வெளிநாட்டு அகதிகளை தங்கவைக்க பௌத்த குருமார் கடும் எதிர்ப்பு

வவுனியாவில் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளை தங்க வைப்பதற்கு பௌத்த குருமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மடுக்கந்தை விகாராதிபதி தலைமையில் நகரசபை மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஓன்று இன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பௌத்த குருமார்,

இங்கு அகதிகளாக வந்திருப்பவர்கள் விபரங்கள் அரச அதிபருக்கோ, பிரதேச செயலாளருக்கோ தெரியவில்லை. அப்படியென்றால் யார் இவர்களை இங்கு அழைத்து வந்தார்கள். ஐ.எஸ் மற்றும்  தெளபிக் ஜமாத் அமைப்பினர்கள் கூட இவர்களூடாக உள்நுழைந்திருக்க கூடும் என  சந்தேகமுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், இங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலையில் புதிய பிரச்சினை இந்த மாவட்டத்தில் ஏற்படக் கூடாது. அதனால் வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்க வைக்க அனுமதிக்க முடியாது.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பாராளுமன்ற ஆணையாளர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், சாதகமான பதில் கிடைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பிக்குமார் தெரிவித்தனர்.

இது தொடர்பில், வவுனியா அரச அதிபர், வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடமும் மனு ஓன்றினை கையளித்தனர்.

இக் கலந்துரையாடலில் பௌத்த குருமார், போதகர், இந்து மதகுரு, வவுனியா நகர சபை தலைவர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உப தவிசாளர், நகரசபை உறுப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நீர்கொழும்பில் இருந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 35 அகதிகள் கடந்த சனிக்கிழமை இரவு முதல் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb