ஹொரவபத்தானையில் கைதான இருவரையும் 72 மணிநேரம் தடுத்துவைத்து விசாரணை செய்ய அனுமதி

விசாரணை செய்ய அனுமதி
தற்கொலை தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாதின் தலைவராக செயற்பட்ட மொஹமட் சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக ஹொரவபத்தானையில் கைதான இருவரையும் 72 மணிநேரம் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஹொரவபத்தானை – பத்தாவ பகுதியை சேர்ந்த 56 மற்றும் 47 வயதுடைய குறித்த இருவரும் ஹொரவபத்தானை – வீரசோலை கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
சந்தேகத்துக்குரியவர்கள் கெப்பத்திகொல்லாவ பகுதியிலுள்ள இரண்டு முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பயங்கரவாத தலைவர் சஹ்ரான் ஹாசீமுடன் குறித்த இரண்டு பேரும் தொடர்ச்சியாக கொழும்புக்கு பிரவேசித்துள்ளதாக தகவல்கள தெரிவிக்கின்றன.
அத்துடன் பயங்கரவாத தாக்குதல் திட்டம் தொடர்பில் சந்தேகத்துக்குரிய இரண்டு பேரும் முன்னதாகவே அறிந்து வைத்திருந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இதேநேரம், மொஹமட் சஹ்ரான் ஹஸீமினால் ஹொரவபொத்தானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதனை நடவடிக்கைகளை குறித்த இருவரும் ஒழுங்கு செய்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த பகுதியில் ஜமாத் முஸ்லிம் பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு நிதி நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.இதேவேளை, சினமன் க்ரான் விருந்தகத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவருடன், அவர்கள் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்துள்ளனர் என சந்தேகத்துக்குரியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சஹ்ரான் ஹஸீம் மேற்கொண்ட போதனை நடவடிக்கைகளில் பங்கேற்ற 18 பேர் தொடர்பிலும், சந்தேகத்துக்குரியவர்களிடமிருந்து தகவல் வெளிப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Share:

Author: theneeweb