ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்ரஸா கல்வி நிலையங்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விரிவாக கலந்துரையாடி அவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற யோசனைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் பிரதமர் கருத்து வெளியிட்டார். ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப் போவதில்லை. அதற்கான அதிகாரமும் கிடையாது.

பட்டம் வழங்கும் நிறுவனங்களை அனுமதிக்க மாத்திரமே அரசாங்கத்தால் முடியும். அத்தகைய பட்டப்படிப்பு நிறுவனங்கள் ஷரியா பல்கலைக்கழகங்களாக இயங்குவதைத் தடுப்பதற்குரிய சட்ட ஏற்பாடுகளை அமுலாக்கலாம்.

அதற்கு அப்பால், மத்ரஸா கல்வி நிறுவனங்களை கல்வி அமைச்சின் பொறுப்பில் ,யங்க வைப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம். சில விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சும், முஸ்லிம் சமயய அலுவல்கள் அமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுக்க நேரிடலாம். இது பற்றி முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சில யோசனைகளை சொன்னார்கள். அந்த யோசனைகளை அமுலாக்க இணக்கம் காணப்பட்டது என பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட ஆய்வின் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாறசிங்க நேற்று பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார். அதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Share:

Author: theneeweb