தீவிரவாதிகள் மேலும் தாக்குதல்களை நடத்தும் அச்சுறுத்தல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: இலங்கை இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க

இஸ்லாமிய தீவிரவாதிகள் மேலும் தாக்குதல்களை நடத்தும் அச்சுறுத்தல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை அடக்குவதற்கு பாதுகாப்பு பிரிவினர் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்பட்ட நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளோம் என்றும், பாதுகாப்பு நிலைமை குறித்து கவலையடைய வேண்டியதில்லை என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்புடன் உள்ள தொடர்புகள் தெரியவந்துள்ள போதிலும், அந்த அமைப்பு நேரடியாக இந்த தாக்குதலில் தொடர்புபட்டிருப்பதாக அர்த்தமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸஹ்ரானே ஹாசிமே குண்டுதாக்குதல்களை தலைமை தாங்கி வழிநடத்தினார் என்பது இதுவரை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தீவிரவாத கொள்கை மற்றும் தலைமைத்துவத்துடன் வேறு முக்கியமானவர்களும் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்தாரிகள் பெரும்பாலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடி பொருட்களையே பயன்படுத்தி உள்ளதாகவும், சில வெடிபொருட்கள் தென் இந்தியாவின் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb