வடக்கில் வெள்ளப்பெருக்கு: ஆயுதப்படைகளின் துரித நடவடிக்கை பல உயிர்களைக் காப்பாற்றுகிறது

ராஜித ஜாகொட ஆராச்சி மற்றும் ராசுல தில்ஹர கமகே

நாட்டின் வடக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்துவரும் பலத்த மழையினால் முல்லைத்தீவு,கிளிநொச்சி,மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பெரும் பகுதிகள் அழிவுக்கு உள்ளாகியுள்ளன.

ஒட்டுமொத்தமாக 39,669 குடும்பங்களைச் சேர்ந்த 123,178 பேர்கள் சீரற்ற காலநிலை காரணமாக இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளார்கள். இதற்கிடையில் வெள்ளம் காரணமாக 474 வீடுகள் முற்றாக அழிவடைந்தும் மற்றும் 4,552 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தும் உள்ளன.

எப்படியாயினும் அறிவிக்கப்பட்ட மரணங்கள் இரண்டு மட்டுமே, ஒன்று யாழ்ப்பாணத்;திலும் மற்றது கிளிநொச்சியிலும் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்திருந்தார். வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே, அமைச்சர்கள் ரஞ்சித் மத்தும பண்டார, தயா கமகே, ஹர்ஷா டீ சில்வா, ரிசாட் பதியுதீன், ஜே.சி.அலவத்துவல மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம்,முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், கால்துறை கண்காணிப்பாளர் நாயகம்(ஐஜிபி) மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளும் கூட பிரதம மந்திரியுடன் கூடச் சென்றிருந்தார்கள்.

இழப்பீடு

கிளிநொச்சியில் ஒரு கூட்டத்துக்குத் தலைமைதாங்கிய பிரதமர், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூபா 10,000 உடனடி இழப்பீடாக வழங்குவதாக வாக்குறுதியளித்தார். பாதிக்கப்பட்டவர்கள் பெற்றிருந்த கடன்களுக்கான தவணைத் தொகை மற்றும் வட்டி என்பனவற்றை அறவிடுவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பிரதம மந்திரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

பெருமழையின் விளைவாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அநேக குளங்கள் அவற்றின் அணையை மீறிப் பாய்ந்து வட மாகாணத்தின் பாதிக்கும் மேலான பகுதிகளுக்கு அழிவை ஏற்படுத்தின. ஆறுகள் இல்லாத இடங்களில் பேரழிவு ஏற்பட்டதுக்கான காரணம் முழுவதும் இந்த அணைக்கட்டுகள் நிரம்பி வழிந்ததே ஆகும்.

முதலில் உடைபெடுத்தது மாங்குளம் அணைக்கட்டாகும் மற்றும் பெருமளவு நீர் சிறிய குளங்களுக்குள் பீறிட்டுப்பாய்ந்து அத்தகைய சிறிய குளங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியது. கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் திடீர் வெள்ளப் பெருக்குக்கு இலக்காகிய பிரதேசங்களைப் பற்றி இராணுவத்துக்கு அறிவித்திருந்தார். இராணுவ அதிகாரிகளுக்கும் அவர்களுக்கு முன்பாக உள்ள ஆபத்தான பணி பற்றிய விபரம் அறிவிக்கப்பட்டது.

கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜர்.ஜெனரல். ரல்ப் நுகேரா மற்றும் முல்லைத்தீவு கட்டளைத் தளபதி மேஜர்.ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு ஆகியோர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கிளிநொச்சியில் மேஜர்.ஜெனரல். விஜித ரவிப்பிரியாவின் கீழுள்ள இராணுவத்தின் 57வது படைப்பிரிவினரின் பகுதியில்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருப்பதாக படைகளுக்குத் தகவல் கிடைத்தது.

படைப்பிரிவினர் கூட வெள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும் கூட, மேஜர்.ஜெனரல் ரவிப்பிரியா பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி துருப்புக்களை பணியில் ஈடுபடுத்தினார். அனைத்து கனிஷ்ட வீரர்களுக்கும் இந்த மனிதாபிமானப் பணியினை பொறுமையாகவும் மற்றும் அவதானமான முறையிலும் நடத்தும்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
“நாங்கள் இந்த மக்கள் அனைவரையும் எப்படியாவது காப்பாற்றவேண்டும். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மேலான வேகத்துடன் வெள்ளம் பீறிட்டுப் பாய்வதால், இது ஒரு கடினமான வேலை. ஆகவே அதேபோல நீங்களும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது, நீங்கள் விவேகமானதும் மற்றும் பொறுப்பான முறையியிலும் செயற்பட வேண்டும் மற்றும் உங்களுக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடும் உண்டாவதற்கு இடமளிக்க்கக் கூடாது. இந்த மக்களுக்கு உதவி செய்யும் அதேவேளை படையினரின் ஒழுங்கையும் நாங்கள் பேண வேண்டும். அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் ஆனால் அவர்கள் எங்கள் சகோதர சமூகத்தவர்கள். அதை நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது”, இதுதான் கனிஷ்ட படைப்பிரிவினருக்கு பாதுகாப்பு பணியை ஆரம்பிக்கும் முன்பு மூத்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுரை.

தைரியம்

இவை அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன் படைவீரர்கள் வெள்ள நீரில் இறங்கினார்கள். அவர்கள் கயிறுகளின் உதவியுடன் நீரில் மூழ்கியிருந்த கிராமங்களை நோக்கி நீந்திச் சென்றார்கள்.வீரிட்டலறும் மக்களை நோக்கி அவர்கள் செல்லும்போது பலத்த மழை மற்றும் மேலெழும்பும் நீரலைகள் அவர்களைத் தாக்கின. ஆனால் தங்களின் தைரியத்தையும் மற்றும் ஸ்திரத்தையும் வெளிக்காட்டி இறுதியாக அவர்கள் ஆபத்தில் சிக்கியிருந்த கிராமங்களை அடைந்தார்கள்.

“நாங்கள் உங்களிடம் வரும்வரைக்கும் வெள்ளத்தில் இறங்க வேண்டாம்” என்று வீரர்கள் தமிழில் கத்திகனார்கள்.

படை வீரர்களின் முதல் பணி முதியவாகளைக் காப்பாற்றுவதாக இருந்தது. கயிற்றினைப் பயன்படுத்தி வெள்ளப் பகுதியை கடக்க முடியாத முதியவர்களை வீரர்கள் தங்கள் தோள்களில் சுமந்து செல்லவேண்டியிருந்தது

விரைவிலேயே கடற்படையினரும் கூட பெருமளவு எண்ணிக்கையிலான படகுகளுடன் இந்த மீட்புப் பணியில் இணைந்து கொண்டார்கள். இராணுவத்தினரால் காப்பாற்றப்பட்ட மக்களை அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றார்கள். இந்த நேரத்தில் காவல்துறை, எஸ்ரிஎப், வான்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படை ஆகிய அனைத்தும் இந்த மீட்புப் பணியில் ஈடுபடத் தொடங்கின. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையங்களில் இருந்த தொண்டர்கள் மற்றும் காப்பாற்றப்பட்ட இளைஞர்கள் ஆகியோர்களும் நடந்து கொண்டிருந்த இந்த மீட்புப் பணிக்கு உதவத் தொடங்கினார்கள். பலருக்கும் அது ஒரு உணர்ச்சிகரமான கணமாக இருந்தது, முதியவர்கள் தங்களைக் காப்பாற்றிய இளம் படை வீரர்களுக்கு நன்றி சொல்வதையும் மற்றும் வணங்குவதையும் காண முடிந்தது. உண்மையில் நாதியற்ற இந்த மக்கள் வேறு வழியின்றி கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்த வேளையில் அவர்களைக் காப்பாற்றிய இந்த வீரர்கள்தான் அவர்களின் கண்களுக்கு உண்மையான கடவுளாகத் தெரிந்தார்கள்.

இதற்கிடையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு படைப்பிரிவினருக்கு மற்றுமொரு முக்கிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது, அது பலவீனமான நிலையில் இருந்த ஏனைய குளங்களை மணல்மூட்டைகளை அடுக்கிப் பாதுகாக்கும் பணி.

ஜெயபுரம் கோவில் பாதுகாப்பாளரான , குருக்கள் எஸ்.சுப்பிரமணியம் இப்போது இடம்பெயர்ந்து கிளிநொச்சி கண்டாவளையில் உள்ள ஒரு முகாமில் உள்ளார், அவர் கூறும்போது, பாதுகாப்பு படைகள் இந்த மீட்புப் பணியை ஆரம்பிப்பதற்கு அடுத்த நாள் வரைக்கும் காத்திருப்பார்களாக இருந்தால் இந்த மக்களில் ஒருவர் கூட உயிர்பிழைத்திருக்க மாட்டார்கள் என்று சொன்னார்.
“மழை ஆரம்பித்து கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடத்துக்குள் எங்கள் வீட்டுக்குள் நீரலைகள் பீறிட்டு பாய ஆரம்பித்தது. நாங்களும் எங்கள் அயலவர்களும் அலறிக்கொண்டு ஒரு உயர்ந்த இடத்தில் தங்குவதற்கு முயற்சித்தோம். நாங்கள் கைவசம் கொஞ்சம் உடைகளை எடுத்துக்கொண்டு சுவர்களில் ஏறி அமர்ந்து கொண்டோம். ஆனால் நீர்மட்டம் உயர்ந்து கொண்டேயிருந்தது” என்றார் சுப்பிரமணியம்.

படைகள் தொடர்ந்து உதவி செய்தன

“ இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் இன்னும் சிலருடன் இரவில் கூட வந்து எங்களைக் காப்பாற்றினார்கள். பின்னர் எங்களை இந்த பாடசாலையில் கொண்டுவந்து சேர்த்தார்கள். நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே சென்றபோது நாங்கள் நினைத்தோம் நாங்கள் இனி ஒருபோதும் உயிர் பிழைக்க மாட்டோம் என்று. இத்தகைய ஆபத்தான நீரலையில் துணிச்சலான ஆட்களால் மட்டுமே தங்கள் உயிர்களை ஆபத்தில் பணயம் வைக்க முடியும். நாங்கள் எங்களைக் காப்பாற்றுவதற்காக நீந்த முயற்சித்திருந்தால் நிச்சயம் நாங்கள் இறந்திருப்போம். நாங்கள் எல்லோரும் எங்கள் உயிர்களைக் காப்பாற்றிய படை வீரர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்”.

“அவர்கள் எங்களுக்கு உதவியதுடன் நின்றுவிடவில்லை. அவர்கள் எங்களுக்கு உணவும் குடிநீரும் தந்தார்கள். அவர்கள் செய்த நன்மைகளை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். சில மனிதர்கள் படை வீரர்களைப் பற்றி அக்கறை கொள்ளாவிட்டாலும் கூட, கடவுள் அவர்களைக் கவனித்துக் கொள்வார்” என்று சுப்பிரமணியம் தெரிவித்தார்.

62,000 மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களின் கவனிப்பின் கீழ் உள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்காலிக முகாம்களில் உள்ளார்கள்.
கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், இரண்டு மாவட்டங்களிலும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியினை பெரிதும் பாராட்டினார். பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் விஜயத்தின் போது அவர் பாதுகாப்பு படையினரின் முயற்சிகளை பாராட்டினார்.

“இந்த நீரோடைகள்தான் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லைகளாக உள்ளன. இந்த திடீர் வெளளப்பெருக்கின் பின்னர் இரண்டு மாவட்டங்களும் ஒரே பகுதியைப் போல காட்சியளிக்கின்றன. ஒரு சில மணி நேரத்துக்குள் அந்தப் பகுதியில் இருந்த எல்லா வீடுகளும் மூழ்கடிக்கப்பட்டு விட்டன. மக்கள் உதவியற்றவர்களானார்கள். முதலில் இராணுவம் அணுகி கயிறுகளைப் பயன்படுத்தி மக்களை மீட்டது. பின்னர் கடற்படை, வான்படை, காவல்துறை மற்றும் எஸ்.ரி.எப் என்பன தலையிட்டன. கடற்படைப் படகுகள் கிளிநொச்சியில் உள்ள வீடுகளை நோக்கிச் சென்று தவித்துக்கொண்டிருந்த மக்களைக் காப்பாற்றியது” என்று அவர் தெரிவித்தார்.
“அனர்த்த முகாமைத்துவப் பிரிவில் உள்ள எங்கள் அதிகாரிகள் மற்றும் அனைத்துப் படைப் பிரிவு அதிகாரிகளும் குழுவாகச் சேர்ந்து முழுப் பகுதியிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைக் காப்பாற்றினார்கள். மற்றொரு குளத்தின் அணை உடைந்திருக்குமானால் நிலமை இன்னும் அதிகம் நெருக்கடியானதாக மாறியிருக்கும். ஆனால் படையினர் எனது அச்சங்களைப் போக்கினார்கள். ஒருவருக்கும் ஒரு தீங்கும் நேராமல் நாங்கள் அனைவரையும் மீட்போம் என்று எனக்கு அவர்கள் உறுதியளித்தார்கள்”.

“நிலமை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிடவில்லை. மீட்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதிலேயே ஒவ்வொருவரும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார்கள். இப்போதுகூட இராணுவ அதிகாரிகள்தான் உதவி செய்வதில் முன்னிலை வகிக்கிறார்கள். அவர்கள் மக்களுக்கான உணவுகளைத் தயாரித்து தருகிறார்கள். இன்னமும் அவர்கள் மக்களின் நலன்களையே கவனிக்கிறார்கள். உண்மையாகச் சொல்லுவதானால் அனைத்து பாதுகாப்பு படைகளின் தியாகங்களினாலேதான் எங்களால் ஒவ்வொருவரையும் காப்பாற்ற முடிந்தது” என்று அவர் சொன்னார்.

இராணுவத்தினரையோ அல்லது பாதுகாப்பு படைகளைப் பற்றியோ மிகவும் பொதுவான ஒரு அபிப்ராயம் என்னவென்றால் அவர்கள் அங்கிருப்பது யுத்தத்தில் சண்டையிடுவதற்காக என்பதாகும். உலகத்தின் மேலோட்டமான கருத்தும் அதுதான். எனினும் ஆயுதப் படைகள் அதேபோல பொதுமக்களின் நன்மையிலும் தலையீடு செய்கின்றன. வடக்கில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் உண்மையில் அதற்கான ஒரு உதாரணமாகும்.

அவர்களை பாதுகாப்பு பிரிவினர் என நாம் அழைத்தபோதிலும் அவர்கள் நிலங்களை மட்டும் பாதுகாக்கவில்லை. மனிதர்கள் மற்றும் மிருகங்கள் கூட அவர்களது கவசத்தின் கீழேயே உள்ளன.

Share:

Author: theneeweb