” எனவும் றிசாட் பதியுதீன் தனது உரையில் தெரிவித்தார்.

பயங்கரவாதத்துக்கு மதமோ, நிறமோ, கட்சியோ இல்லை என்று கூறிய அவர், சர்வதேச பயங்கரவாதம் இங்குள்ள சில இளைஞர்களையும் தம்வசப்படுத்தி, இந்த காட்டுமிராண்டித்தன செயலை மேற்கொண்டு, தமது நாட்டை குட்டிச்சுவராக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

“நாட்டில் நடைபெறும் தேடுதலின் போது கிடைக்கப்பெற்ற ஆயுதங்கள் தொடர்பில் விசாரணைகள் நடக்கின்றன. விசாரணை முடியும் வரை பொறுமை காப்பதே எல்லாருக்கும் நல்லது. இதனை வைத்துக்கொண்டு 22 லட்சம் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்காதீர்கள்” என தெரிவித்தார் அவர்.

“இந்த உயர் சபையில் பேசிய சிலர், நாங்கள்தான் குண்டை கொண்டு வந்து இந்த நாசகார செயலை செய்தது போல் எங்கள் மீது விரல்களை நீட்டுகின்றீர்கள். நாங்களும் இங்கே சரிக்கு சமமாக விவாதித்தால் இருக்கின்ற ஐக்கியமும் இல்லாமல் போய்விடும் என்பதற்காகத்தான் பொறுமை காத்து வருகின்றோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb