கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தாம் பாதுகாப்பு தரப்பினருக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை – றிசாட் பதியுதீன் விடுத்துள்ள செய்தி.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தாம் பாதுகாப்பு தரப்பினருக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை என அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட இராணுவ தளபதி, அமைச்சர் றிசாட் பதியூதீன் தம்மை தொடர்பு கொண்டு தெஹிவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கைதி ஒருவர் தொடர்பில் கோரிக்கை ஒன்றை முன்வைத்ததாக குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவருடைய தந்தையின் பெயரை சுட்டிக்காட்டிய அமைச்சர், பின்னர் கைதானவரை பார்த்துக்கொள்ள என்ன செய்ய முடியும் என அமைச்சர் தன்னிடம் கூறியதாக இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், கைதி குறித்து ஒன்றரை வருடங்களின் பின்னர் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு அமைச்சருக்கு பதில் வழங்கியதாகவும் இராணுவ தளபதி நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், தாம் இரண்டு சந்தர்ப்பங்களில் மாத்திரமே இராணுவ தளபதியுடன் தொடர்பு கொண்டதாக அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவல்களை காவற்துறையில் வினவினோம்.

அதற்கு பதில் வழங்கிய காவற்துறை அவ்வாறான ஒருவர் தடுப்பில் இல்லை என குறிப்பிட்டது.

அவரை இராணுவத்தினர் தடுத்து வைத்துள்ளனரா இல்லையா என்பது தொடர்பில் விசாரிப்பதற்காக இராணுவ தளபதிக்கு அழைப்பினை எடுத்தேன்.

தேவையெனில் அந்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான பதிவுகள் எனது கையடக்க தொலைபேசியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தேவையெனின் காண்பிக்க முடியும்.

நான் இராணுவத்திற்கோ அல்லது காவற்துறைக்கோ அழைப்பினை மேற்கொண்டு கைது செய்யப்பட்டுள்ளவரை விடுவிக்குமாறு எந்தவித அச்சுறுத்தல்களும் விடுக்கவில்லை.

அவ்வாறு கூறுவார்களானால் அது தவறாகும்

அதற்கு முன்னர் நீர்கொழும்பில் இருந்து அழைப்பிணை மேற்கொண்டு, நாளைய தினம் நல்லடக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதன் காரணமாக பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு கிராம மக்கள் கோருவதாக நான் அவரிடம் கூறினேன்.

அதனை விடுத்து எவரையும் விடுதலை செய்யுமாறு எப்போதும் கோரிக்கை விடுக்கவில்லை என அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb