வெளிச்சம் வேண்டாம் என்பது ஏன்? – கருணாகரன்

“குண்டு வெடிப்புக்களைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான எந்த ஒரு பதிவையும் முஸ்லிம், தமிழ் புலமையாளர்கள் முன்வைக்காதது ஏமாற்றமளிக்கின்றது” என “அரங்கம்” வாரப்பத்திரிகையில் “எழுவான் வேலன்” என்பவர் துயரத்தோடு பதிவு செய்திருக்கிறார்.

இலங்கையில் நிலவும் ஜனநாயக மறுப்பு, பன்மைத்துவத்து நிராகரிப்பு, பௌத்த மேலாதிக்கச் சிந்தனை, பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலமைப்பு, இனமுரண்கள் பகைமை நிலையில் பராமரிக்கப்பட்டு வருவதன் தீய விளைவுகள், போருக்குப்பிந்திய நல்லிணக்கத்தின் நாடகத்தன்மை போன்றவற்றையெல்லாம் தமிழ், முஸ்லிம் புலமையாளர்களில் ஒரு குறிப்பிட்டளவானோர் ஏற்கனவே கடுமையாக விமர்சித்தும் சுட்டிக்காட்டியும் வந்துள்ளனர். இந்தப் பத்தியாளர்கூட இவற்றைக் குறித்துத் தொடர்ச்சியாக எழுதி வந்தார்.

நாட்டைப் பாதுகாக்க வேண்டுமானால் அமைதியை உருவாக்க வேண்டும். அமைதியை உருவாக்க வேண்டுமானால் சமாதானத்தை எட்ட வேண்டும். சமாதானத்தை எட்ட வேண்டுமானால் அதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றால் அதற்குரிய அரசியலமைப்பை வரைய வேண்டும். அந்த அரசியலமைப்பு நாட்டிலுள்ள பல்லினச் சூழலுக்குரிய வகையில் பன்மைத்தன்மையுடையதாக இருக்க வேண்டும். தனியே ஒரு இனத்துக்கோ ஒரு மதத்துக்கோ ஒரு பிரிவினருக்கோ முன்னுரிமை அளிப்பதாக இருக்கக் கூடாது. அது ஜனநாயகத்துக்கு எதிரானது. அமைதிக்கும் சமாதானத்துக்கும் பொது நீதிக்கும் மாறானது. நாட்டின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைப்பதற்கே இடமளிக்கும். எனவே அனைவருக்கும் சமச்சீரான ஜனநாயக அடிப்படைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். பாரபட்சங்கள், புறமொதுக்குதல்கள் இல்லாதொழிக்கப்பட வேண்டும். நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றால் அனைத்துச் சமூகங்களுடைய அரசியல் திருப்திகளின் மூலம் ஸ்திரத்தன்மையை உருவாக்குவது அவசியம். அந்த அடித்தளமே வலுவான – முன்னோக்கிய பொருளாதாரத்துக்கு அடிப்படையானது. அதற்கான பாதுகாப்பை வழங்கும் என்றெல்லாம் எழுதப்பட்டது. விவாதிக்கப்பட்டது.

ஆனால், இவற்றைக் கவனித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகாரத்தரப்பில் உள்ள எவரும் முன்வரவேயில்லை.

ஏன் ஊடகங்கள் கூட இதற்கு முழுமையான அங்கீகாரத்தையோ இடத்தையோ வழங்கியதில்லை. எல்லோரும் பழகிய தடத்திலேயே சுழன்று கொண்டிருந்தனர். அதிலுள்ள சுகத்தையும் நன்மைகளையும் சுலபமாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

இருந்தும் சமூக வலைத்தளங்களிலும் மாற்று அரசியலை முன்னெடுக்கும் இணையத்தளங்களிலும் சில பத்திரிகைகளிலும் தங்களால் இயன்ற அளவுக்கு இவற்றை முன்வைத்து வந்திருக்கின்றனர்.

இதுவொரு வரலாற்றுப் பணி, சமூகப் பங்களிப்பு என்ற உணர்வோடு இதைச் செய்து கொண்டிருக்கின்றனர். பலவிதமான சிரமங்கள், மன உளைச்சல்களின் மத்தியிலேயே இவர்கள் இதைச் செய்து வந்தனர். இன்னும் செய்து கொண்டிருக்கின்றனர். எந்த வகையான நன்மைகளும் இதனால் கிட்டவில்லை என்பது மட்டுமல்ல, இவ்வாறு மாற்று அரசியலை, மக்களுக்கான அரசியலை, தேசியப்பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்குமான அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடயங்களை, ஒவ்வொரு சமூகங்களுக்குமான மதிப்பை, இருப்பை, அவற்றின் பாதுகாப்பையெல்லாம் அறிவுபூர்வமாக முன்வைக்கும்போது பெரும் இழப்புகளையும் புறக்கணிப்புகளையும் இவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. போதாக்குறைக்கு அவமானப்படுத்தல்களும் துரோகிப்பட்டங்களும் கூடச் சுமத்தப்பட்டன. அதையும் ஏற்றுக்கொண்டே இவர்கள் இந்தப் பணிகளைச் செய்து வந்திருக்கின்றனர்.

ஆனால், மாற்றங்களை நிகழ்த்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான அதிகாரம் இவர்களிடமில்லை. மக்களிடம் செல்வாக்கைப் பெறுவதற்கான யுக்திகளும் இவர்களுக்கில்லை. அது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் மக்கள் ஆதரவு பெற்றவர்களுக்கும் அரசுக்குமே உண்டு. அவர்களைத் தவிர, வேறு எவர் எத்தகைய அபாய மணிகளை அடித்தாலும் அதனால் பயனொன்றுமில்லை. எத்தகைய ஊட்டமுடைய அறிவுரைகளை, ஆலோசனை வழங்கினாலும் அவற்றினால் பலன் கிட்டாது.

இங்கே நடப்பது என்னவென்றால், ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் அனுபவப் பகிர்தல்களையும் அறிவூட்டல்களையும் தெரிந்து கொண்டே புறக்கணித்து உதாசீனப்படுத்துவதேயாகும்.

இது தெரியாத்தனத்தினாலோ அப்பாவித்தனத்தினாலோ நடப்பதில்லை. மிக நன்றாகத் திட்டமிட்டே நடக்கிறது.

அதிகாரத்திலிருப்போரும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் துடிப்போரும் தமது நலன்களையே முதன்மைப்படுத்தவே  முயற்சிக்கின்றனர். இதற்காக அவர்கள் தமக்கு வசதிப்பட்ட வழிமுறைகளையும் சித்தாந்தங்களையுமே கைக்கொள்கிறார்கள். அது எவ்வளவு கீழானது, தவறானது என்றிருந்தாலும்.

இதுதான் அவர்கள் வகுத்துக்கொண்ட அறம். இதைப் பொது அறமாக மாற்றியமைத்துள்ளனர். சனங்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற அறம் இங்கே பொருட்படுத்தப்படுவதில்லை. எனக்குப் பசிக்கிறது. அதற்காக நான் என்னவும் செய்வேன், அது களவோ பொய்யோ அபகரிப்போ எதுவாக இருந்தாலும் என்பதே இங்கே நியாயம்.

இத்தகைய அறத்தைப்பற்றிச் சனங்களுக்கு எந்த அக்கறையும் எந்தப் புரிதலும் இல்லாதிருப்பது, சனங்களிடமிருந்து எத்தகைய எதிர்ப்பும் இல்லை என்பது இவர்களுக்கு வலு வசதியாகி விடுகிறது.

இது அறத்தின் வீழ்ச்சி, சனங்களுக்கு எதிரான செயல் என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய புத்திஜீவிகளும் சரி, படைப்பாளிகள், கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களும் சரி பலரும் வெளியே இதைப்பற்றிப் பேசுவதில்லை. விவாதிப்பதில்லை. தமது எதிர்ப்பையும் மறுப்பையும் வெளிப்படுத்துவதில்லை. இவர்களுக்குள்ளும் ஊறிப்போயிருக்கும் தாம் சார்ந்த நலனோக்கு எண்ணம் தயக்கங்களை உண்டாக்கி விடுகிறது.

ஆகவே பொதுவெளியில் எப்போதும் கனத்த மௌனமே நிலவுகிறது. இதைக் கடந்து பேச முனைவோர் ஒரு சிறிய தரப்பினராக இருப்பதால் அவர்கள் இலகுவில் புறங்கையினால் தள்ளிவிக்கூடியவர்களாகவே  உள்ளனர்.

இந்த நிலையானது குறுக்கு வழிகளில், இன, மத, மொழி, பிரதேச வேறுபாட்டுணர்வை வளர்த்துத் தங்களின் நலன்களை லேசில் அடைந்து கொள்வோருக்கு வாய்ப்பாகி விடுகிறது.

இந்தப் பின்னணி உண்மையைப் புறக்கணித்து விட்டு, எழுந்தமானமாக பொதுமைப்படுத்தி குண்டு வெடிப்புகளைத் தடுப்பதற்கான பதிவுகளை தமிழ், முஸ்லிம் தரப்பினர் எழுதவில்லை என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு நியாயமானது என்று தெரியவில்லை.

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்க வேண்டிய முதல் பொறுப்பு புலனாய்வுத்தரப்பிருக்குரியது. அவர்களுடைய விழிப்பு நிலை போதாமல் போனதேன் என்பது இன்னும் பலகோணங்களில் கேட்கப்படும் கேள்வியாகவே இருக்கிறது. மேலும் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்களை ஊதாசீனப்படுத்த வேண்டியிருந்தது ஏன் என்பதும் கூட. இது அவர்களுடைய தொழில்சார் கடமையும் தேசியப் பொறுப்புமாகுமல்லவா!

அடுத்தது அரசாங்கத்தின் தலைவர்களுக்குரியது. இந்தத் தாக்குதல்களைப் பற்றிய முன் ஐயப்பாடுகள் ஏற்கனவே அரசாங்கப்பிரதிநிதிகளுக்குத் தெரியும் என்றே வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் கூறுகின்றன. இவ்வளவு தாக்குதல்களிலும் ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூடச் சிக்கவில்லையே. அந்தளவுக்கு முன்னெச்சரிக்கையோடு அரசியல்வாதிகள் இதிலிருந்து தங்களைப் பாதுகாத்திருக்கின்றனரா? என்று ஒரு நண்பர் எழுப்பிய கேள்வி எளிதில் கடந்து சென்று விடக்கூடியதல்ல.

நடந்த தாக்குதல் ஒரு சிறிய அணித் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு வெளிச் சக்திகளுடன் தொடர்பிருந்திருக்கிறது. அந்த வலைப்பின்னலைப் பிடித்து விட்டால் எல்லாமே சுபமாக முடிந்து விடும் என்று பலரும் எண்ணக் கூடும். ஏன் அரசாங்கமே அப்படிச் சிந்திக்கலாம்.

ஜே.வி.பி, ஈழப்போராட்ட அமைப்புகள், புலிகள் இயக்கம் போன்றவற்றை எல்லாம் வெற்றி கொண்ட அரசும் படைகளும் இன்றைய அபாயத்தையும் நெருக்கடிகளையும் வெற்றி கொள்ளும் என்று பலரும் நம்பக்கூடும். அரசாங்கத்துக்கும் படையினருக்கும் கூட இந்த நம்பிக்கை இருக்கலாம்.

ஆனால் அடிப்படைகளில் மாற்றங்களைச் செய்யாத வரையில் அடிநெருப்புப் புகைந்து கொண்டேயிருக்கும். இந்த உண்மையை – இந்த உளவியலைப் புரிந்து கொள்வதே எல்லாவற்றையும் விட முக்கியமானது.

இதற்கு, இலங்கை ஒரு பல்லினச் சமூகங்கள் வாழ்கின்ற நாடு என்ற உணர்வு ஆட்சியாளர்களுக்கு முதலில் வரவேணும். தாம் சிங்களவர். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நாடு பௌத்தர்களுக்கும் சிங்களவர்களுக்குமே உரியது. அவர்களே முதன்மையாளர்கள். அவர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதே தமது முதற்கடமை என்ற எண்ணமெல்லாம் அடியோடு நீக்கப்பட வேண்டும். அப்படி இந்த எண்ணத்தை நீக்கவில்லை என்றால் எப்போதும் வெடிகுண்டின்மீது தலையை வைத்துப் படுத்திருப்பதற்குச் சமமாகவே இருக்கும்.

ஆகவே பல்லினச்சமூகங்களுக்குரியவாறு அரசியலமைப்பை அவர்கள் உருவாக்க வேண்டும். பல்லினச்சமூகங்கள் வாழ்கின்ற நாட்டிற்கு அவசியமானது பன்மைத்துவமே. இந்தப் பன்மைத்துவமே பாதுகாப்புக்கான வேராகும். நீரோட்டமாகும்.

இது மிக எளிய உண்மை.

ஆனால் இதைப் புரிந்து கொள்ள மறுக்கும் இனவாதக் கண்கள் தகுந்த சிகிச்சைக்குட்படுத்தப்படுவது அவசியம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகளுள்ளன. போருக்குப் பிந்திய கடந்த பத்து ஆண்டுகள் என்பது நிரந்தர அமைதிக்கும் சமாதானத்துக்குமாக அர்ப்பணிக்கப்பட்டிருக்க வேண்டியவை. பகை மறப்புக்கும் நல்லிணக்கத்துக்குமாகச் சேவையாற்றியிருக்க வேண்டியவை. புதிய – பொருத்தமான – சமத்துவமான அரசியலமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். சமூகங்களுக்கிடையிலான நெருக்கத்தை வளர்த்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். பொறுப்புக்கூறல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். புனரமைப்பும் மறுசீரமைப்பும் சரியாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமலே தந்திரமாக – நாடக அரசியலை முன்னெடுத்துச் சென்றதுதான் அடிப்படைத் தவறாகும். இதில் பாதி வேலைகளைச் செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இதற்கான நிதியும் ஏனைய வழங்களும் அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் எதுவும் நடக்கவில்லை. தன்னுடைய ஆட்சிக்காலத்தில்தான் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வையும் பரிகாரங்களையும் காணவில்லை அவர் என்றால், இப்போதாவது, இந்தச் சந்தர்ப்பத்திலாவது இதைச் செய்திருக்கலாம் அல்லவா. இப்போதும் அதைச் செய்யாமல் அவர் காலம் கடத்துவது எதற்காக? இதற்கான பொறுப்புக் கூறலை அவர் செய்வாரா? இதைப்பற்றிக் கேட்பது யார்?

இந்தத் தவறுகளெல்லாம் இன்னும்தான்  சீராக்கப்படவில்லை என்றால் எதிர்காலம் இன்னும் மிக மோசமானதாகவே இருக்கும்.

எதிர்காலத்தைப் பாதுகாப்பதென்பதும் நாட்டை ஸ்திரப்படுத்தி வைத்திருப்பதென்பதும் வீதிகளில் படையினரை நிறுத்தி வைத்திருப்பதும் சோதனையிடுவதும் சந்தேகத்தின் பேரில் எல்லோரையும் கைது செய்வதுமல்ல.

பதிலாக எல்லோருக்குமான இடத்தை – மதிப்பளித்தலை – வாழ்வளித்தலை வழங்குவதன் மூலமே சாத்தியமாகும்.

Share:

Author: theneeweb