வாய்ச்சொல் வீரர்களின் கால்களில் முள்ளிவாய்க்கால்…. தமிழ்ச்சனங்களும் தமிழ் அரசியலும்தான். – கருணாகரன்

ட்சி 01

————

17 மே 2019 இரவு ஒரு தொலைபேசி அழைப்பு. “முள்ளிவாய்க்காலுக்கு எப்படிப் போறது?” என்று கேட்டார் நண்பர் ஒருவர். கேட்டவர் ஒரு மூத்த ஊடகவியலாளர். அவரோடு வெளிநாட்டுப்பத்திரிகையாளர் ஒருவர் மே18 நினைவு கூரல் நிகழ்வுகளைப் படம் பிடிக்கவும் நேரில் அவதானித்துச் செய்தி சேகரிக்கவும் விரும்புவதால், அவரை அழைத்துச் செல்வதற்கான வழியைக் கேட்டார் நண்பர்.

இதைக் கேட்கச் சிரிப்புத்தான் வந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டு வழியைச் சொன்னேன்.

இதற்கு முதல்நாள் வேறு சில நண்பர்கள் கிளிநொச்சிக்கு வந்திருந்தனர். ஒருவர் இந்தியாவிலிருந்து வந்திருந்தார். இன்னொருவர் கனடாவிலிருந்து. ஏனையவர்கள் தென்பகுதியிலிருந்து.

ல்லோரும் வந்தது மே 18 முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளைப் பார்ப்பதற்காகவே. எப்படி மாவீரர் நாள் நிகழ்வுகளைப் பார்ப்பதற்காக ஒரு கூட்டம் செல்லுமோ அவ்வாறு.

இதைப்போல இன்னொரு தொகுதி நண்பர்கள் மே 17 இரவு தொடர்பு கொண்டார்கள். மறுநாள் (மே 18) முள்ளிவாய்க்காலுக்கு வருகிறோம். “வரும் வழியில் கிளிநொச்சியில் பார்க்க முடியுமா?” என்று கேட்டார்கள்.

“எதைப்பார்க்கலாம்?” என்று கேட்டேன்.

“இல்லை, வரும்வழியில்தானே நீங்கள் இருக்கிறியள்! வாய்ப்பிருந்தால் உங்களைப் பார்க்கலாம்” என்றார்கள்.

மெல்லிய சிரிப்போடு “வாங்கோ” என்று சொல்லித் தொலைபேசியைத் துண்டித்தேன்.

இப்படி முள்ளிவாய்க்காலை நோக்கி ஒரு படையெடுப்புக்கு எட்டுத்  திக்கிலிருந்தும் ஆட்கள் வருகிறார்கள். இதில் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல வெளிநாடுகளிலிருந்தும் ஆட்கள் வருகிறார்கள்.

இதை விட “முள்ளிவாய்க்கால் 10” என்று வேறு ஏதேதோ நிகழ்ச்சிகள் உலகெங்கும்.

உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை.

ஒரு துயர நிகழ்வு எப்படி அவரவர் தேவைகளுக்கான கச்சாப்பொருளாகி விட்டது என்று யோசித்தேன்.

முள்ளிவாய்க்காலில் தமிழர்களுடைய போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்று பலரும் சொல்லி வருகிறார்கள். இல்லை அங்கே புலிகள்தான் தோற்கடிக்கப்பட்டனர். போராட்டம் தோற்கடிக்கப்படவேயில்லை என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.

ஆனால், 2009 மே முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு – பின் முள்ளிவாய்க்கால் காலத்தில் – 2019 இல் தமிழர்களே தங்களைத் தோற்கடித்திருக்கிறார்கள்.

நடக்கின்ற நிகழ்வுகள் அத்தனையும் இதையே நிரூபிக்கின்றன. யுத்தம் முடிந்த பிறகு – முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்த பின்னான பத்து ஆண்டுகளில் தமிழர்கள் எந்த வகையில் முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றனர். அரசியலில், போராட்டத்தில், விடுதலைக்கான பயணத்தில், பொருளாதார மேம்பாட்டில், சமூக வளர்ச்சியில், பாதுகாப்பில்….?

குறிப்பு

————-

வழமையைப்போல மே 18 இல் அங்கே (முள்ளிவாய்க்காலில்) சடங்குத்தனமாக – அரசியல் ரீதியாக ஒரு நினைவு கூரல் என்ற நிகழ்வு நடக்கும்.

அதில் பங்கேற்பதற்கு வருகின்றவர்களுக்கும் முள்ளிவாய்க்கால் துயர அனுபவத்துக்கும் இழப்புகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இருப்பதில்லை. கடந்த ஆண்டுகளிலும் இவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு வந்திருந்தனர். பிரமுகர்களாக. வேடிக்கை பார்ப்பவர்களாக. அந்நியர்களாக. விருந்தாளிகளாக. காலக் கோமாளிகளாக.

பிள்ளைகளை இழந்தவர்களும் சோதரர்களைப் பறிகொடுத்தோரும் தாய் தந்தையர்களை இழந்தோரும் தங்கள் பாட்டில் துயர்ப்பெருக்கோடு கதறி அழுதனர். துயராற்ற முடியாமல் மணலில் கதறிப் புரண்டனர்.

இழப்பின் வலியும் துயரொலியும் வானெழுந்து மூடியது. காற்றுத்திணறியது. அருகிருக்கும் சமுத்திர அலைகள் கொந்தளித்துறைந்தன. நடுவானில் சூரியன் உருகியது.

ஆனால் இன்னொரு பக்கத்தில் இதோடு சம்மந்தப்படாதவர்கள் இதையெல்லாம் கடந்து தங்கள் தங்கள் அவரவர் நலன்களில் குறியோடிருந்தனர். அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்கினை உயர்த்திக் கொள்வதற்கான அடையாளங்களைச் சேகரித்தனர்.

ஊடகங்கள் தமக்குக் கச்சாப்பொருளைத் தேடின. அவை அரசியல்வாதிகளின் நிழலில் ஒதுங்கிக் கிடந்தனர்.

முகப்புத்தக வீரர்கள் தங்களை மையப்படுத்திப் பதிவேற்றங்களைச் செய்வதற்கான படங்களையும் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டனர்.

இப்படியே அவரவருக்கு எதை எடுக்க முடியுமோ அதை எடுத்தனர். ஆம், முள்ளிவாய்க்கால் இவர்களுக்கு அள்ளி வழங்குகிறது என்பது உண்மைதான்.

பாதிக்கப்பட்டவர்களோ ஆற்றாமையோடும் முகச்சுழிப்போடும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களால் என்ன செய்து விட முடியும்? ஆம், அவர்கள் மீண்டும் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் இது எதிராளிகளால் அல்ல. சொந்தச் சோதரர்களால்.

முன்னர் போரினால் தோற்கடிக்கப்பட்டவர்கள். அரசாங்கத்தினால் பலியிடப்பட்டவர்கள். சர்வதேச சமூகத்தினால் கைவிடப்பட்டவர்கள். இந்த யுகத்தின் அநாதைகளாக மாற்றப்பட்டவர்கள்.

அவர்களில் பழியோ பாதகமோ இருக்கலாம். ஆனால் மற்றவர்களை விட அதெல்லாம் குறைவானதே.

அருகில் வந்து நிற்போர் யாரென்றால்… “சொந்தச் சோதரர் நலிவுறுதல் கண்டும் நெஞ்சிரங்கார் கிளியே!” என்போர்.

இப்போதும் அப்படித்தான்.

“நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மானிடரைக் காணுகையில்…”

காட்சி 02

————

எல்லாம் கால மாற்றம்தான்.

2009 மே மாதத்தின் இதே நாட்கள்.

திசையெட்டும் இருண்டிருந்தன. கஞ்சிக்கும் வழியற்றிருந்த பொழுதது.

முள்ளிவாய்க்கால் பகுதிகளிலிருந்து எந்தப் பக்கத்தால் வெளியேறலாம், எப்படி வெளியேறலாம் என்று திணறித் தவித்துக் கொண்டிருந்தனர் பல்லாயிரக்கணக்கான மக்கள்.

போரின் உச்சக்கட்டமும் இறுதிக்கட்டமும் அது.

அங்கே வழியற்றுத் திசையற்று வாழக் கதியற்றிருந்தனர் அன்று.

வயிற்றில் பசித்தீ.

நெஞ்சில் துயர்த்தீ.

கண்களிலும் மனசிலும் இருள்.

மரணம் முகத்தில் வந்து முகர்ந்து விளாடிக் கொண்டிருந்தது.

மரணம் வழி நெடுகக் குழிகளை வெட்டி வைத்துப் பார்த்திருந்தது.

பொறியில் சிக்கியிருந்தது எதிர்காலம்.

அப்போது எந்த மீட்பருமே இல்லை.

இறுதியில் படையினரே கதவைத்திறந்தனர். அது பொறியா கதவா வழியா மரணக்குழியா என்று தெரியாத நிலை.

அப்போது பற்றிக் கொள்ள ஒரு கையில்லை. சாய்ந்து கொள்ள ஒரு தோளில்லை. ஆறுதல் சொல்வதற்கு ஒரு ஆளில்லை. தலையைக் கோதி மடியில் சாய்த்து கன்னத்தில் வடியும் கண்ணீரைத் துடைத்து விடுவதற்கு எவருமில்லை.

இப்போதையைப்போல முள்ளிவாய்க்காலுக்கு வருவதற்கு அன்று யாருமே விரும்பியிருக்க மாட்டார். முண்டியடித்திருக்க மாட்டார்கள்.

பதிலாக முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறிவிடுவதற்கே பலரும் முண்டியடித்தனர். (இது காலமாற்றமன்றி வேறென்ன?)

இன்னொரு சாரார் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேற விரும்பாமல் தாங்களாகவே சாவைத் தெரிவு செய்தனர். சிலர் மனைவி மக்களோடு மரணத்தைத் தழுவினர். (இது சரி பிழை என்ற விவாதங்கள் ஒரு புறமிருக்கட்டும்).

சரியோ தவறோ இதன்போதெல்லாம் யாருமே அங்கில்லை அப்போது. யாரும் வரத் துணியவுமில்லை.

இப்பொழுது?

கமெராக்களோடு படையெடுக்கிறது ஒரு கூட்டம். வெள்ளாடைகளோடு சுற்றிச் சுழல்கிறது இன்னொரு கூட்டம். இவர்களுக்கெல்லாம் எதிலே நாட்டம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

குறிப்பு

————-

முள்ளிவாய்க்கால் 10 ஆவது ஆண்டு நிறைவையொட்டி முள்ளிவாய்க்கால் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதலாவது பிரகடனக் கோரிக்கை – முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து 10 ஆண்டுகளாகியும் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ஆகவே இனியும் தாமமதியாமல் நீதி கிடைக்க வேண்டும் என்பது.

இந்த நீதியை வழங்குவது யார்?

சர்வதேச சமூகம் என்றால் எந்தச் சர்வதேச சமூகம்?

அது எப்போது நீதியை வழங்கும்? அது ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறது?

தாமதமான நீதி இல்லை என்பதற்குச் சமன் என்பது அனுபவ மொழி. சர்வதேச சமூகம் வழங்கும் என்று சொல்லப்படும் நீதி எப்போது கிடைக்கும்? என்றே தெரியாத நிலையில் தாமதமான நீதியினால் என்ன பயன் கிடைத்து விடப்போகிறது?

உண்மையில் இந்த நீதி கிடைக்குமா?

ஆயிரணக்கனக்கானோர் கேட்பாரற்றுக் கொல்லப்படும்போது வாழாதிருந்த சர்வதேச சமூகத்தின் ஞானக் கண் இனிமேல்தான் திறக்கப்போகிறதா?

முள்ளிவாய்க்காலில் இழப்பைச் சந்தித்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்குமான நீதி அரசினாலும் சர்வதேச சமூகத்தினாலும் மட்டுமல்ல, தமிழ் மக்களாலும் வழங்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் தலைமைகளினாலும் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொருக்கும் பொறுப்புகளுண்டு. ஒவ்வொருவரும் பொறுப்புக் கூற வேணும்.

ஆனாலும் எல்லோரும் முள்ளிவாய்க்காலில் கூடுகிறார்கள். எந்தக் கூச்சமுமில்லை, எவருக்கும்.

வெள்ளாந்தியாகச் சனங்கள்.

வேட்டையாடிகளாக அரசியல்வாதிகள்.

தங்களுக்கு என்ன தீன் பொறுக்கலாம் என்ற வேட்கையோடு ஊடகவியலாளர்களும் பிறரும்.

முள்ளிவாய்க்கால் நல்லாய்த்தான் எல்லோரையும் வாழ வைக்கிறது.

இழந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும்?

அவர்களைப் பற்றி உங்களுக்கென்ன கவலை? யாருக்கென்ன அக்கறை?

காட்சி 03

முள்ளிவாய்க்காலில் தாயையும் சகோதரர்கள் இருவரையும் ஒரு தங்கையையும் இழந்த புவேந்தினிக்கு ஒரு கண்ணில் பார்வையில்லை. இந்த இழப்புகளின் உளைச்சலினால் மனம் சிதைந்த தந்தை கடந்த 2016 இல் மரணமாகி விட்டார்.

புவேந்தினி இன்று தனியாள். வயது 29. ஏறக்குறைய இவளும் உளச் சிதைவுக்குள்ளான நிலையில்தான்.

அவளைக் கேட்டேன் “ முள்ளிவாய்க்காலுக்குப் போகவில்லையா?” என்று.

“இல்லை” என்றாள்.

“ஏன், அங்கேதானே உங்கட அம்மாவும் அண்ணாவும் தம்பியாக்களும் தங்கச்சியும் செத்தவை. சனங்களெல்லாம் நாளைக்கு (மே18) முள்ளிவாய்க்காலுக்குப் போகுதுகள். நீங்களும் போகலாமே!” என்று.

“அப்பிடித்தான் நினைச்சுக் கொண்டு நானும் போன வருசம் போனன். ஆனால் அங்க நடக்கிறதைப் பார்க்கிறதை விட போகாமல் இருக்கிறதுதான் நல்லது. வேணுமெண்டால் நாங்கள் நாளைக்கோ இன்னொரு நாளைக்கோ போய் அங்க அஞ்சலி செய்திட்டு வரலாம். இப்ப நடக்கிறது அஞ்சலியல்ல. பச்சைத் துரோக அரசியல்” என்றாள் அந்தப் பெண்.

என் தலை கவிழ்ந்தது. கண்களில் நீர் திரண்டது. எதையும் செய்ய முடியாத நிலையிலிருக்கிறேன் என்ற கசப்புத் தொண்டையில் ஏறியது.

குறிப்பு

————

முள்ளிவாய்க்கால் நினைவு கூரல், மாவீரர் நாள் போன்றவை எல்லாம்  பலருக்கும் வாய்ப்பாகிப் போய் விட்டன. முள்ளிவாக்காலில் கஞ்சிக்கு வழியற்றிருந்த சனங்களில் பாதியும் இன்னும் மீள முடியாத வறுமையிலும் வாழ்க்கை நெருக்கடியிலும்தான் சிக்கியிருக்கின்றன. இன்னும் அவை கஞ்சிக்கே வக்கற்றிருக்கின்றன.

பாதிக்கப்பட்டோருக்கும் தியாகம் செய்தோருக்கும் எந்த நன்மைகளுமில்லை. அவர்களைச் சேர்ந்தவர்களுக்கு எவரும் ஆறுதலாகவும் இல்லை. எவரும் எந்தச் சிறு நன்மைகளையும் செய்ததாகவும் இல்லை.

ஆனால், மஞ்சள் – சிவப்புக் கொடிகள் காற்றிலாடுகின்றன.

கறுப்புத் துணி, கறுப்புச் சட்டை, வெள்ளை வேட்டி என்று இன்னொரு நாடகக் கூட்டம் எது கிடைக்கிறதோ அதைத் தமக்கு வாய்ப்பான அரசியலாக்கத் தவிக்கிறது.

இதற்குள் தியாகிகள், விடுதலை வீரர்கள் என்ற சுயதகுதி வழங்கல்கள் வேறு.

முள்ளிவாய்க்கால் அவலத்தை விடப் பெரிய அவலம் இதுவன்றி வேறென்ன?

“நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மாந்தரைக் காணும் போதினிலே….”

“நெஞ்சில்உரமுமின்றிநேர்மைத்திறமுமின்றி, வஞ்சனைசொல்வாரடீ!-கிளியே! வாய்ச்சொல்லில்வீரரடீ”

ஆமாம், வாய்ச்சொல் வீரர்களின் கால்களில் முள்ளிவாய்க்கால்…. தமிழ்ச்சனங்களும் தமிழ் அரசியலும்தான்.

Share:

Author: theneeweb