இனவாதத் தீயில் வெடித்த மதவாதக் குண்டுகள் கலாநிதி அமீர் அலி ( மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா )

கடந்த சித்திரை மாதம் கிறித்து மக்களின் உயிர்த்த ஞாயிறன்று கொழும்பிலும் மட்டக்களப்பிலும் நீர்கொழும்பிலும் கிறித்தவ தேவாலயங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் நட்சத்திர விடுதிகளிலும் வெடித்த தற்கொலைக் குண்டுகள் 250க்கும் அதிகமான உயிர்களையும் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களையும் பலிகொண்டதைக் கண்டு உலகமே அதிர்ச்சியுற்றது.

இலங்கையின் வரலாற்லே அழிக்க முடியாத ஒரு புதிய இரத்தக்கறை அது. அந்தக் கொலைகளையும் அழிவுகளையும் செய்தவர்கள் காத்தான்குடியை மையமாகக் கொண்ட ஒரு முஸ்லிம் பயங்கரவாதக் குழுவென்றும் அக்குழுவினருக்கும் மத்திய கிழக்கின் ஐஎஸ் இயக்கத்துக்கும் தொடர்பிருந்தது என்றும் இப்பொழுது கூறப்படுகிறது.

இது இன்னும் உறுதியாக்கப்படவில்லை. ஆயினும் இக்குழு ஏன் எவ்வாறு உருவாகியது? இதன் பின்னணி என்ன? அக்குழுவின் தீவிரவாத்தைப்பற்றி ஏற்கனவே அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் இஸ்லாமிய மதத்தலைவர்களும் அறிந்திருக்கவில்லையா? அறிந்திருந்தால் அவர்கள் ஏன் உடனடியாகச் செயற்படவில்லை? இவ்வாறான கேள்விகளுக்கு இன்னும் சரியான விடைகள் வெளிவராதிருப்பது அக்கொலைகளை விடவும் கொடூரமானவையாகத் தெரிகின்றது.

சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றிலே மக்களாட்சி என்ற போர்வையில் இனவாதமும் மதவாதமுமே இற்றைவரை ஆட்சிசெய்து வருவதை அந்த வரலாற்றை யதார்த்தத்துடன் கோக்குபவர்கள் அறிந்துகொள்வர். பௌத்த மதத்தை அரசியலுக்குள் முதன்முதல் இழுத்துவந்து 1956ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலே வெற்றிபெற்றவர் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள். அந்தத் தேர்தலை நுணுக்கமாக அவதானித்த பின்னர்தான் அமெரிக்க சி. . உளவுத்துறையினர்கூட தென்கிழக்கு ஆசியாவில் பொதுவுடமைவாதத்தின் எழுச்சியை முறியடிப்பதற்கு பௌத்த மதத்தை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதை உணர்ந்தனர் என்று அரசறிவியல் ஆய்வாளர் யூஜீன் போர்ட் தனது பனிப்போர் மதகுருக்கள்என்ற ஆங்கில நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரநாயக்காவுக்கு முன்னரும் அதாவது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே அநகாரிக தர்மபால போன்றவர்கள் பௌத்த மதத்தை அரசியல் மேடைக்குக் கொண்டு வந்திருந்தார்கள் என்பது உண்மை. ஆனால் அது பிரித்தானியராட்சியிலிருந்தும் இந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் சுரண்டல்களிலிருந்தும்  இலங்கையை விடுதலையடையச் செய்யும் சுதந்திரப் போராட்டத்தின் ஓர் உபாயமாகவேயன்றி நாட்டின் இன்னோர் இனத்துக்கெதிராக அவிழ்த்துவிடப்பட்ட பிரச்சாரமல்ல. அவர்களின் பிரச்சாரத்தால் வெடித்த 1915 கலவரத்தில் இலங்கை முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர் என்பதையும் மறத்தலாகாது. அதற்கு முக்கியமான ஒரு காரணம் முஸ்லிம்களின் உம்மா என்ற மத அடிப்படையிலான உணர்வு. இதைப்பற்றி பின்னர் விளக்குவோம்.

1956ஆம் ஆண்டுக்குப் பின்னரும், பௌத்த மதவாதம், தொடர்ந்து 1960களில் தனியார் கல்விக்கூடங்களை அரசாங்கக் கல்விக்கூடங்களாக்கும் போராட்டத்தில் முன்னணி வகித்தது. ஆனால் அதன்பின் அரசியல் மேடைகளின் ஒதுக்குப் புறத்தில் பௌத்தம் பெரும்பாலும் அமர்ந்திருக்க, சிங்களதமிழர் என்ற இனவாதமே அரசியல் போராட்டங்களை முன்னின்று நடத்தலாயிற்று. இந்த இனவாதத்தை அரசியல்வாதிகள் உரம்போட்டு; வளர்த்து இறுதியில் இருபத்தைந்து வருடகால ஓர் உண்ணாட்டு யுத்தத்தையும் கொண்டுவந்ததை யார்தான் மறுப்பர்?

அப்போர் முடிந்த பின்னரும்கூட அதே இனவாதத் தீயே அரசியலில் தொடர்ந்தும் எரிகின்றது. இனவாதம் இல்லையென்றால் தேர்தலே நடத்த முடியாது என்ற ஒரு நிலைக்கு இலங்கை இன்று தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம்; இனவாதத்தின் இன்னோர் அங்கமாக மதவாதம் வளர்க்கப்பட்டு வருகின்றது. அந்த மதவாதத்தின்  விளைவே முஸ்லிம் குழுவொன்றின்; தீவிர மதவாதம். இனவாதத் தீயில் வெடித்த தீவிர மதவாதக் குண்டுகள்தான் அத்தனை உயிர்களையும் பலி கொண்டன. முஸ்லிம் தீவிர மதவாதம் பௌத்த மதவாதத்தின் எதிரொலியா? இத்தீவிர மதவாதம் ஒரு குழுவினரிடையே மட்டும் வளர்ந்ததெப்படி?

இன்றுவரை நடைபெற்று வரும் சிங்களவர்தமிழர் இனவாதப் போராட்டத்தில் முஸ்லிம்களோஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்என்பதற்கிணங்க சுயலாபம் கருதி வெல்வோர் பக்கமே சார்ந்து நின்றனர். முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை இது அவர்களின் யதார்த்தநிலை. ஏனெனில் தம்மை சோனகர் என அழைத்தாலும் அவர்கள் உண்மையிலேயே ஒரு தனிப்பட்ட இனமல்ல. மாறாக, அவர்கள் ஒரு கலப்பினத்தவர்.

ஆனால்,  இஸ்லாம் என்ற மதத்தால் ஒன்றாய் இணைந்தவர்கள். நாட்டிலே அவர்கள் இரண்டாவது சிறுபான்மையினர். அவர்களுள் மூன்றிலொரு பகுதியினர் கிழக்கிலும் வடக்கிலும் தமிழர் மத்தியிலே செறிந்து வாழ்ந்தாலும் ஏனையோர் மற்றைய ஏழு மாகாணங்களிலும் பரந்து சிதறுண்டு வாழ்கின்றனர். மிகப்பெரும்பான்மையான முஸ்லிம்களின் தாய் மொழி தமிழென்றாலும்,  பரம்பரையாகவே வர்த்தகத்தைப் பிரதான தொழிலாகக் கொண்டதனால் அவர்களில் அநேகருக்கு சிங்களத்திலும் சரளமாக உரையாடும் தகைமையுண்டு. மலேசியாவில் எந்த நிலையில் இந்தியத் தமிழர் உள்ளனரோ அவ்வாறுதான் இலங்கையில் முஸ்லிம்கள் உள்ளனர். இதனைப் புரிந்துகொண்டால் ஏன் முஸ்லிம்கள் இனப் போராட்டத்தில் பெரும்பான்மையினரைச் சேர்ந்து நின்றனர் என்பதை விளங்கிக் கொள்வது சுலபம்.

இவ்வாறு சிங்கள சமூகத்தினருடன் அன்னியோனியமாக வாழ்ந்த முஸ்லிம்கள் ஏன் சடுதியாக அதுவும் குறிப்பாக 2009க்குப் பின்னர் பெரும்பான்மை இனத்தவருள் ஒரு பகுதியினரால் எதிரியாகக் கணிக்கப்பட்டனர்? இங்கேதான் மீண்டும் பௌத்தவாதம் அரசியல் மேடையில் முன்னிலை வகிக்கத் தொடங்கியது.

2009ஆம் ஆண்டு புலிகளை முறியடித்து வெற்றிகண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மக்களை நோக்கி உரையாற்றுகையில்இனிமேல் இலங்;கையில் சிங்களவரோ தமிழரோ முஸ்லிம்களோ கிடையாது, இலங்கையர் மட்டுமே உண்டுஎனக் கூறியபோது அவருரையைக் கேட்டவரெல்லாம், அப்பாடா! இனியாவது ஜனநாயகம் அதற்குரிய பண்புகளுடன் நாட்டில் மலருமென நினைத்துப் பெருமூச்சு விட்டனர்.

னால்,  பொது பல சேனை, ஹெல உறுமய, சிங்ஹ லே போன்ற பௌத்த அதி வலதுசாரிகள் ராஜபக்ஸவின் கூற்றை மறுத்து, ‘இலங்கை ஒரு பௌத்த நாடு, அது பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தம், மற்ற இனங்கள் விரும்பினால் பௌத்தர்களின் தயவில் வாழ வேண்டும், இல்லையேல் அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கே திரும்பிச் செல்ல வேண்டும்என அறைகூவல் விடுத்தனர். குறிப்பாக முஸ்லிம்களைப் பார்த்துநீங்கள் அரேபியாவுக்குப் போங்கள்என்றனர்.

இதற்கு முன்னர் அநகாரிக தர்மபாலாவும் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவ்வாறு கூறி பின்னர் அதை அவர் மறுத்ததையும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. எனினும் அதிவலதுசாரிகளின் தற்போதைய கூற்றை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த எந்த அரசியல் தலைவனுமே பகிரங்கமாக எதிர்க்கவில்லை என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். சில பௌத்த பிக்குகளும் அக்கூற்றை ஆதரிக்கின்றனர். இது ஏன்?

இலங்கையின் அரசியல் கட்சிகளுக்கு இனவாதத்தைவிட்டால் தேர்தலிலே வெல்வதற்கும் மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்கும் வேறு ஆயுதங்களில்லை. இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலில் தடையற்ற சந்தைப் பொருளாதார அமைப்பே பூகோளமயமாக்கப்பட்டு முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. இந்த அமைப்பை 1977ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் சர்வ கட்சிகளும் தமது கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த நிலையில் பொதுமக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை முன்னெடுத்து அவற்றைத் தீர்க்கும் பரிகாரங்களைத் தமது கொள்கைப் பிரகடனங்களாக்கும் விருப்பமும் வலுவும் எந்தக் கட்சிக்குமே கிடையாது. இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை இன்றுவரை தீர்க்கப்படாமல் இருப்பதற்கும் இனவாதத்தைக் காக்கும் நோக்கமே முக்கிய காரணம்.

ஆனாலும்,  2009 இற்குப் பின்னர் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதால் தமிழர் பிரச்சினையை முன்வைத்து சிங்கள மக்களின் வாக்குகளைக் கவரக்கூடிய வாய்ப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. ஆகவே புதிதாக ஒன்றை அரசியல் இலாபத்துக்காகத் தேட வேண்டும். இந்தத் தேடலிற் கிடைத்த புதையல்தான் இஸ்லாமோபோபியா. (இதற்குப் பொருத்தமான தமிழ்ப் பதம் இல்லை. அச்சக்கோளாறு என்றும் பயக்கோளாறு என்றும் கூறுவது பொருத்தமாகாது. ஏனென்றால் போபியா என்பது அச்சமும் வெறுப்பும் கலந்த ஓர் உணர்வு. பொருத்தமான பதம் கிடைக்கும்வரை ஆங்கிலச் சொல்லையே உபயோகப்படுத்துவோம்.)             

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எந்தத் தகராறுமின்றி வாழ்ந்த முஸ்லிம்களைப் பார்த்துநீங்கள் அரேபியாவுக்குப் போங்கள்என்று கூறக் காரணமென்ன? இதற்கு மூன்று காரணங்களை முன்வைக்கலாம். முதலாவது, புலிகளைத் தோற்கடித்ததால் அடைந்த வெற்றியின் மமதை. ஆயுதம் தரித்த புலிகளையே நாங்கள் தொலைத்துவிட்டு முழு நாட்டையுமே எங்கள் வசமாக்கியுள்ளோம், நீங்களொரு பொருட்டா என்ற ஆணவம் அவர்களை தொடர்ந்தும் வீராப்பு பேச வைக்கிறது. இரண்டாவது காரணம் பொருளாதார அடிப்படையிலானது.

நாற்பது வீதமன முஸ்லிம்கள் இன்று வறுமைக் கோட்டின்கீழ் வாழ்கின்றபோதும், நாட்டின் நாலாதிசைகளிலும் முஸ்லிம்களின் கடைகள் திறந்திருப்பதும் அவற்றுட் சில வியாபாரத்தில் முன்னிலை வகிப்பதும் இவ்வலதுசாரிகளின் கண்களில் முள் தைப்பதுபோல் காணப்படுகின்றது. அவர்களால் இதைப் பொறுக்க முடியவில்லை. அவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக சில பொறாமை பிடித்த சிங்கள வாத்தகர்களும் செயற்படுகின்றனர் என்பதும் உண்மை. முஸ்லிம்களின் கடை பகிஷ்கரிப்பு இயக்கமொன்றும் இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

மூன்றாவது காரணமும் பொருளாதார அடிப்படையிலானதெனினும் அது உலகளாவியதொன்று. ஏற்கனவே கூறியதுபோன்று பூகோளமயமாக்கப்பட்ட தடையற்ற சந்தைப் பொருளாதார அமைப்பு அதன் சித்தாந்தவாதிகள் முரசு கொட்டியதுபோன்று எல்லா நாடுகளினதும் எல்லா மக்களினதம் வாழ்க்கைத் தரத்தையும் வருமானத்தையும் உயர்த்தவில்லை. அதற்கு மாறாக முன்னிருந்ததைவிடவும் பன்மடங்காக வருமான ஏற்றத் தாழ்வுகளை உலகெங்கிலும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை இதற்கு விதிவிலக்கல்ல. இது அதிவலதுசாரிகளுக்கும் அவர்களை ஆட்டுவிப்பவர்களுக்கும் நன்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு பொருளாதார அமைப்பில் கைவைக்க விருப்பமுமில்லை, விரும்பினாலும் அவ்வமைப்பின் சர்வதேசக் காப்பாளர்கள் அவர்களைக் கைவைக்க விடப்போவதுமில்லை. இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு யாரையாவது குறைகூறவேண்டும். முஸ்லிம்களை விட்டால் வேறு யாருண்டு?

முஸ்லிம்களைப் பலிக்கடாவாக்குவதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இஸ்லாமோபோபியா ஓர் உலகளாவிய நோய்.  அமெரிக்கா தொடக்கம் அவுஸ்திரேலியாவரை இந்த நோயைப்பரப்பி அரசியல் இலாபம் சம்பாதிப்பது ஒரு புதிய அரசியல் தந்திரமாகி விட்டது. எனவே முஸ்லிம்களைப்பற்றி அவதூறு பேசுவதோ இஸ்லாத்தைப்பற்றி பொய்ப்பிரசாரங்கள் அவிழ்த்துவிடப்படுவதோ ஒரு பெரும் பிரச்சினையாக உலக அரங்கில் தோன்றுவதில்லை.

மேற்கின் நாகரிகத்துக்கு இஸ்லாமும் முஸ்லிம்களும் எதிரிகள், ஆதலால் முஸ்லிம் அகதிகள் மேற்கு நாடுகளுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அங்கே தேர்தல் பிரசாரங்கள் நடைபெறுவதை உலகறியும். இந்த நிலையில் இலங்கை முஸ்லிம்களை அதிவலதுசாரிகள் தமது அரசியல் இலாபத்துக்காகப் பலியிடுவதை உலக அரங்கு ஏனென்று கேட்காதென்ற தைரியம் இவர்களுக்குண்டு.

எனவேதான் 2009க்குப் பின்னர் இனவாதத் தீ அணைந்துபோகா வண்ணம் பொளத்த மதவாதம் மீண்டும் அரசியல் மேடைக்கு வந்து ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளது. இந்த நாடகத்தின் சில காட்சிகளே அளுத்காமத்திலும் அம்பாறையிலும் ஜிந்தோட்டையிலும் திகணையிலும் முஸ்லிம்களுக்கெதிராக முடுக்கிவிடப்பட்ட கலவரங்கள். இவற்றில் பௌத்த பிக்குகளும் தலையிட்டமையும் அக்கலவரங்களை அடக்க பொலிஸ் அதிகாரிகள் தாமதித்துச் செயற்பட்டமையும் அரசாங்கம் இவற்றைப்பற்றிப் பாராமுகமாக இருந்தமையும் இவையெல்லாம் திட்டமிடப்பட்டவை என்பதைக் காட்டவில்லையா? 

இத்தனைக்கும் மத்தியில் முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுவந்த ஒரு முக்கியமான மாற்றத்தை எல்லாருமே கவனிக்கத் தவறிவிட்டனர். இதைப்பற்றிச் சற்று விரிவாக விளக்க வேண்டியுள்ளது. அதை விளங்க இலங்கையைவிட்டும் சற்று அப்பால் செல்லவேண்டும்.

1980க்குப் பின்னர் எண்ணெய்வள அரபு நாடுகள் செல்வச் செழிப்பில் மிதந்ததும் அதன் விளைவாக அங்கே ஏற்பட்ட துரித பொருளாதார வளர்ச்சி பெருமளவில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தியதும் அந்த வாய்ப்புகளிலிருந்து நன்மைபெற இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இலங்கை போன்ற வளர்ச்சி குன்றிய நாடுகளிலிருந்து படையெடுத்ததும் யாவரும் அறிந்ததே. எத்தனையோ முஸ்லிம் ஆண்களும் பெண்களும் இலங்கையிலிருந்தும் வளைகுடாவுக்கு தொழில் நாடிச் சென்றனர். அந்தச் செழிப்பின் இன்னொரு பக்கம் முஸ்லிம் உலகில் பரவலாக ஏற்பட்ட இஸ்லாமிய மதவிழிப்புணர்வு. இந்த உணர்வுக்கு உரமூட்டியது ஈரானிலே 1989ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியும் அங்கே நிறுவப்பட்ட மதநாயக ஆட்சியும் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அமெரிக்கா வெளியேற்றப்பட்டமையும். அத்துடன் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படை வெளியேறியதில் பின்லாதன் தலைமையிலான அல்கைதா பங்கு கொண்டமையும் உலகத்தையே இனி இஸ்லாமியமயமாக்கலாம் என்ற ஒரு பிரேமையை இளைய தலைமுறை முஸ்லிம்கள் மத்தியில் வளர்த்துவிட்டது. இவற்றிற்கு மத்தியில் இடம்பெற்ற இன்னுமொரு எதிர்பாரா நிகழ்வு உலகின் கவனத்தை அப்போது ஈர்க்கத் தவறியது.

ஈரானிலே மதநாயக ஆட்சி நிறுவப்பட்டதும் அதன் கதாநாயகன் ஆயத்துல்லா குமேனி ஈரானியப் புரட்சியை ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கும் அதிலும் குறிப்பாக மன்னராட்சி நடைபெறும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்போவதாக அறைகூவல் விடுத்தார். இந்த அறைகூவல் முஸ்லிம் நாடுகளைவிட அமெரிக்காவைக் கிலிபிடிக்கச் செய்தது. ஏனெனில் குமேனியின் புரட்சி நாதத்தில் மயங்கி சவூதி அரேபியாவிலும் வளைகுடா நாடுகளிலும் புரட்சி ஏற்பட்டு மன்னராட்சிகள் கவிழுமானால் அமெரிக்கப் பேரரசு கட்டியெழுப்பிக் கண்காணித்துவரும் மத்திய கிழக்கு ஒழுங்கு நிலைகுலைந்து சிதறிவிடும்.

அது சோவியத் பலத்தை மீண்டும் வலுப்படுத்தும் எனப்பயந்து எப்படியாவது குமேனிக் கவர்ச்சியைத் தடுக்க மாற்றுமருந்து தேடியது அமெரிக்கா. அந்த மாற்றுமருந்துதான் சவூதி அரேபியாவின் வஹ்ஹாபி இஸ்லாம். மிகவும் இறுக்கமான வைதீகத்தில் விளைந்த வஹ்ஹாபியக் கொள்கையை உலகெலாம் பரவும்வகை செய்தது அமெரிக்கா. ஷீயாக்களின் புரட்சியை முறியடிக்க சுன்னிகளின் வைதீகம். 1980களிலிருந்தே இந்த வைதீகம் இலங்கையிலும் பரவலாயிற்று. இது எவ்வாறு?   

இலங்கையின் பொருளாதாரம் துரித வளர்ச்சி காண்பதற்கு நிதி அவசியம். ஏற்றுமதிகளால் கிடைக்கும் வருமானமும் உல்லாசப் பயணிகளால் கிடைக்கும் வருவாயும் வெளிநாட்டிலே வேலைசெய்வோர் கொண்டுவரும் அன்னியச் செலாவணியும் போதாது. வெளிநாட்டு உதவியும் முதலீடுகளும் நிச்சயம் தேவை. அரபு நாடுகளிடம் மிகையான மூலதனம் உண்டு. அதைக் கவருவதெப்படி?

இங்கேதான் இலங்கையின் இஸ்லாமிய முகம் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையின் முஸ்லிம் முகத்தை அரேபியருக்குக் காட்டி அவர்களின் முதலீடுகளையும் நன்கொடைகளையும் பெற்றுக்கொள்வதில் அரசு ஆர்வம் காட்டியது. குறிப்பாக சவூதி அரேபியாவின் நட்பை வெகுவாக நாடியது. அந்த நட்பால் பணமும் வந்தது, கூடவே வஹ்ஹாபியமும் வந்தது.

சோழியான் குடும்பி சும்மா ஆடுமா? வஹ்ஹாபியம் பல வடிவங்களில் நாட்டுக்குள் நுழையலாயிற்று. பள்ளிவாசல்களும் மதரசாக்களும் பாடப் புத்தகங்களும் வஹ்ஹாபியக் கொள்கைகளைப் பரப்பின. அத்துடன் அரேபியாவுக்கு வேலைதேடிச் சென்றோரும் திரும்பி வரும்போது அங்குள்ள நடையுடை பாவனைகளையும் கொண்டு வந்தனர்.

இவையெல்லாம் சேர்ந்து வஹ்ஹாபியம்தான் தூய இஸ்லாம் மற்றவையெல்லாம் அழித்தொழிக்கப்பட வேண்டுமென்ற என்ற ஒரு கொள்கையை விதைத்து விட்டன. இலங்கை முஸ்லிம்களின் தோற்றமே மாறத் தொடங்கிற்று. காத்தான்குடி போன்ற பட்டினங்களின் வெளித்தோற்றமும் அரபு மயமாகியது. இந்தப் பின்னணியில் வளர்ந்ததே முஸ்லிம்களின் மதவாதம். ஆனால் அது தீவிரவாதமாக வளரவில்லை. எனினும் பொளத்த அதிவலதுசாரிகளின் பார்வையில் இஸ்லாமும் முஸ்லிம்களும் விரைவில் நாட்டையே கைப்பற்றப் போகின்றனரென்ற ஓர் அசாதாரண பீதி உருவாக்கப்பட்டு அதனை நிரூபிக்கப் பல போலி ஆதாரங்களையும் முன்வைக்கலாயினர்.

உதாரணத்துக்கு ஒன்றிரண்டு:

இலங்கையின் 1980ஆம் ஆண்டுக் குடிசனப் புள்ளி விபரங்களையும் 2010ஆம் ஆண்டுப் புள்ளி விபரங்களையும் ஒப்பிட்டு முஸ்லிம்களின் சனத்தொகை விகிதம் சிங்கள மக்களின் விகிதத்தைவிடக் கூடுதலாக இருக்குதென்றும் அந்த விகிதம் தொடருமானால் விரைவில் இலங்கை ஒரு முஸ்லிம் நாடாக மாறிவிடுமென்றும் அதிவலதுசாரிகளின் அரைகுறை விற்பன்னர்கள் கதை வளர்த்தனர். இடைப்பட்ட முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தமும் அதனால் தமிழ் சிங்கள இனங்களின் வெளிநாடு நோக்கிய குடிப் பெயர்வும், குடிசன வளர்ச்சியைத் தீர்மானிக்கும் நீண்டகாலக் காரணிகளும் இவர்களின் கவனத்தில் இடம்பெறவே இல்லை. இவர்களுடைய விஷமத்தனமான முடிவுகளை அரசாங்கத் திணைக்களமே மறுத்தும் இவர்களின் பிரசாரம் ஓயவில்லை.

அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் வாத்தகர்களும் உணவகங்களும் கர்ப்பத்தடை மாத்திரைகளை அவர்கள் விற்கின்ற உணவு மூலமாகவும், சிங்களப் பெண்களுக்கு இனாமாக வழங்கும் இனிப்புப் பண்டங்கள் மூலமாகவும் வழங்கி சிங்கள மக்களின் பிறப்பு விகிதத்தைக் குறைக்கச் சதிசெய்கின்றனரென்றும் வதந்திகள் பரப்பினர்.

இவை எதுவுமே இதுவரை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறு பொய் வாந்திகளைப் பொது மக்களிடம் பரப்பி அவர்களின் முஸ்லிம் எதிர்ப்புணர்வுகளை வளர்த்ததனால் ஆங்காங்கே கலவரங்கள் தோன்றி முஸ்லிம்களின் கடைகளும் உடமைகளும் பள்ளிவாசல்களும் சேதத்துக்குள்ளாயின. முன்னர் சுட்டிக்காட்டிய கலவரங்கள் இந்தப் பிரச்சாரத்தினால் எழுந்தவையே.

பௌத்த மதவாதிகளின் அட்டகாசங்களைத் தட்டிக்கேட்கவும் அவற்றைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கவும் அரசாங்கத்துக்குள் அங்கம் வதித்த முஸ்லிம் மந்திரிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் துணிவில்லாமற்போனது முஸ்லிம் சமூகத்தைப் பெரிதும் வாட்டியது. தங்களின் சுயலாபத்துக்காக சமூகத்தையே இவர்கள் அடைமானம் வைத்ததுபோல் அவர்களில் அநேகருக்கு, அதுவும் இளைய தலைமுறையினருக்குத் தோன்றியது. இது ஓர் ஆபத்தான நிலை. இதை விளங்குவதற்கு முன் இந்தத் தலைமுறையைப்பற்றிய சில உண்மைகளை அறிந்து கொள்ளுதல் அவசியம்.

இந்தத் தலைமுறை 1980 அல்லது 1980களுக்குப் பின்னர் பிறந்த குழந்தைகளின் கூட்டு. இவர்கள் பிறந்த காலச்சூழல் நவீன தொழில்நுட்பப் புரட்சிக்காலம். கணினியும் அதனையொட்டிய இலத்திரனியற் கண்டுபிடிப்புகளும் ஒன்றன்பின் ஒன்றாக விரைவில் வரத் தொடங்கிய காலமது. கடந்த நூற்றாண்டு முடிவடைகின்ற வேளை கைத்தொலைபேசியும், மடிக்கணினியியும், இத்தலைமுறையின் விளையாட்டுப் பொருள்களாய் மாறிவிட்டன. அவற்றை வைத்து விளையாட இணையத்தளங்களும், முகநூலும், மின்னஞ்சலும் விளையாட்டுத்திடல்களாய் வந்தன. இந்தப் புரட்சியின் முக்கிய விளைவுகள் இரண்டு. ஒன்று நினைத்தமாத்திரத்தே எவரோடும் எங்கேயும் இவர்களால் தொடர்பு கொள்ள முடியும். இரண்டு, உலகத்திலே என்ன நடந்தாலும் அதனை வீட்டிலிருந்து கொண்டே பார்க்கக்கூடிய வாய்ப்பை இவர்கள் பெற்றனர். இந்த உண்மைகளைப் பின்னணியாக வைத்து இலங்கை முஸ்லிம்களின் இளைய தலைமுறையை நோக்குவோம்.

இந்தத் தலைமுறை இஸ்லாமிய விழிப்புணர்வோடு வளர்ந்த தலைமுறை. ஆதலால் இவர்களுக்கு மதப்பற்று சற்று அதிகம். பல தசாப்தங்களாக இலங்கையில் வளர்ந்த தப்லீக் இயக்கத்தின்  இடையறாத பிரச்சாரத்தாலும் வஹ்ஹாபியத்தின் அண்மைக்கால நுழைவாலும் வைதீக இஸ்லாத்தை இறுக்கமாகப் பிடித்த இந்தத் தலைமுறையினர் தங்களின் நவீன விளையாட்டுக் கருவிகள்மூலம் வெளிநாட்டு இஸ்லாமியப் பிரச்சாரங்களையும் கேட்டு அவற்றாலும் ஈர்க்கப்பட்டனர்.

அப்பிரச்சாரங்களிற் சில கேட்போரின் சிந்தனையைத் தூண்டாமல் அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவனவாய் அமைந்தன. இந்தத் தலைமுறையினரிடம் விரிவான வாசிப்புப் பழக்கம் இல்லாததனால் கேட்பவற்றை நிதானத்துடன் ஆராய்ந்தறியும் பக்குவம் குறைவு. அத்துடன் காணொளிகளிலும் இணையத்தளங்களிலும் அவர்கள் முஸ்லிம் நாடுகளில் நிலவும் அழிவுகளையும் உயிர்ப்பலிகளையும் நோக்குகையில் அவர்களது கோப உணர்வுகள் தூண்டப்படுவது தடுக்கமுடியாததொன்று.

அவற்றுள் முக்கியமாக எவ்வாறு அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் குறிப்பாக இஸ்ரவேலும் முஸ்லிம் நாடுகளையும் அவற்றின் அரசுகளையும் தமது அரசியல், பொருளாதார நலனுக்காகப் பகடைக் காய்களாக நகர்த்தி, முஸ்லிம் உம்மாவைப் (உலகளாவிய சமூகம்) பிளவுபடுத்தி, முஸ்லிம் நாடுகளுக்கிடையே போர்களையும் மூளச்செய்து அதற்கு வேண்டிய போர் ஆயுதங்களையும் விற்பனை செய்து முஸ்லிம் உலகை நாசமாக்குகின்றன என்பதை கோரமான படங்களுடன் இணையத்தளங்கள் ஊடாகவும் முகநூலூடாகவும் கைத்தொலைபேசியூடாகவும் காண்கின்றனர். இதற்கெல்லாம் ஒரு முடிவாக இஸ்லாமிய அரசுகள் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென்று அப்பிரச்சாரகர்கள் கூறுவது மதாபிமானம் கொண்ட வாலிப உள்ளங்களை ஈர்க்காதா? அவ்வாறு ஈர்க்கப்பட்ட இளைஞர்களே சிரியாவுக்குச் சென்று ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்கள். அவர்களுள் இலங்கை முஸ்லிம் இளைஞர் சிலரும் அடங்குவர். இது இலங்கை அரசுக்கும் தெரியும். 

இலங்கையைப் பொறுத்தவரை மதவாதத்தால் ஈர்க்கப்பட்ட வாலிபர்களை வாட்டியது பௌத்த தீவிரவாதிகளின் இஸ்லாமோபோபியா. ஆத்திரம் கொண்ட இவ்விளைஞர்களை இயக்குவதற்காக எழுந்ததுதான் தேசிய தௌஹீத் குழு. சிங்களவரின் இனவாதம் பௌத்த மதவாதமாகி முஸ்லிம்களுக்கெதிரான தீவிரவாதமாக மாற, மதவாத முஸ்லிம் இளைஞர்களுட் சிலர் தீவிரவாதிகளாக மாறி தற்கொலைப் படையாகவும் இயங்குதற்குத் தயாராகினர். இதன் விளைவுதான் உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற உயிர் உடமை இழப்புகள். இனவாதத் தீயில் வெடித்த மதவாதக் குண்டுகள் நடத்திய தாண்டவம். 

Share:

Author: theneeweb