ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சபாநாயகர் – சபை முதல்வர் இடையில் வாக்குவாதம் நிலவியது. திகதி மாற்றப்பட்ட பிரேரணையை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது அதற்கான உரிமை உங்களுக்கு இல்லை எனச் சபை முதல்வர் சபையில் கூறினார். எனினும் சபாநாயகர் பிரேரணையை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சபை அமர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் ஷேகான் சேமசிங்க கேள்வி எழுப்பினார்.

அவர் கூறுகையில், இப்போது முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக சபைக்கு ஆற்றுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல:- இந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் திகதி 2018 ஆம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.எனத் தெரிவித்த போது  அதனை அப்போதே திருத்திவிட்டனர். என சபாநாயகர் தெரிவித்தார்.

பின் சபை முதல்வருக்கும் சபாநாயகருக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட வாக்குவாதத்தின் பின்னர் சபாநாயகர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குறித்த  நம்பிக்கையில்லா பிரேரணையை  ஏற்றுக்கொண்ட தாக தெரிவித்தார்.

Share:

Author: theneeweb