முத்தையன்கட்டு – மீட்பர்களைத் தேடும் நிலம் – கருணாகரன்

இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே போனால், தலையிலே நெருப்புப் பிடித்துவிடுமோ என்னுமளவுக்கு அடித்துக் கொண்டிருந்தது வெயில். கோடையல்லவா! நிழலுக்கொதுங்க வழியில் ஒரு மரமில்லை. தெருவோ பாழடைந்து புழுதியில் புழுத்துக் கிடக்கிறது. இந்தத் தெருவைப் புனரமைப்பதைப்பற்றி யாருமே யோசித்தமாதிரித் தெரியவில்லை. சபிக்கப்பட்டதைப்போலக் குண்டும் குழியும் வழி நெடுகப் பெருகிக் கிடக்கின்றன. யுத்தம் முடிந்து பத்து வருசமான பிறகும் ஒரு சிறு முன்னேற்றத்தையும் காணவில்லை. காணிகளில் பாதிக்கு மேல் மொண்டியும் புதரும் படர்ந்து மூடிக்கிடக்கின்றன. பல காணிகள் ஆட்களுமில்லாமல் செய்கையுமில்லாமல் தரிசாகி விட்டன.

எங்கேனும் ஒரு வீடு அபூர்வமாய். சற்றுத் தள்ளி இன்னொன்று. ஆட்களைக் காண்பதே அதிசயமாகியதைப்போல இரண்டொருவர் மட்டும் புழுதிக்குழிகளில் விழுந்தெழும்பித் தடுமாறிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். தூரந்தொலைவில் ஐந்தாறு மாடுகள் மேய்ந்து கொண்டு நிற்கின்றன. வெயிலைத்தான் தின்கின்றனவோ? இடையிடையே இந்தக் கோடையிலும் யாரோ சவாலுக்குச் செய்வதைப்போல அங்குமிங்குமாக பச்சையாகத் தோட்டங்கள். குளத்தை அண்டிச் சற்று விரிந்த பரப்பில் வயல்கள்.

நாங்கள் சென்று கொண்டிருந்த வீதியைக் குறுக்கறுக்கொண்டோடுகிறது பன்றிக் கூட்டமொன்று. குட்டிப்பன்றி நின்று திரும்பி எதையோ நோக்க, தாய்ப்பன்றி அதை அணைத்துச் செல்கிறது. மேலும் செல்ல, வயற்கரைக்கும் தெருவுக்குமிடையில் படுவேலியில் நின்று மயிலொன்று அகவுகிறது. அருகே இன்னொரு மயில். அது ஆண் தேவதையைப்போலத் துணையாகப் பக்கத்தில் நின்றது. தோகை நீண்டு நீலப்பச்சை அலையாகக் காற்றில் அசைந்தது. விரியவில்லை. அக்கினி வெயிலல்லவா!

இதென்ன கோலம், ஊரெல்லாம் அழிந்த மாதிரி?

இப்படியா இருந்தது முத்தையன்கட்டு? இப்போது மீட்பும் காவலும் கலகலப்புமில்லாத ஓரிடமாகி விட்டதா இந்த இடம்? துக்கம் தொண்டையில் நிரம்பிக் கட்டியாக இறுக்கியது.

அது சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்த காலம். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்துச் சுதேசப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தது அரசாங்கம். இதனால் எல்லா இடங்களிலும் உள்ளுர் உற்பத்தி களை கட்டியது. விவசாயத்தைப் பெருக்குவதற்காக வன்னியில் குளங்களைக் கட்டிச் சனங்கள் குடியேற்றப்பட்டனர். குடியேறிய சனங்கள் காடு மேடெல்லாம் பயிர் செய்யத் தொடங்கினார்கள். குளத்திலிருந்து பாயும் தண்ணீரில் பாசனப்பயிர்ச்செய்கை நடந்தது. காலபோகம், சிறுபோகம் என்று இரண்டு போகச் செய்கை. சில இடங்களில் இடைப்போகமும் செய்தார்கள். அப்படி உருவாகிய ஒன்றுதான் முத்தையன்கட்டும்.

முத்தையன்கட்டு புது நிலத்தில் இள  நாற்றுப்போல மளமளவென்று வளர்ந்து கொண்டிருந்தது. எல்லாக் காணிகளும் பச்சை மயமாகியிருந்தன. வழியிலும் தெருவிலும் சனங்களின் போக்கும் வரத்தும். தோட்டங்களில் நீங்காத ஒரு சங்கீதத்தைப்போல நீரிறைக்கும் இயந்திரங்களின் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும். அந்தச் சத்தத்தை மேவி இலங்கை வானொலியில் “மச்சானே மச்சானே எந்தன் ஆசை மச்சானே…” என்று சில்லையூர் செல்வராஜன் “தணியாத தாக”த்துக்காகப் பாடிக்கொண்டிருப்பார். அல்லது பி.எச். அப்துல் ஹமீத்தோ கே.எஸ். ராஜாவோ, ராஜேஸ்வரி சண்முகமோ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் சத்தம் எழுந்து வரும். காலை என்றால் பொங்கும் பூம்புனல் பனிக்காற்றைத்தடவி எழும்.

தெருவில் போகும்போதே மண்ணெண்ணெய் வாசம் நாசியிலேறும். ஏற்று நீர்ப்பாசனத்தில் ஏராளம் காணிகள் விளைந்து கொண்டிருந்தன. செய்கைக்காலத்தில் வாய்க்கால்களில் எப்போதும் நீரோடிக் கொண்டிருக்கும். RB என்ற வலதுகரையிலுள்ள பெரிய வாய்க்காலில் குஞ்சு குருமான்கள் தொடக்கம் குமரிகள் வரையில் குளித்துக் கொண்டிருப்பார்கள். பொழுதிறங்க தோட்டத்திலிருந்தும் காட்டிலிருந்தும் வாற வேலையாட்கள் வாய்க்காலில் நிறைந்திருப்பார்கள். இடதுகரையிலும் அப்படித்தான்.

கற்சிலைமடுச்சந்தி, வலதுகரைச்சந்தி, இடதுகரைக்கட்டு எல்லா இடத்திலும் பொழுதுபட ஆட்கள் கூடுவார்கள். பகல் முழுவதும் வேலை செய்தவர்கள் மாலையில் கடையடிக்கு வருவார்கள். அப்போதுதான் காலைப்பத்திரிகையையே சிலர் வாங்குவதுண்டு. பொருட்களை வாங்குவதும் வீடு செல்வதுமாக கலகலக்கும் சந்திகள். சில இடங்களில் பெற்றோ மாக்ஸ் வெளிச்சத்தில் சீட்டாட்டம் நடக்கும். கொத்து ரொட்டிக்கடைகளில் எம்.ஜி.ஆர் பாட்டுத் தூள் கிளப்பும். ஒட்டுசுட்டான் சந்தியில் எம்.ஜி.ஆர் படம்போட்டு, எம்.ஜி.ஆர் பெரிலேயே ஒரு சலூனிருந்தது. பக்கத்தில் கதிர் ஸ்ரோர், லக்கி ஸ்ரோர்ஸ், ஆனந்தா ஸ்ரோர்ஸ் என்று ஏழெட்டுப் பெரிய கடைகள். அதுக்குப் பக்கத்தில் விற்பனைத் திணைக்களக் கட்டம். அதுக்கு முன்னால் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அலுவலகம் எல்லாமிருந்தன. முத்தையன்கட்டு வலதுகரை, இடதுகரை, மன்னாகண்டல், கற்சிலைமடு, கெருடமடுப்பக்கம் இருக்கிற சனங்களெல்லாம் ஒட்டுசுட்டான் சந்திக்கே உடுபிடவைகள், பாத்திரங்கள் வாங்குவதற்கு வரவேணும். உட்கடைகளில் மற்றப்பொருட்களை வாங்கலாம்.

யாழ்ப்பாணத்திலிருந்தும் காரைநகரிலிருந்தும் பருத்தித்துறையிலிருந்தும் தினமும் மூன்று நான்கு பேருந்துகள் முத்தையன்கட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தன. மாதகல், கைதடி, கோப்பாய், நீர்வேலி, சிறுப்பிட்டி, ஆவரங்கால், இடைக்காடு, நெல்லியடி ஆட்கள்தான் பெருமளவில் முத்தையன்கட்டில் குடியேறித் தோட்டம் செய்தனர். வெங்காயமும் கரணையும் மரவள்ளியும் ராசவள்ளியும் மிளகாயும் நிலக்கடலையும் உழுந்தும் பயறும் கௌபியும் எள்ளும் இன்னும் பல பயிர்களும் விளைந்து தள்ளின. செம்மண் நிலம். புதுத்தறை என்றதால் போட்ட முதலை விட பத்துமடங்கு, பல மடங்கு என்று அமோக விளைச்சல் எல்லா விவசாயிகளுக்கும் கிடைத்தது. இந்த விளைச்சலை வைத்தே பல குமர்கள் அந்த நாளில் கரைசேர்ந்தன. யாழ்ப்பாணத்திலிருந்த மண் வீடுகள் என்ற ஓலைக்கூரைகள் எல்லாம் ஓட்டுக்கூரையோடு கல்வீடுகளாகின. சில அமெரிக்கன் பாஷன் வீடுகள் ஊர்களில் முளைத்தன.

இவ்வளவுக்கும் முத்தையன்கட்டு உருவாகியே அப்பொழுது பத்துப் பதினைந்து ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. எல்லாம் முத்தையன்கட்டுக் குளத்தைக்கட்டியபிறகுதான். குளத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டவையே வலதுகரை, இடது கரை என்ற இரண்டு வாய்க்காற்கரைக் குடியேற்றங்களும். நீர் பாயும் வாய்க்கால்களையும் ஆதாரமாகக் கொண்டே மாதகல், கைதடி, கோப்பாய், நீர்வேலி, சிறுப்பிட்டி, ஆவரங்கால், இடைக்காடு, நெல்லியடிப் பக்கத்து ஆட்களுக்குக் காணிகள் வழங்கப்பட்டன. இதையெல்லாம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு படித்தவாலிபர் திட்டம் என்ற பேரில் அரசாங்கம் வழங்கியிருந்தது. முத்தையன்கட்டுக்கு வந்தவர்கள் அத்தனைபேரும்  இளைஞர்கள். வந்தவர்கள் ஜல்லிக் கட்டுக்காளைகளைப்போல முழு வேகத்தோடு (உஷாராக) வேலை செய்தார்கள். ஒரு பத்தாண்டுகளுக்கிடையில் முத்தையன்கட்டுக்கென்று தனியாகப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், பாடசாலைகள் இரண்டு, சந்தை ஒன்று இப்படி ஏராளம் விசயங்கள் வந்தன.

கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் போன்ற வரலாற்றுச் சிறப்புடைய கிராமங்களை விட முத்தையன்கட்டே எல்லோராலும் பேசப்பட்டது. எல்லாத்துக்கும் காரணம், பொருளாதாரம்தான். முத்தையன்கட்டு அன்றைய நிலையில் காசு காய்த்த மையம். அப்படியென்றால் அதற்குத்தானே பேரும் புகழும் மதிப்பும். ஆனால் வன்னியின் கடைசி மன்னன் என்று வன்னிச்சனங்களால் கொண்டாடப்படும் பண்டாரவன்னியனின் சிலையும் கல்வெட்டுமிருந்த கற்சிலைமடு சின்னஞ்சிறு கிராமமாகவே இருந்தது. அப்படித்தான் ஒட்டுசுட்டானும். தான்தோன்றீஸ்வரர் கோயில் இருக்கிற வரலாற்றுச்சிறப்புடைய இடம் என்றாலும் முத்தையன்கட்டின் வளர்ச்சியில்தான் ஒட்டுசுட்டான் இயங்கிக் கொண்டிருந்தது.

அப்போது ஏற்றுநீர்ப்பாசனம் பலருக்கும் ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. எந்த உயரத் தறைக்கும் தண்ணீர் பாய்ந்து வரக்கூடிய ஏற்பாடு அது. ஆனால் மன்னாகண்டலுக்கு அது கிடைக்கவில்லை. மன்னாகண்டல் பக்கத்தில் மலையகத்திலிருந்து 1977 இல் இடம்பெயர்ந்து வந்தவர்களையே குடியேற்றினார்கள். அங்கே தண்ணீர் கிடையவே கிடையாது. ஏற்று நீர்ப்பாசனமும் இல்லை. இறங்கு நீர்ப் பாசனமும் இல்லை. அரசாங்கத்தினால் கட்டப்பட்ட பொதுக்கிணறுகளில் சொட்டுத் தண்ணீர் என்ற அளவில்தான் நீர் முகம் காட்டும். கோடையில் என்றால் இல்லை. அந்தச் சனங்கள் அந்த நாளில் பட்ட பாடு சொல்லி மாளாது. பிறகு இயக்கம் வந்து தண்ணீருக்கு ஏற்பாடு செய்தது. ஏனையவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வேறிடங்களில் குடியேறினார்கள்.

இப்படியே வளர்ந்து கொண்டிருந்த முத்தையன்கட்டுக்கு வந்தது சோதனை. ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் வந்த கையோடு 1984 இல் இராணுவமும் வந்து குடியேறியது அங்கே. அதோடு அந்தப் பிரதேசத்தின் கதையே முடிந்தது. 1982 இல் பொலிஸ் நிலையமாக இருந்த காலத்தில் விடுதலைப்புலிகள் ஒரு தாக்குதலைச் செய்திருந்தனர். பிறகு 1987 இல் ஈரோஸ் இயக்கம் இன்னொரு பெரிய தாக்குதலைச் செய்தது. முகாமை விட்டே பல படையினர் தப்பியோடியிருந்தனர். ஆனாலும் படையினர் முழுதாக விலகவில்லை. பிறகு முகாம் பலமாகியது. முகாம் பலமாகச் சனங்கள் இடம்பெயர்ந்தனர். ஊரெல்லாம் காடாகியது. இந்திய அமைதிப்படைக்காலத்தில் ஊர் மெல்ல உயிர்த்தது. ஆனாலும் களைகட்டவில்லை. அதற்கிடையில் அங்கிருந்தவர்களில் முக்கால்வாசிப்பேரும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து விட்டனர். மிஞ்சியவர்கள் மாதகல், இடைக்காடு, நெல்லியடி, சிறுப்பிட்டி, நீர்வேலி என்று தங்கள் ஊர்களுக்குத்திரும்பினார்கள். முத்தையன்கட்டில் முள் மூடத்தொடங்கியது. இடையிடையே ஒட்டுசுட்டானைப் புலிகள் மீட்டாலும் முத்தையன்கட்டு பழைய நிலைக்குத் திரும்பவில்லை. இன்னும் அப்படியேதானிருக்கிறது.

நாங்கள் கற்சிலைமடுவிலிருந்து முத்தையன்கட்டுக்குப் போகும் பாதையும் சரி, ஒட்டுசுட்டான் பழைய சந்தியடியிலிருந்து அல்லது இப்போதுள்ள பொலிஸ் நிலையத்தடியிலிருந்து முத்தையன்கட்டுக்குப் போற பாதையும் பாழாவிட்டன. முப்பதாண்டுகளுக்கு மேலாக எந்தப் பாதையும் புனரமைக்கப்படவில்லை.

கற்சிலைமடுவில் பண்டாரவன்னியனின் சிலை தனித்து நிற்கிறது. பள்ளிக்கூடத்தைச் சற்றுப் பெருப்பித்திருக்கிறார்கள். பனங்கூடலில்  பண்டாரவன்னியனைத் தோற்கடித்த நினைவாக வொன் ட்றிபேக் பொறித்த கல்வெட்டும் அப்படித்தான். தனித்துக் கிடக்கிறது புல்லின் நடுவே.

கோப்பாய்ப்பீலி, மாதகல் பீலி, இடைக்காட்டுப் பீலி, சிறுப்பிட்டிப்பீலி, நீர்வேலிப்பீலி, கைதடிப்பீலி என்று தண்ணீர் பாய்ந்த வாய்க்கால்களில் பாதிக்குமேல் ஆட்களே இல்லாமல்  எல்லாம் காய்ந்து கிடக்கின்றன. பாயும் வாய்க்கால்களிலும் மாட்டைக்குளிப்பாட்டுவோர் கூட இல்லை. மன்னாகண்டலில் ஆட்களே இல்லை. கெருடமடுவோடு குடியிருப்பு முடிகிறது. பொதுவாகப் பார்த்தால் எல்லா இடமும் ஒரு சூனியப்பிரதேசம் போலாகி விட்டன. குளம் மட்டுமே உருப்படியாக இருக்கு. புனரமைக்கவும் பட்டிருக்கிறது. முத்தையன்கட்டுக்குளத்துக்குப் போகும் பிரதான வீதியே முத்தையன்கட்டுக்கான வீதியும். இந்த வீதியைப் புனரமைக்க வேண்டும் என்றால் நீர்ப்பாசனத்திணைக்களம்தான் அதைச் செய்யவேணும் என்கிறார்கள். ஆனால், அதற்கான நிதி இப்போதைக்கு வரப்போவதில்லை. மாகாணசபையின் கீழ் நீர்ப்பாசனத்திணைக்களம் இருப்பதால் மாகாணசபைதான் ஏதாவது அருள வேணும். ஆனால் மாகாணசபைக்கு அந்த வல்லமை இருக்கிறதா?

இருக்கிற சனங்களுக்கும் வெளித்தொடர்பே இல்லாத வாழ்க்கை. பாழடைந்த கிராமங்களாகி விட்டன பல இடங்களும். பத்திரிகை கிடையாது. முகப்புத்தகம் அவர்களைத் தீண்டாது. தங்களுக்குத் தெரிந்த அளவுதான் அவர்களுடைய உலகம். அதில் யாரும் தீண்டமுடியாது.

புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் கீழ்தான் முத்தையன்கட்டு உள்ளது. ஒட்டுசுட்டான் தனியான பிரதேச செயலகம் என்றாலும் அதற்குத் தனியான பிரதேச சபை கிடையாது. ஆகவே புதுக்குடியிருப்புப் பிரதேச சபையினரே இதையும் ஆளுகை செய்கின்றனர். தவிசாளரும் உபதவிசாளரும் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தங்களுடைய பிரதேசத்துக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள்.

ஒட்டுசுட்டானுக்குத் தனியான பிரதேச சபை ஒன்று வேணும் என்று மக்கள் கேட்கிறார்கள். ஆனால் அது இப்போது தேவையில்லை என்று தனியான பிரதேச சபை உருவாகுவதற்குச் சிவமோகன் எம்பி விடுகிறாரில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர் மக்கள். இதை மேவி நிச்சயமாக ஒட்டுசுட்டானுக்கென்றொரு பிரதேச சபை உருவாக வேணும். அது முறிகண்டிவரையும் நீளும்.

கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து விட்டது. முத்தையன்கட்டிலிருந்த கல்மலை உடைக்கப்பட்டு விட்டது. தட்டையர்மலை என்றொரு சிறிய மலை அங்கே இருந்தது. அந்த மலையை உடைத்தது போதாதென்று 120 அடி ஆழத்துக்குத் தோண்டியும் விட்டனர். 60. 70 அடி உயரமாக இருந்த கற்பீடம் இன்று பெரிய குழியாகி விட்டது. இது இன்னொரு குளமா? என்றுதான் நீங்கள் பார்க்கும்போது கேட்பீர்கள்.

ணறுகள் முன்பு முப்பது அடி ஆழத்திலேயே இருந்தன. இப்போது நிலமட்டம் தாழ்ந்ததால் எல்லாமே வற்றத் தொடங்கி விட்டன. ஒரு தடவை முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் ரவிகரன் மூலமாக முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நேரில் சென்று எல்லாவற்றையும் பார்த்தார். அதற்குப் பிறகு சில தடையுத்தரவுகள் வந்தன. ஆனால் அதற்குள் எல்லாமே முடிந்து விட்டன.

ஒட்டுசுட்டானுக்கு மேற்கே உள்ள குருந்தூர் மலைக்கும் இதே கதைதான். அங்கே இப்போது யாருமே போக முடியாது. அதை நடத்துவது படைத்தரப்போடு சம்மந்தப்பட்டவர் என்று தகவல். குருந்தூர் மலை வரலாற்றுப்பிரசித்திமான இடம் என்பது மக்களுடைய கருத்து. ஆனால் அதை யாருமே நெருங்க முடியாது. இப்படியே துக்கம் பெருத்துத் தொண்டையை அடைக்கிற நிலைமையில்தான் முத்தையன்கட்டும் அதனோடிணைந்த ஊர்களும் உள்ளன.

இதையெல்லாம் மீட்பது யார்? அந்த அதிசயம் எப்பொழுது நிகழும்?

Share:

Author: theneeweb