சமூக ஊடகப் பதிவால் இலங்கையில் மோதல் – சிலாபத்தில் ஊரடங்கு

இலங்கையில் புத்தளம் மாவட்டம் சிலாபம் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் நகரில் இன்று காலை இரண்டு குழுக்களுக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த மோதலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான போலீசார் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் பிறப்பித்துள்ளார்.

இனங்களுக்கு இடையில் மோதலை தோற்றுவிக்கும் வண்ணம் சமூக வலைத்தளத்தில் பதிவொன்று பதிவேற்றம் செய்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம் பகுதியில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவிக்கின்றார்.

சிலாபம் நகரில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீசார் குறிப்பிட்டனர்.

 

Share:

Author: theneeweb