மக்களை விட்டு விலகித் தூர நிற்கும் அரசியலாளர்களால் இதுவரையிலும் எந்த நன்மைகளும் கிட்டவில்லை. கருணாகரன்

 கருணாகரன்   —

 

‘தற்போதிருக்கும் எந்தப் பெரிய அரசியல் கட்சிகளும் மக்களுக்கு உதவப்போவதில்லை. எந்தப் பெருந் தலைவர்களும் நாட்டுக்கும் உதவார். மக்களுக்கும் உதவார். ஆகவே புதிய – மாற்றுக் கட்சிகளையும் மாற்று அரசியலாளர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறீர்கள். இதெல்லாம் எந்தளவுக்குச் சாத்தியம்? அப்படியான கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? அந்தக் கட்சிகளில் உள்ளவர்களுக்கு மக்களிடையே அறிமுகமும் கவர்ச்சியும் உண்டா? எப்படி இதையெல்லாம் மக்களுக்குச் சொல்லி ஒரு புதிய அரசியல் சூழலை உருவாக்க முடியும்? எப்படிப் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம்? எப்படி வெற்றியடையலாம்…?’ என்று தொடர் கேள்விகளைக் கேட்கிறார்கள் நண்பர்கள்.

நண்பர்களுடைய கேள்விகளில் நியாயமுண்டே. ஏனென்றால் தற்போதுள்ள எந்தப் பெரிய கட்சியினாலும் நல்விளைவுகளை இலங்கையில் உண்டாக்க முடியாதென்பது நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும். நண்பர்களுக்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள பலருக்குமே அது புரியும். அதைப்போல தற்போதிருக்கும் எந்தப் பெரிய தலைவரும் நாட்டிலே நல் மாற்றங்களை உண்டாக்கக் கூடிய மனதோடும் துணிவோடும் இல்லை என்பதும் தெரியும். இதிலெல்லாம் நண்பர்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்.

ஆனால், இந்த இடத்தில் இதற்குப் பதிலாக இன்னொன்றைக் கண்டறிவதற்கும் அதை ஏற்றுக்கொள்வதற்கும் அவர்கள் தயாரில்லை. அவர்கள் மட்டுமல்ல சனங்களும் தயாரில்லை. இதனால்தான் எல்லோரும் இப்படித் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

தமக்கு அழிவைத் தரும் சக்திகளிடமிருந்து தாம் மீள வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் அதிலிருந்து இலகுவில் மீள முடிவதில்லை. இது ஒருவிதமான பழக்கதோசமே. ஒரு வகையான உளவியல் கோளாறேயாகும். போதைப் பழக்கத்துக்கு நாம் அடிமையாகி விட்டால் அது தீங்கானது என்று தெரிந்தாலும் இலகுவில் அதிலிருந்து எப்படி மீள முடியாதிருக்குமோ அப்படித்தான் இதுவும். ஆனால், ஆழ்ந்து யோசித்தால் இதற்கு நாம் பலியாவது தெரியும். இந்தக் கட்சிகளும் இதனுடைய அரசியல்வாதிகளும் ஒரு பெரிய பிசாசைப்போல நம்மைப் பற்றிப் பிடித்திருக்கின்றன என்ற உண்மை புரியும்.

ஆனால், என்னதான் தெரிந்தாலும் மாற்று அரசியலையும் அதற்காக சக்திகளையும் மக்கள் ஏற்றுக் கொள்ளுமாறு செய்வதொன்றும் இலகுவானதல்ல. அப்படி அது இலகுவானதாக இருந்திருந்தால் இலங்கையில் எப்போதோ எத்தனையோ மாற்றங்களும் அற்புதங்களும் நிகழ்ந்திருக்கும். அபத்தங்களும் இந்தளவு பேரழிவுகளும் பேரிழப்புகளும் ஏற்பட்டிருக்காது. இனங்களுக்கிடையில் பகைமை குறைந்திருக்கும். அல்லது மறைந்திருக்கும். பல்லினச் சமூகங்களுக்குரிய அடிப்படைகள் உருவாக்கப்பட்டிருக்கும். நாடு மிகப் பெரிய முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டியிருக்கும். தெருவெங்கும், ஊரெங்கும் படையினரும் காவல் நிலைகளும் கோயில், மசூதி, விஹாரை, தேவாலயம் என்றெல்லாம் பெருகியிருப்பதற்குப் பதிலாக தொழிற்சாலைகளும் மக்கள் குடியிருப்புகளும் விவசாயப் பண்ணைகளும் கடல் வள உற்பத்தி மையங்களுமே இருந்திருக்கும். இப்போதுள்ளதைப்போல மனசிலே அச்சத்தையும் நிம்மதியின்மையையும் சனங்கள் சுமந்து கொண்டிருக்கத் தேவையில்லை. ஏறக்குறைய ஒரு பொன்னுலகமும் பொற்காலமும் இலங்கையில் உருவாகியிருக்கும். உலகமே சொல்வதைப்போல பூமியின் சொர்க்கமாகவே இலங்கை இருந்திருக்கும்.

மாற்று அரசியலை, மக்களுக்கான அரசியலாளர்களை மக்கள் நம்பிவிடக்கூடாது. அந்தப் பக்கமாக மக்கள் திரும்பிவிடக்கூடாது. அதை நோக்கி நகர்ந்து விடக்கூடாது. அப்படி மக்கள் மாற்று அரசியலையும் மாற்று அரசியலாளர்களையும் ஏற்றுக் கொண்டால் அதனால் தம்முடைய நலன்களெல்லாம் கெட்டுவிடும். இருப்பே சவாலாகி விடும் என்பதில் இந்த மெகா கட்சிகள் (கம்பனிகள்) மிகக் கவனமாக இருக்கின்றன.

இந்த மெகா கட்சிகள் இந்தளவுக்கு வளர்ச்சியடைந்ததே மக்கள் விரோத (இனவாத, மதவாத) அரசியலின் மூலமாகத்தான். மக்களையும் அவர்களிடத்திலே உள்ள அறிவீனத்தையும் உணர்ச்சிகரமான நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகளையும் முதலீடாக்கி, தமது லாபத்தைத் தொடர்ந்தும் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதை இந்தக் கட்சிகள் என்ற மகா கம்பனியினரால் மட்டுமல்ல, எவராலும் மறுக்க முடியாது.

இந்த இனவாதக் கட்சிகள் என்ற மெகா கம்பனிகளைப்போலத்தான் இவற்றுக்கு ஆதரவாக உள்ள ஊடகங்களும் உள்ளன. இதற்குத் தோதாகவே இதில் பங்கேற்கும் ஊடகவியலாளர்களும் உள்ளனர். ஏன் புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் கூடத்தான். இந்த அரசியல்வாதிகளைப்போலவே ஆளுக்காள் குற்றம் சாட்டிக்கொண்டும் பழிகளைச் சுமத்திக் கொண்டும். இதிலிருந்து மாறுபட்டு, மக்களுக்குரியவர்களாகத் தங்களை ஒழுங்கமைக்கவே இல்லை. இன்னும் அழுத்தாமாகச் சொல்வதானால், இந்த மெகா கட்சிகளுக்கும் அவற்றின் தலைமைகளுக்கும் விசுவாசமாக, இணக்கமாக இருக்க விரும்புகின்றனரே தவிர, மக்களுக்குரியவர்களாக இல்லை.

ஆகவே மக்களை ஏமாற்றும் இந்த நிகழ்ச்சி நிரல் தானாக மாறவே மாறாது.

அதை மாற்ற வேண்டும் என்றால், அதற்கு மாற்றத்தை விரும்புவோர்தான் முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சி சாதாரணமானதாக இருக்க முடியாது. அதற்கு முறையான திட்டமிடல் அவசியம். ஒருங்கிணைந்த நற் சக்திகளின் இணக்கமும் கூட்டிணைவும் தேவை. அர்ப்பணிப்பான உழைப்பு வேண்டும். மக்களிடம் மாற்று அரசியலை, அதன் தேவையை, அதன் பெறுமதியை எடுத்துச் செல்வதற்கான ஊடகங்கள் தேவை. ஒரு அணிச் செயற்பாடு அவசியம். இவற்றை முன்னெடுப்பதற்கான பயிற்சி வேண்டும்.

மாற்றங்களை நிகழ்த்தவல்ல அரசியலாளர்களும் மக்களுக்கான அரசியல் சிந்தனையும் நமது சூழலில் உண்டு. ஆனால், அவர்களையும் அவர்களுடைய சிந்தனையையும் மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும். ஏனெனில் அவர்கள் மிகச் சாதாரணர்களைப்போலவே உள்ளனர். மிகச் சாதாரணர்களை நமது மக்கள் எளிதில் நம்புவதில்லை. ஏற்றுக்கொள்வதுமில்லை. எங்களுடைய சனங்களுக்கு எப்போதும் நிமிர்ந்து பார்க்கக் கூடியவர்களே தேவை. அவர்களே தலைமைக்குரியவர்கள் என்ற நினைப்பு இது. பிரபுத்துவச் சமூக மனோபாவத்திலிருந்து இன்னும் நாம் விடுபடவில்லை என்பதே இதற்குக் காரணம்.

என்னதான் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசினாலும் நடைமுறையில் நாம் இன்னும் ஆண்டான் – அடிமைப் பண்பாட்டில்தான் இருக்கிறோம். எப்போதும் எம்மை ஆள்வதற்கு எஜமானவர்கள் வேண்டும் என்ற உள் விருப்பத்தின் கீழ்.

இதனால் எமக்கு எப்போதும் பெரியவர்கள், புகழுடையவர்கள் தேவைப்படுகிறார்கள். வாரிசு அரசியலை ஆதரிப்பதும் குடும்ப அரசியலுக்கு இடமளிப்பதும் இந்த மனப்பாங்கினால்தான். படித்தவர்கள் கூட இந்த மனோபாவத்திற்கு அடிமையாகவே உள்ளனர்.

ஆனால் மாற்று அரசியலைச் செய்வதற்கு இந்தப் பிரபலங்களால் முடியாது. புகழுடைய பெரியோரினால் இயலாது. அவர்கள் ஒரு போதுமே மேலிருந்து கீழிறங்கி வரப்போவதில்லை. மாற்று அரசியலாளர்கள், மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போர் எப்போதும் மக்களுக்கு நெருக்கமாகவே இருப்பர். மக்களுக்கு நெருக்கமானவர்கள் சாதாரணர்களாகவே இருப்பர். அப்படியிருந்தால்தான் மக்களுடைய வாழ்க்கை நிலைவரங்களும் உண்மைத்தன்மையும் புரியும். இதுதான் அவர்களுடைய அரசியலின் பலத்துக்கான அடிப்படைகளில் ஒன்று. ஆனால், இந்தச் சாதாரணத்தன்மையை மக்கள் எளிதில் புரிந்து கொள்வதில்லை. இவ்வாறு சாதாரணமாக இருப்பவர்கள் எப்படித் தங்களுக்குத் தலைவர்களாக முடியும்? எப்படி இந்தப் பெரிய அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் யோசிக்கிறார்கள். இவர்கள் மீதான (மாற்றாளர்கள் மீதான) அவநம்பிக்கை இப்படித்தான் சனங்களுக்கு உருவாகிறது.

ஆனால், தங்களிடமிருந்து தங்களுக்கான அரசியலாளர்கள் வருவதே சிறப்பு என்பதைச் சனங்கள் புரிந்து கொள்வதில்லை. இதை விளக்க வேண்டிய பொறுப்பு மாற்று அரசியலை விரும்புவோருக்குரிய பெரும் பணியாகும்.

மக்களை விட்டு விலகித் தூர நிற்கும் அரசியலாளர்களால் இதுவரையிலும் எந்த நன்மைகளும் கிட்டவில்லை. தொடர்ந்தும் ஏமாற்றங்களும் அழிவுகளுமே மிஞ்சின. மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்பட்டனர், பாதிக்கப்படுகின்றனர. அமைதி குலைந்தது. நாடு அழிவில் சிக்கியிருக்கிறது என்பதை ஆதாரங்களோடு விளக்கி மக்களுக்கு எதிரான அரசியலாளர்களை ஒதுக்க வேண்டும். அதாவது மக்களுக்கு எதிரான மெகா கட்சிகளைத் தோற்கடிக்க வேண்டும். இது முதலாவது வேலைத்திட்டமாகும்.

இதைக் கிராமங்கள் தோறும் நகரங்கள் தோறும் இருக்கின்றவர்கள் அங்கங்கே செய்யலாம். அப்படிச் செய்வது ஒன்றுதான் இன்றுள்ள வழியாகும்.

நாம் சொல்வதையெல்லாம் மக்கள் கேட்பார்களா என்று கேட்கலாம். உங்கள் வீட்டிலிருந்து இந்த மாற்றத்துக்கான எண்ணத்தை, மாற்றத்துக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பியுங்கள். அப்படியே உங்கள் குடும்பத்தில், உங்கள் உறவினர்கள், நண்பர்களிடத்தில் என மெல்ல மெல்ல விரித்துக் கொள்ளுங்கள். அப்படியே ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள மாற்றாளர்கள் செயற்படத் தொடங்கும்போது அது ஒரு அலையாக உருவெடுக்கும். பின்னர் அது பேரiலையாக எழுச்சியடையும். நாம் செய்வது நற்பணி என்ற எண்ணத்தோடு முன்னகர்ந்தால் எந்தத் தயக்கமும் யாருக்கும் வராது. மேலும் மேலும் உற்சாகமே மேலெழும்.

ஏனெனில் இது நம்மைச் சுற்றியுள்ள நெருக்கடிகளை நிரந்தரமாக நீக்குவதற்கான பணி. நம்முடைய வாழ்க்கையை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கான வேலை. நமது பிரச்சினைகள் தீராத நோயைப்போல நீடிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நம் செய்ய வேண்டிய காரியம். எப்படி நமது பசியைப்போக்குவதற்காக உழைக்கிறோமோ அதைப்போலத்தான் இதுவும். உடைக்கு, மருத்துவத்துக்கு, வீட்டை அமைப்பதற்கு எப்படியெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கிறதோ அப்படி அரசியல் மாற்றத்துக்காகவும் வேலை செய்ய வேண்டும. இதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பு மக்களை நேசிப்போருக்கும் மக்கள் அரசியலை முன்னெடுக்க விரும்புவோருக்கும் உரியது.

ஆகவே மாற்று அரசியலையும் மாற்று அரசியலாளர்களையும் நாம் என்ன பாடுபட்டாவது மக்களுக்கு அவற்iறைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்யத் தொடங்கினால் மாற்றம் தொலைவில் அல்ல. கனவிலும் அல்ல. அது ஒரு நிஜம் என்றாகும். அது வெற்றியடையும். அதிகாரத்திலிருக்கும் மெகா கட்சிகளுக்குப் பதிலாக மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் மாற்று அரசியல் சக்திகளாகும்.

Share:

Author: theneeweb