வன்முறையைத் தூண்டினால் கடும் சட்ட நடவடிக்கை: அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு

வாய்மொழி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ பொதுமக்களுக்கு இடையில் அச்சத்தை அல்லது அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை பரப்புதல் தண்டனைக்குரிய குற்றம் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்கு விதிகளுக்கு முரணாக செயற்படுபவர்களுக்கு 2019 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் 3 மாதங்களுக்கு குறையாததும் 5 ஆண்டுகளை விட அதிகரிக்காததுமான சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு அபராதமும் விதிக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யுத்தம், பாரபட்சம் , எதிர்ப்பு உணர்ச்சி அல்லது வன்முறையை தூண்டுவதாக அமையும் தேசிய ரீதியான, மதரீதியான அல்லது இனரீதியான பகைமையை ஆதரித்தல் ஆகிய செயற்பாடுகள் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டு ஒழுங்கு சட்டத்தின் கீழ் 10 வருடங்களுக்கு உட்பட்ட கடூழிய சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

எவரேனும் ஒருவர் வாய்மொழிமூலம் அல்லது வாசிக்கப்படக்கூடிய சொற்களின் மூலம் அல்லது செய்கைகளின் மூலம் அல்லது கட்புலனாகும் காட்சிகள் மூலமாகவோ, வேறு வகையான செய்கைகள் மூலமாகவோ சமூகத்திற்கிடையே அல்லது இனக்குழுக்களுக்கு இடையே அல்லது சமய குழுக்களுக்கு இடையே வன்முறையை தூண்டுதலாக செயற்படுதலும் தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை செயல்களை புரியவேண்டுமென்ற உட்கருத்துக்களைக் கொண்டிருத்தல் அல்லது சமய , இன, சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் காழ்ப்புணர்ச்சியை அல்லது வெறுப்பை ஏற்படுத்துதல் ஆகிய செயற்பாடுகள் 5 முதல் 20 வருட சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த தண்டனை வழங்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb