இலங்கை தாக்குதல்களை சிறிய குழுவால் எப்படி திட்டமிட முடிந்தது? – 3

 

அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ், இலங்கை

தீவிர உணர்வு பெறுதல்

2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கண்டியின் மத்திய மாவட்டத்தில் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் பல முஸ்லிம்களை கடும்போக்கு நிலைக்கு தள்ளியிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட இந்த கலவரங்களின்போது குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மசூதி ஒன்றில் தீ வைக்கப்பட்டது, நூற்றுக்கணக்கான வீடுகளும், கடைகளும் சேதமாகின.

இந்த கலவரங்களுக்கு பின்னர் தங்களை பாதுகாக்க இலங்கை அரசு எதையும் செய்யவில்லை என்று உள்ளூர் முஸ்லிம்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இந்த கலவரங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னால், குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம் இளைஞர்களே தீவிர உணர்வுடையவர்களாக மாறியிருந்தனர். 2014ம் ஆண்டு சிரியாவிலும், இராக்கிலும் குறிப்பிட்ட பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ஐஎஸ் தீவிரவாத குழு அறிவித்த பின்னர் டஜன் கணக்கானவர்கள் இந்த குழுவால் ஈர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு கண்டியில் நடைபெற்ற முஸ்லிம்களு்கு எதிராக கலவரங்கள் அவசர நிலையை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தின.

இலங்கையின் மத்திய பகுதியிலுள்ள பள்ளி தலைமையாசிரியர் முகமது முக்சின் நிலாம் என்பவர்தான் சிரியாவிலுள்ள ஐஎஸ் அமைப்பில் இணைந்த முதல் இலங்கையர் ஆவார். 2015ம் ஆண்டு ரக்காவில் அவர் உயிரிழந்தார்.

“இந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்திய தற்கொலை தாக்குதலாளிகள் சிலர் தீவிர உணர்வு பெறுவதில் முக்கிய பங்காற்றிய ஒருவராக நிலாம் இருந்ததாக நம்பப்படுகிறது,” என்று பிபிசியிடம் பேசிய பயங்கரவாத தடுப்பு அமைப்பின் முன்னாள் அதிகாரி தெரிவித்தார்.

இந்த தாக்குதலாளிகள் சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டனரா என்பது தெளிவாக தெரியவில்லை. அப்துல் லதீஃப் முகமது 2014ம் ஆண்டு துருக்கி வரை சென்று பின்னர் தாயகம் திரும்பிவிட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிரியா செல்வதற்கு முன்னால், பிரிட்டனிலும், ஆஸ்திரேலியாவிலும் கல்வி கற்ற பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஜமீல், தேயிலை வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்.

ஏப்ரல் 21ம் தேதி இவரது இலக்கு கொழும்புவிலுள்ள தாஜ் சமுத்திரா ஆடம்பர விடுதியாகும். ஆனால், அவரது குண்டு வெடிக்காமல் போயிருக்கலாம். அவர் அவ்விடத்தை விட்டு செல்வது தெரிகிறது. பின்னர், தெஹிவலாவின் புறநகரிலுள்ள மோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்தி இரண்டு விருத்தினர் கொல்லப்பட காரணமானார்.

நான்கு குழந்தைகளுக்கு தந்தையாக 37 வயதான ஜமீல், உள்ளூர் கடும்போக்காளர்களுக்கும், வெளிநாடுகளை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஎஸ் அல்லது பிற இஸ்லாமியவாத குழுக்களுக்கு இடையிலான தொடர்பாளராக இருந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது,

பல ஆண்டுகளுக்கு முன்னால், இவரது கடும்போக்கு பார்வையால் மிகவும் கவலையடைந்த ஜமாலின் குடும்பம், பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் உதவியை நாடியது.

“அவர் முழுமையாக தீவிர உணர்வு பெற்றிருந்தார். கடும்போக்கு கருத்தியலை ஆதரித்தார். அவரோடு தர்க்க ரீதியாக வாதிட முயன்றேன்,” என்று இந்த அதிகாரி தெரிவித்தார்.

 

“இந்த கருத்தியலை எவ்வாறு பெற்றாய் என்று கேட்டபோது… லண்டனில் பிரிட்டனின் தீவிர கருத்தியலுடைய போதகர் அன்ஜிம் சௌத்திரியின் உரைகளை கேட்டதாக அவர் கூறினார். அந்த போதனைகளின்போது அவரை சந்தித்திருப்பதாகவும் அவர் கூறினார்,” என்று இந்த அதிகாரி தெரிவித்தார்.

பிரிட்டனில் மிகவும் பிரபலமானவராகவும், ஆபத்தான தீவிர மதப் போதகரில் ஒருவராகவும் அன்ஜிம் சௌத்திரி கருதப்படுகிறார். இஸ்லாமிய அரசு குழுவுக்கு ஆதரவு வழங்கியதாக 2016ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர், 2018ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்,

ஜமீலின் கடும்போக்கு சிந்தனைகளை உருவாக்கிய முக்கிய அம்சம் அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்தது என்று ஜமீலின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறிய பின்னர், ஜமீல் மேலும் தீவிர உணர்வுடையவராக மாறியுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு அவர் வந்தபோது, அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இது எவ்வளவு நாட்கள் நீடித்தது என்று தெரியவில்லை.

மசாலா வியாபாரிகள்

இலங்கையின் கிழக்கிலுள்ள மத போதகரான சஹ்ரான் ஹாசிம், கொழும்பிலுள்ள பணக்கார மசாலா வியாபாரிகளான இன்ஷாஃப் மற்றும் லாஹிம் இம்ராஹிமோடு எவ்வாறு தொடர்பை ஏற்படுத்தினார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

சகோதரர்களான இருவரும் ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

குருநேகள என்ற நகரை சேர்ந்த ஒரு பெண்ணை சஹ்ரான் திருமணம் செய்து கொண்டதாக முஸ்லிம் சமூக தலைவர் ஒருவர் கூறினார்.

சஹ்ரான் ஹாசிமோடு சேர்ந்து ஷாங்கரிலா விடுதியைத் தாக்கிய லாஹிம் இம்ராஹிம், குருநேகளயில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாத்தளையில் மசாலா நிறுவனத்தை நடத்தி வந்தவர். இந்த பகுதியில்தான் சஹ்ரானும், லாஹிம் இம்ராஹிமும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

முதல் தாக்குதல்கள் நடைபெற்று சில மணிநேரங்களுக்கு பின்னர் கொழும்புவின் புறநகரில் தெமட்டகொடயிலுள்ள லாஹிம் இம்ராஹிம் வீட்டில் காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது தற்கொலை குண்டு தரித்திருந்த அவரது மனைவி குண்டை வெடிக்க செய்து தன்னையும், அவர்களின் மூன்று குழந்தைகளையும், மூன்று அதிகாரிகளையும் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒன்பது தற்கொலை தாக்குதல்களை நடத்துவதற்கு மிகவும் கவனமான திட்டமிடுதலும், பெரிய அளவிலான நிதி ஆதரவும் தேவைப்படும் என்று அதிகாரிகளும், பாதுகாப்பு நிபுணர்களும் கூறுகின்றனர்.

இந்த தாக்குதல்கள் நடைபெற்ற ஒரு வாரத்திற்கு பிறகு, மாவனெல்ல நகரை சேர்ந்த மொஹமத் அப்துல் ஹக் மற்றும் மொஹமத் ஷஹீத் அப்துல் ஹக் ஆகிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இம்ராஹிம் சகோதரர்களோடு இவர்களுக்கு தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

“ஹக் சகோதரார்களுக்கு புத்தளம் மாவட்டத்தில் காயல் ஒன்றை பார்த்தப்படி பாதுகாப்பான வீடு ஒன்று இருப்பதை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சொத்தை வாங்குவதற்கான முன்பணம் இம்ராஹிம் சகோதரர்களிடம் இருந்து வந்துள்ளதற்கான சாட்சியங்களை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்,” என்று முன்னாள் உளவுத்துறை முகவர் தெரிவித்தார்.

இப்ராஹிம் சகோதரர்களின் தந்தை முகமது இப்ராஹிம் இப்போது போலீஸ் காவலில் உள்ளார். கொழும்பு வணிக வட்டாரத்தில் பிரபலமானவரும், அரசியலில் தொடர்புகளை கொண்டவருமான இவர், நாடாளுமன்றத்திற்கு ஒருமுறை போட்டியிட்டு தோற்றவர். இவர் மீது குற்றச்சாட்டு பதியப்படவில்லை. தடுத்து வைக்கப்பட்ட பின்னர் இதுவரை அவரிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஜமீல், இம்ராஹிம் சகோதரர்களை தீவிர உணர்வடைய தூண்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த குடும்பங்கள் ஒன்றையொன்று அறிந்திருந்தன.

அரசியல் அம்சங்கள்

உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல்களால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும், வலியிலும் இருந்து இலங்கை மக்கள் மீண்டு வருகையில், இந்த தாக்குதல்களுக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் சண்டைகள் மற்றும் பிரச்சனையை கையாளும் முறையாலும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

இரண்டு வேறுபட்ட கட்சிகளை சேர்ந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கரசிங்கவும் பகைமை உணர்வோடு உள்ளனர்.

வர்கள் ஒருவரையொருவர் புறக்கணிக்க எடுத்து கொண்ட முயற்சிகள் அரசியலில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு படைப்பிரிவுகள் துறையை கையில் வைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கரசிங்கவும், இந்திய உளவுத்துறையில் வழங்கப்பட்டிருந்த தகவல்கள் தங்களிடம் பகிரப்படவில்லை என்று இந்த தாக்குதல் நடைபெற்றவுடன் தெரிவித்தனர்.

உயரிய உளவுத்துறை அதிகாரிகள் தன்னிடமும் இது பற்றி கூறவில்லை என்பதை சிறிசேனவும் உறுதிபடுத்தினார்.

இரு தலைவர்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடு நாட்டை பெருமளவு பாதிக்கிறது என்று மனித உரிமை வழக்கறிஞர் பவானி பொன்சேகா கூறுகிறார்.

“நாட்டின் பாதுகாப்பில் ஏற்பட்ட பாதிப்பை விட மேலதிக விடயங்கள் இதிலுள்ளது. இதுதான் கவலை தருவது” என்று அவர் கூறுகிறார்.

இருவேறு அமைச்சர்கள் உயிரிழந்தோர் பற்றி தவறான எண்ணிக்கையை வழங்கியது பற்றி மாறிமாறி குறைகூறி கொண்டதில் இருந்து, அரசின் பல்வேறு அமைப்புகளின் செய்தி தொடர்பில் ஏற்பட்ட பலவீனமும் வெளிப்பட்டுள்ளது.

தாக்குதல் நடைபெற்று ஐந்து நாட்களுக்கு பின்னர், இந்த தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100க்கு மேலாக குறைத்து அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க பெண்ணொருவரை சந்தேக நபராக தவறாக அடையாளப்படுத்தியதற்கு இலங்கை காவல்துறை மன்னிப்பு கோர வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

பிபிசியோடு பேசிய பெரும்பாலான அரசு அதிகாரிகள், தாக்குதலோடு தொடர்புடையோர் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

இது, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கையை இஸ்லாமிய அரசு குழு இலக்கு வைக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “சிரியாவிலும், இராக்கிலும் தாங்கள் கட்டுப்படுத்திய இடங்களை இழந்துள்ள இந்த குழு, தங்களின் இடங்களின் ஒரு பகுதியாக இலங்கை தீவை பார்க்கிறது” என்கிறார்.

“இந்நிலையில், ஐஎஸ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்று அறிக்கை வெளியிட சமீபத்தில் அமைதியை நிலைநாட்டிய நாடு ஒன்றை தேர்வு செய்திருக்கிறது,” என்று இந்த வாரம் ஜனாதிபதி சிறிசேன பிபிசியிடம் கூறியுள்ளார்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, பல தசாப்பதங்களாக கடும் வன்முறைகளை அனுபவித்துள்ளது.

ஆனால், இந்த முறை இலங்கையின் படைப்பிரிவுகள் யாரை எதிர்க்க முயல்கின்றன என தெளிவாக தெரியவில்லை. எதற்காக இது நடைபெறுகிறது என தெரியவில்லை. உலக அளவில் பயங்கரவாத வலையமைப்பின் ஆதரவோடு இருக்கலாம் என ஊகமே உள்ளது.

இதற்கான போராட்டம் நீண்டதாக அமையலாம். ஆனால், அரசியல் ரீதியாக பிளவுண்டிருந்தால் நாடு பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.

Share:

Author: theneeweb