வெள்ள அனர்த்தங்கள்: என்ன செய்யவேண்டும்?

பகுதி: 1

–          கருணாகரன்—-

“கிளிநொச்சியின் வெள்ள அனர்த்தம் அனைவருடைய உள்ளத்தையும் உருக்கியுள்ளது. இனம், மதம், மொழி, கட்சி, பிரதேசம் என்ற பேதங்களில்லாமல் எல்லோரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள்” என்று சந்தோசப்பட்டுக் கொண்டு சொல்கிறார் ஒரு நண்பர்.

அவர் சொல்லுகிறமாதிரியே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் பெரும்பான்மையான அமைச்சர்களும் கிளிநொச்சிக்கு தங்கள் அணிகளோடு படையெடுத்து வந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில் இன்னும் சிலர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கான இழப்பீடுகளும் வழங்கப்படும் என்று அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதன்படி வீடழிவு அல்லது வீட்டுச் சேதம், பயிரழிவு போன்றவற்கான இழப்பீடுகள் – நிவாரணம்  வழங்கப்படலாம்.

இதற்குள் இன்று (01.01.2019) புத்தாண்டுப் பரிசாக விசேட தொடருந்தில் (ரெயினில்)   ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களும் வந்து சேர்ந்துள்ளன. இந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கும்போது கிளிநொச்சி தொடருந்து நிலையத்தில் அந்த நிவாரணப் பொருட்கள் இறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இன்னொரு புறத்தில் தொண்டு அமைப்புகள், அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், புலம்பெயர் உறவுகள், உள்ளுர் அமைப்புகள், தனியார் துறையினர் எனப் பல தரப்பினரும் உதவிகளை வழங்கியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு “வெள்ள அனர்த்தம் எல்லா உள்ளங்களையும் ஒன்றிணைத்திருக்கிறது” என்று மகிழ்கிறார்கள் சிலர்.

வெளித்தோற்றத்தில் “வெள்ள அனர்த்தத்துக்கு உதவுவதற்காக எல்லோரும் ஒன்றிணைந்திருப்பதைப்போலவே தெரியும். அதிகம் சர்ச்சைகளில்லாமல் எல்லோருடைய உதவிப் பணிகளும் நடந்திருப்பதாகவும் கருதக்கூடும்.

ஆனால், உண்மை நிலை அப்படியல்ல.

வெள்ளப் பாதிப்பை அவரவர் (அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும்) தத்தமது அரசியல் தேவைகள், நலன்களின் அடிப்படையிலேயே பயன்படுத்த விளைந்துள்ளனர். இதற்கான நிகழ்ச்சி நிரல்களையும் உபாயங்களையும் ஒவ்வொரு தரப்பும் வகுத்தே செயற்பட்டிருக்கின்றன.

“வீழ்ந்தவரைத் தூக்கி விடுவதிலும் அரசியல் ஆதாயமா?” என விரும்பத்தகாத போட்டி நிலை ஏற்பட்டது. இந்தப் போட்டிக்கேற்ற வகையில் உள்ளுர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அரச உத்தியோகத்தர்களையும் பயன்படுத்திக் கொள்வதற்கு சில தரப்பினர் முயற்சித்திருக்கின்றனர்.

இது கிராம அபிவிருத்திச் சங்கம், விளையாட்டுக்கழகங்கள், மகளிர் அமைப்புகள் போன்றவற்றுக்குத் தலையிடியைக் கொடுத்துச்  சிரமங்களுக்குள்ளாக்கியது. பல இடங்களில் அரச உத்தியோகத்தர்களும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர். சில இடங்களில் உதவ வந்தோரை உத்தியோகத்தர்களும் பொது  அமைப்புகளும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

தமக்குச் சார்பாகச் செயற்பட வேண்டும் என அரசியல் கட்சிகளும் அரசியல் கட்சிகளுக்குப் பலம் சேர்க்கும் வகையில் உத்தியோகத்தர்களில் சிலரும் அமைப்புகளில் சிலவும் தாழ்நோக்குடன் செயற்பட்டதுமுண்டு.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை ஒழுங்கு முறைப்படி வழங்குவதில் ஏராளம் நெருக்கடிகளும் குழறுபடிகளும் நிகழ்ந்துள்ளன. இந்தக் குழப்பங்கள் அடுத்த கட்டமாக வெள்ளப்பாதிப்பை மதிப்பீடு செய்யும்போதும் நிகழ்வதற்கான வாய்ப்புகளுண்டு என்ற அச்சமேற்பட்டுள்ளது. இப்பொழுதே கிளிநொச்சி நகரை அண்மித்த சில கிராமசேவகர் பிரிவுகளில் பாரபட்சமான முறையில் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்திருக்கின்றனர்.

உண்மையில் வெள்ளப்பாதிப்புக்கான உதவித்திட்டங்கள் முறைப்படி ஒருங்கிணைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது நிவாரணப்பணிகளில் ஈடுபடுவோர் தாம் ஒன்றிணைந்திருக்க வேணும்.

ஏனெனில் இந்தப் பாதிப்பு தேசிய ரீதியில் இலங்கை முழுவதிலும் உணரப்பட்டது. அதைப்போல புலம்பெயர் தேசங்களிலும் இது கவனம் செலுத்தியது. ஆகவே உதவிப் பொருட்களும் உதவிகளும் பல வழிகளாலும் வரவுள்ளது என்பது ஆரம்பத்திலேயே தெரிந்தது.

இதற்கேற்ற வகையில் பாதிப்பு ஏற்பட்ட முதல் வாரத்திலேயே இதற்கான ஒருங்கிணைந்த உதவித்திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஒருமுகப்படுத்தப்பட்ட நிலையில் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கும். சரியான முறையில் உதவிகளும் இணைக்கப்பட்டிருக்கும். பிறகு பாரபட்சமில்லாமல் உதவிகளைச் செய்யக் கூடியதாக இருந்திருக்கும். சீரான வகையில் உதவி அணிகளும் பொருள் விநியோகமும் நடந்திருக்கும். இதற்கென ஒரு செயலணி உருவாக்கப்பட்டிருந்தால் அது இதைச் செம்மையாகச் செயற்படுத்தியிருக்கும்.

பொதுவாகவே இடர்காலத்தில் இன, மத, மொழி, பிரதேச, அரசியல் பேதங்களுக்கு அப்பால் உதவும் மனங்கள் முன்வருவதுண்டு. சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது நாடளாவிய ரீதியில் இத்தகைய உணர்வெழுச்சியும் ஒன்றிணைவும் உருவாகியது. பிறகு மலையகத்தில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள் ஏற்பட்டபோதும் இப்படி நாடு முழுவதிலுமிருந்து உதவுவோர் முன்வந்திருந்தனர். விடுதலைப்புலிகள் கூட மலையகத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தின்போது உதவிப்பொருட்களோடு அங்கே சென்றிருந்தனர் என்பதை நினைவிற் கொள்ளலாம்.

தொடரும்

Share:

Author: theneeweb